Monday, September 1, 2014

முஸ்லிம் இலக்கிய அடையாளத்தை முன்னெடுப்பதிலும் நான் திடமாக இருக்கின்றேன் – பசீர் சேகுதாவுத்

இலக்கியத்தின் நவீன வடிவங்களுடனும் புதிய வகையறைகளுடனும் கூடிய ஈடுபாடும் அர்ப்பணிப்பும் கொண்ட முஸ்லிம்களின் படைப்பிலக்கிய முயற்சிகள் யாவும் புதிய அடையாளத்தைப் பெறுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலத்தேவையும் அதற்கான கருத்தியலை கட்டியெழுப்ப வேண்டிய அவசியமும் இன்று ஏற்பட்டுள்ளது என்று முஸ்லிம் இலக்கியப் பிரகடனத்திற்கான முதலாவது உரையாடலைத் .தொடக்கி வைத்து அதற்குத் தலைமை தாங்கிய இலக்கியகர்த்தா அமைச்சர் பசீர் சேகுதாவுத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பசீர் சேகுதாவுத் அவர்களின் அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற இவ் உரையாடலில் எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் சார்பில் கலந்து கொண்டோரால் முஸ்லிம் இலக்கியப் பிரகடனத்திற்கான செயற்பாடுகள் குறித்த பல முடிவுகளும் எடுக்கப்பட்டன இதில் தொடர்ந்தும் உரையாற்றிய பசீர் சேகுதாவுத் கூறுகையில்,

அரசியல்வாதியாகவோ ஓர் அமைச்சராகவோ நான் இந்த அமர்வில் கலந்துகொள்ளவில்லை. மாறாக எழுத்தை நேசிக்கின்ற ஒருவனாக, ஒரு கவிஞனாக, ஒரு கதை சொல்லியாக எனக்குள் இருக்கும் இலக்கிய ஈடுபாட்டின் கார ணமாகவே நான் இதனுடன் இணை ந்திருக்கின்றேன். அரசியல் அடையாளத்தை முற்றாக விடுத்து இலக்கிய அடை யாளத்துடனேயே நான் இதற்குள் வெளிப்பட விரும்புகின்றேன். அதே நேரம் இஸ்லாமித் தமிழ் இலக்கியத்தை என்றும் நேசித்தவனாக அதனை உள்ளடக்கிய முஸ்லிம் இலக்கிய அடையாளத்தை ஒற்றுமையுடன் முன்னெடுப்பதிலும் நான் திடமாக இருக்கின்றேன்.

அதற்காக, எதிர்வருகின்ற ஆண்டில் முஸ்லிம் இலக்கிய மாநாட்டை கொழும்பில் பண்டார நாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் பெரிய அளவில் நடத்தவும், அதற்கு முன் எதிர்வருகின்ற மாதமளவில் கிழக்கிலே முஸ்லிம் இலக்கியப் பிரகட னத்தைச் செய்யவும் என்னாலான எல்லா உதவிகளையும் நான் வழங்கவும் அதற்கான செயற்பாடுகளில் ஒருவனாக இருந்து செயற்படவும் எனது அரசியலுக்கு அப்பால் விருப்பம் கொள்கின்றேன் என்பதையும் பiர் சேகுதாவுத் உறுதியோடு கூறினார்.

மேலும், முஸ்லிம் தேசப் பிரகடனம் போன்று இதன் செயற்பாடுகள், பிர கடனத்தோடு முடிந்துவிடாமல் பிரகடனத்தின் பின்னர் முஸ்லிம் இலக்கியத்தின் செயற்பாடுகள் உயிரோட்டமாக முன்னெடுக்கப்பட்டு அது வரலாற்றின் கைகளுக்கு முறையாகக் கையளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தன்னை ஒரு இலக்கியவாதியாகவே நிலைநிறுத்திக்கொண்டு முஸ்லிம் இலக்கியப் பிரகடனத்திற்கான ஆரம்ப உரையாடலை மிகவும் பொருத்தமாகத் தொடக்கிவைத்த பiர் சேகுதாவுத்தின் ஆரம்ப உரை முஸ்லிம் இலக்கிய அடை யாளத்திற்கு உறுதியான ஓர் எதிர்காலத்தை வெளிச்சமிடுவதாகவே இருந்தது. அரசியலும் அமைச்சுப் பதவியும் இல்லாத நிலையிலும் ஓர் இலக்கியவாதியாக அவர் முஸ்லிம் இலக்கியத்துடன் இறுதி வரை இருப்பார் என்ற நம்பிக்கையும் அவரது கருத்தில் வெளிப்பட்டது.

இந்த உரையாடலின் தொடர்ச்சியிலிருந்து இன்னும் பல முக்கிய இடங்களில் குறிப்பாக கிண்ணியா, அனுராதபுரம், வெலிகம, ஓட்டமாவடி போன்ற பிர தேசங்களை சேர்ந்த இலக்கியவாதிகளை யும் உள்ளடக்கிய உரையாடல்களையும் அதனோடு முஸ்லிம் இலக்கியப் பிரகடனத்தையும் செய்து முடிப்பதற்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மூத்த ஊடகவியலாளரான எம்ஏ.எம். நிலாம் கொழும்பில் இதற்கான இணைப்பாளராக செயற்பட்டார். முல்லை முஸ்ரிபா, மபாஹிர் மசூர் மெளலானா, சுஐப் எம். காசிம், கலைமகன் பைறூஸ், எம். சி. எம். நஜிமுடீன் போன்றவர்களும் இதில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

இந்த உரையாடலின் அவசியத்தை எமது இலக்கியத் தலைமுறைகள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். முஸ்லிம்களின் படைப்பிலக்கியம் குறித்த ஒரு விரிவான பார்வையும் அதற்கான விசாலமான ஒரு அடையாளமும் எமக்கு அவசியப்படுகின்றது. முஸ்லிம் கல்வி, முஸ்லிம் அரசியல், முஸ்லிம் மீடியா போன்று முஸ்லிம் இலக்கியம் என்ற தலைப்புக்குள் முஸ்லிம்களின் இலக்கிய வடிவங்களை உள்ளடக்கும் ஒரு முயற்சியும் முன்னெடுப்பும் முஸ்லிம் இலக்கிய அடையாளத்தினுள் இருக்கின்றது. இதனடிப்படையில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை விடுத்து முஸ்லிம் இலக்கிய வரைபடத்தை வரையவும் முடியாது, அதன் அடையாளத்தை உருவாக்கவும் முடியாது.

ஒன்றை மட்டும் நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் இது இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு வேறு பெயரை வைக்கும் முயற்சி அல்ல. இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு வேறு பெயரை வைக்கவும் முடியாது ஏனெனில் அதன் வரையறையும் வரைவிலக்கணமும் அத்தகையதாகவே இருக்கிறது. இதனை பேராசிரியர் மர்ஹும் எம்.எம்.உவைஸ் அவர்கள் மருதை முதல் வகுதை வரை எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

இஸ்லாத்தைப் பற்றித் தமிழில் எழுதும் பொழுது பெறப்படுவது இஸ்லாமியத் தமிழ் இலக்கியம். அது செய்யுள் நடையாக இருக்கலாம் அல்லது உரைநடையாக இருக்கலாம். இஸ்லாம், தமிழ், இலக்கியம் என்னும் மூன்று சொற்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் (பக்கம்-15) இந்த வரைவிலக்கணத்தின் பிரகாரம் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட இஸ்லாமியப் படைப்புகள் யார் எழுதினாலும் அது இஸ்லாமிய இலக்கியமாக உள்ளடக்கப்பட்டு வருகின்றது.

எனவே, இதற்கு வேறு பெயரை வைக்கவும் முடியாது அதேநேரம், இதனுள் முஸ்லிம்களின் ஏனைய நவீன வாழ்வியல் படைப்புகளை முழுமையாக உள்வாங்கவும் முடியாது. இந்தக் காரணத்தைக் கொண்டே முஸ்லிம் என்ற அடையாளத்தைக் கொண்டு எழுதுகின்ற விடயத்தை கருத்தில் எடுக்காது எழுதுகின்ற நபரை வைத்து முஸ்லிம் இலக்கியம் என்ற ஒரு பெரும் வட்டம் இடப்படுகிறது. இதில் பாதியாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் அமையும் என்பதே முஸ்லிம் இலக்கிய அடையாளத்தின் தோற்றப்படாகும்.

இத்தகைய முஸ்லிம் இலக்கிய அடையாளத்துடன் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தினை பாதுகாத்துக்கொண்டு அதன் தொடர்ச்சியை நிலை நிறுத்துவதில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தோடு அதன் தீவிர செயற்பாட்டாளர்களையும் உள்வாங்குவதற்கும் அவர்களுக்கான அவர்களுக்கான முக்கியத்துவங்களை வழங்குவதற்கும் மிகுந்த அவாவுடன் இருக்கின்றோம்.

இன்றுள்ள மூத்த தலைமுறையினர் மறைந்தால் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு தொடர்ச்சி இல்லாமலும் அதனைப் பாதுகாக்க புதிய தலைமுறையினரின் போதிய தேடல் இல்லாமலும் இருக்கின்ற நிலையில், இன்று இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் அக்கறை வைத்து செயற்படுகின்றவர்கள் அதனைப் பாதுகாக்கவும் அடுத்த தலைமுறைக்கு அதனைக் கையளிக்கவும் உள்ள பொருத்தமான ஒரு வழியாக முஸ்லிம் இலக்கிய அடையாளத்தைக் காண வேண்டும். இதனடிப்படையில் முஸ்லிம் இலக்கியச் செயற்பாடுகளின் முன்வரிசையில் இருக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் செயற்பாட்டாளர்களுக்கு இருக்கிறது.

முஸ்லிம் இலக்கியத்தின் ஓர் அங்கமாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் உள்வாங்கப்படுகின்ற போது, முஸ்லிம்களின் ஏனைய படைப்பிலக்கியங்களுக்குச் சமாந்தரமாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியமும் இருக்கும். அதனூடாக புதிய தலைமுறையினர் முஸ்லிம்களின் படைப்பிலங்கியங்களில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் முக்கியத்துவத்தை தேடவும் அதனை விளங்கவும் பல வாய்ப்புகள் ஏற்படும். இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் தீவிர செயற்பாடு கொண்டவர்களுக்கு அந்த இலக்கியத்தின் மீது உண்மையான அக்கறையும் அதற்கு ஒரு தொடர்ச்சி கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணமும் இருந்தால் அவர்கள் முஸ்லிம் இலக்கியத்தோடு இணைந்து செயற்படுவதே இன்றுள்ள காலத் தேவையாகும்.

இன்று இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்பது ஒரு சாராருக்குரிய இலக்கியமாகவும், மாநாடுகளை நடத்துகின்ற ஒரு இலக்கியமாகவும், எம்.எம்.உவைஸ் அவர்களின் நினைவு தினத்திற்கு ஒரு கட்டுரையை எழுதுகின்ற இலக்கியமாகவும் இருந்து வருவதனை நாம் அவதா னிக்கின்றோம். அதனை இன்றுள்ள முஸ்லிம்களின் நவீன படைப்புலகத்தோடு இணைத்து அது தொடர்பான புதிய ஆய்வுகளுக்கும் தேடல்களுக்கும் நாம் வழி சமைக்க வேண்டும் என்ற அவசியத்தை முஸ்லிம் இலக்கிய அடையாளம் மிகத் தெளிவாக வலியுறுத்துகிறது.

எனவே, இத்தகைய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தினையும் முழுமையாக அதன் பன்புகளோடு உள்வாங்கிக் கொண்டு முஸ்லிம்களின் முழுமையான படைப்புலகிற்கும் ஓர் அடையாளத்தை முஸ்லிம் இலக்கியம் என்ற பெயரில் நாங்கள் முன்வைக்கத் தொடரும் இத்தகைய உரையாடல்களில் முஸ்லிம் படைப்பாளிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைத்து வரவேண்டும் என்ற ஒரு சமூகத் தேவையை உங்களுக்குள்ளும் உணர்த்துகின்றோம்.

நவாஸ் சௌபி

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com