Wednesday, September 24, 2014

பேஸ்புக்கினூடாக மாணவிகளுக்கு இரகசிய அழைப்பு விடுத்த இளைஞன் கைது !!

முகப்புத்தகத்தினூடாக மாணவிகள் இருவருக்கு குறுந்தகவல் அனுப்பி, தன்னை சந்திக்க வருமாறு அச்சுறுத்தல் விடுத்த 22 வயது இளைஞன் ஒருவரை பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவி த்தது. இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,

அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் இலங்கை யுவதி யொருவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியிருந்தார். இந்நிலையில், அந்த யுவதியின் முகப்புத்தக (பேஸ்புக்) கணக்குக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ள சந்தேகநபர் ஒருவர், 'உன்னுடைய் புகைப்படம் என்னிடம் உள்ளது. அதை இணையதளத்தில் வெளியிடுவேன். நான் அப்படி செய்யாமலிருக்க வேண்டுமாயின் என்னை சந்திக்க வா' என்று குற்றிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு குறுந்தகவல் மற்றுமொறு மாணவியொருவருக்கும் கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்பான முறைப்பாடுகள் இரண்டு, பொலிஸ் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்றது. இது தொடர்பில் விசாரணை நடத்திய அவர்கள், பாணந்துறை பிரதேசத்திலிருந்து 22 வயதான இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.

இவ்விளைஞனுக்கு 17 வயதாக இருக்கும் போதே அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியொன்றை அவ்விளைஞனின் அப்பா வாங்கிக் கொடுத்துள்ளார். அத்துடன், காணியொன்றை விற்று பெற்றுக்கொண்ட பணத்திலிருந்து ஒரு தொகுதியை ஒதுக்கி, மடிகணினியொன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

சந்தேகநபரான இளைஞன், மேற்படி கையடக்கத் தொலைபேசி மற்றும் மடிகணினியை உபயோகித்து அரட்டையடித்து பல பெண்களை ஏமாற்றியுள்ளார் எனவும் அவரது பென் ட்ரைவில் கொழும்பிலுள்ள முன்னணி மகளிர் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகளுடன் அரட்டையடித்ததற்கான ஆதாரங்களை சேமித்து வைத்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை, முகப்புத்தகத்தினூடாக குறுந்தகவல்கள் அனுப்புவோருக்கு சொந்த விபரங்களை வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், முகப்புத்தகமோ அல்லது வேறு எந்தவொரு சமூக வலையமைப்பினூடாகவோ சந்திக்கும் நபர்கள் உண்மை நண்பர்கள் இல்லை என்பதை விளங்கிக்கொள்ளுமாறும் அவர்களிடையே ஏமாற்றுப் பேர்வளிகள், குற்றவாளிகள், காமுகர்கள் என்போர் அடங்கியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள், (குறிப்பாக பெண் பிள்ளைகள்) சமூக வலைத்தளங்களில் தொடர்புகளை வைத்திருக்கும் இனந்தெரியாத நபர்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும் என பொலிஸ் பேச்சாளர் மேலம் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com