Thursday, August 7, 2014

அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவுடன் நெருக்கமான இராணுவ-மூலோபாய உறவுகளுக்கு அழுத்தம் அளிக்கின்றனர். By Deepal Jayasekera

இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் பிரதம மந்திரி நரேந்திர மோடியின் புதிய அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைகள் நடத்த இந்தியா விஜயம் செய்துள்ளனர். அமெரிக்க-இந்திய மூலோபாய பேச்சுவார்த்தைகளின் இன்றைய ஆண்டு அமர்வில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி அவரது எதிர்தரப்பில் இருக்கும் சுஷ்மா சுவராஜ் உடன் இணைந்து தலைமை வகிக்க இந்தியா வந்தடைந்தார். அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் சக் ஹேகல் அடுத்த வாரம் வருகிறார்.

மோடி பதவியேற்றதற்குப் பின்னர் அமெரிக்காவின் மந்திரிசபை மட்டத்திலான அதிகாரிகளின் விஜயம் முதற்கொண்டு இந்த விஜயங்கள், இந்தியாவுடனான வாஷிங்டனின் மூலோபாய கூட்டுறவை ஊக்குவிக்கும் அதன் முயற்சிகளின் பாகமாக உள்ளன. புது டெல்லியை முற்றிலுமாக அதன் நிகழ்ச்சிநிரலோடு அணிசேர்க்க, ஒபாமா நிர்வாகம் ஏப்ரல்-மே மாதம் நடந்த இந்தியாவின் பொது தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசாங்க மாற்றத்தைப் பயன்படுத்த முனைந்து வருகிறது. (பார்க்கவும்: இந்திய தேர்தல்களுக்குப் பின்னர், அமெரிக்கா "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பிற்கான" பெரும் ஆதரவிற்கு அழுத்தம் அளிக்க உள்ளது)

இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சிக்கு (பிஜேபி) தலைமை வகிக்கும் மோடி, செப்டம்பரில் அமெரிக்கா விஜயம் செய்வாரென எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் அமெரிக்காவுடன் ஒரு மூலோபாய கூட்டுறவுக்கு பொறுப்பேற்றிருந்த போதினும், புது டெல்லி மற்றும் வாஷிங்டனில் உள்ள ஆளும் மேற்தட்டுக்களின் பிரிவுகள் அமெரிக்காவுடன் முற்றிலுமாக அதன் வரிசையில் வருவதில் அது தோல்வி அடைந்திருந்ததால், மற்றும் இந்தியாவின் "மூலோபாய சுயஅதிகாரத்தைத்" தக்க வைப்பதற்கான அதன் முயற்சிகளால் வெறுப்படைந்திருந்தனர்.

ஒரு வாஷிங்டன் சிந்தனைக்கூடமான Center for American Progress இல் திங்களன்று உரையாற்றுகையில், கெர்ரி மோடியினது சந்தை-சார்பு பொருளாதார வேலைத்திட்டத்தை அமோதித்தார். அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளை மேற்கோளிட்டுக் காட்டி அவர் கூறுகையில்: “இந்திய அரசாங்கம் தனியார் முனைவுகளுக்கு மிகப்பெரியளவில் இடம் வழங்கும் அதன் திட்டங்களை முன்வைத்தால், மூலதனம் பாய்வதற்கு இன்னும் அதிகமாக வெளிப்படைத்தன்மையை உருவாக்கினால், போட்டியை நெரிக்கும் மானியங்களை அது மட்டுப்படுத்தினால், பலமான அறிவுசார் சொத்துரிமைகளை அது வழங்கினால், என்னை நம்புங்கள், இன்னும் அதிகமான அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிற்குள் வரும்," என்றார்.

இருந்தாலும் கூட, சீனாவை இராஜாங்கரீதியிலும் பொருளாதாரரீதியிலும் பலவீனப்படுத்த மற்றும் இராணுவரீதியில் அதை சுற்றி வளைக்க நோக்கங்கொண்ட ஆசியாவை நோக்கிய அதன் "முன்னெடுப்பு" அல்லது "சமநிலைப்படுத்தல்" என்பதன் பாகமாக இந்தியாவுடனான நெருக்கமான இராணுவ-மூலோபாய உறவுகளே ஒபாமா நிர்வாகத்திற்கு மிகவும் முக்கியமாக இருப்பவை ஆகும். பெய்ஜிங்கிற்கு எதிராக கூட்டணிகள் மற்றும் நட்புறவுகளின் வாஷிங்டனினது வலையமைப்புக்குள், இந்தியாவை ஒருங்கிணைப்பதற்கு அழுத்தம் அளிக்க சீனாவுடன் இந்தியாவிற்கு நீண்டகாலமாக இருந்து வரும் விரோதத்தை அமெரிக்கா சுரண்டி உள்ளது.

இப்போது, உக்ரேன் மீது ரஷ்யாவுடன் அமெரிக்க மோதல் அதிகரித்து வருகின்ற நிலையில், அது இந்தியாவை மாஸ்கோவிற்கு எதிரான வரிசையில் நிறுத்தவும் விரும்புகிறது.

ஜூலை 24இல் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரங்களுக்கான கமிட்டியின் முன்னால் விளக்கமளிக்கையில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை வெளியுறவுத்துறை செயலர் நிசா தேசாய் பிஸ்வால் இந்தியாவின் முக்கியத்துவத்தை உயர்த்திக் காட்டினார். அவர், “நமது நட்புறவை மீண்டும் பலப்படுத்த அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு ஒரு வரலாற்று வாய்ப்பாக" மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதைப் புகழ்ந்துரைத்ததோடு, ஆசியாவை நோக்கிய ஒமாபாவின் சமநிலைப்படுத்தலில் இந்தியாவால் ஒரு "முக்கிய பாத்திரம்" வகிக்க முடியுமென அறிவித்தார்.

பிஸ்வால் தெரிவிக்கையில், “ஒரு பிராந்திய மற்றும் உலகளாவிய சக்தியாக" இந்தியா "உயர்வதும், மற்றும் அதன் பொருளாதார மற்றும் மூலோபாய வளர்ச்சியும், அமெரிக்க நலனில் ஆழ்ந்துள்ளது," என்றார். அந்த பரிந்துரைக்கப்பட்ட நட்புறவின் பரந்த பாய்ச்சலை விவரித்து குறிப்பிடுகையில், அவர் "ஆசிய நிலப்பகுதி முழுவதுமே எங்களின் ஒருங்கிணைந்த மூலோபாய நலன்களின் குவிமையமாகும் ... இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதிலும் எங்களின் பகிர்ந்து கொள்ளப்பட்ட நலன்களை முன்னெடுக்க நாங்கள் இந்தியாவுடன் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கிலும் பரந்தவொரு கூட்டுறவைக் காண்கிறோம்," என்றார்.

“எங்ளின் நட்புறவில் இராணுவ ஒத்துழைப்பு தொடர்ந்து ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, அது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இந்தியாவிற்கான செயலர் ஹேகலின் விஜயத்திற்கு அடிகோடிட உதவும்," என்பதையும் பிஸ்வால் சேர்த்துக் கொண்டார். மலபார் ஜலசந்தியில் அதேநாளில் தொடங்கிய ஜப்பான் மற்றும் இந்தியாவின் கூட்டு கடற்படை ஒத்திகையை அவர், அது “நமது முத்தரப்பு கூட்டுறவுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகும், மற்றும் அமெரிக்க-இந்திய ஜப்பான் முத்தரப்பு பேச்சுவார்த்தைகளின் ஒரு வெளிப்பாடாகும்," என்று கூறி வரவேற்றார்.

அமெரிக்கா மற்றும் ஜப்பான் இரண்டினோடும் தனித்தனியாக இந்தியா வழக்கமாக இருதரப்பு இராணுவ ஒத்திகைகளை நடத்தி உள்ளது, ஆனால் சீனாவிற்கு எதிராக மிக பகிரங்கமாக வரிசையில் நிற்காத விதத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக முத்தரப்பு யுத்த ஒத்திகைகளை தவிர்த்துள்ளது.

மோடி அரசாங்கம் "அதிகாரத்துவ இடையூறுகளைக் கடந்து வருவதிலும், இராணுவத்துறை வர்த்தகத்தையும் கூட்டு-உற்பத்தி மற்றும் கூட்டு-அபிவிருத்திக்கான வாய்ப்புகளை அதிகரிக்க வழியைத் திறந்துவிடுவதிலும்" வெற்றியடையும் என்று பிஸ்வால் நம்பிக்கையை வெளியிட்டார். புது டெல்லியின் பிரதான ஆயுத வினியோகஸ்தராக விளங்கும் ரஷ்யாவை கீழறுத்து, அமெரிக்கா இந்தியாவிற்கு அதன் இராணுவ விற்பனைகளை விரிவாக்க பார்த்து வருகிறது.

அமெரிக்க செனட்டின் வெளியுறவுகளுக்கான கமிட்டிக்கு அளித்த வெறொரு விளக்கத்தில் பிஸ்வால், இந்தியாவை வாஷிங்டன் ஊக்குவிப்பது சீனாவை எதிர்கொள்வதற்கான முயற்சியாகும் என்பதை உறுதிப்படுத்தினார். “இந்தியாவின் உயர்வு ஏதோவொரு வழியில் சீனா மீது, சீனாவின் சொந்த வளர்ச்சியில் மற்றும் அப்பிராந்தியத்தில் சீனாவின் சொந்த நடவடிக்கையின் மீது செல்வாக்கு செலுத்த செல்கிறது," என்று அவர் தெரிவித்தார்.

அதே செனட் விசாரணையில், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியவிற்கான அமெரிக்க இராணுவ துணை உதவி செயலர் அமி சீரைட், ஜப்பானுடன் மற்றும் வியட்நாம் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் நெருக்கமான பொருளாதார மற்றும் இராணுவ உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதை நோக்கமாக கொண்ட இந்தியாவின் "கிழக்கை நோக்கிய" கொள்கையை எடுத்துக்காட்டினார். “நாம் அதை சாதகமாக்கிக்கொள்ள விரும்புகிறோம் ... அந்த நடவடிக்கைக்கு நாம் ஒத்துழைக்க விரும்புகிறோம்," என்று அந்த பெண்மணி தெரிவித்தார். சீனா உடனான அவற்றின் பிராந்திய பிரச்சினைகளில் இன்னும் அதிக ஆக்ரோஷ நிலைப்பாட்டை எடுக்க ஜப்பானையும், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸையும் அமெரிக்கா ஆக்கபூர்வமாக ஊக்குவித்து வந்துள்ளது.

சபை கமிட்டி விசாரணையின் தலைவரான காங்கிரஸ் உறுப்பினர் ஸ்டீவ் சாபோட் குறைகளை முன்வைத்தார்: “கிரிமியாவில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு புது டெல்லி மிக வெளிப்படையாக ஒப்புதல் அளித்துள்ளதோடு, கிரிமியாவின் சட்டபூர்வதன்மையில் மாஸ்கோவின் நலன்கள் இருப்பதைக் கூறி, அது மாஸ்கோ மீதான தடைகளை பலமாக எதிர்த்தது," என்றவர் தெரிவித்தார். “சான்றாக, இந்த அதிகரித்துவரும் நெருக்கடியில் இந்தியாவின் ஆதரவை நம்மால் பெற முடிவில்லை என்றால், முக்கிய புவிசார் அரசியல் சவால்களில் இந்தியா ஒரு நம்பகமான கூட்டாளியாக இருக்குமென்று அமெரிக்காவால் நம்ப முடியுமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார். "ரஷ்யா சம்பந்தமான இந்த விடயத்தில்" இந்தியாவின் "மனோபாவம், குறைந்தபட்சமாக கூறுவதானால், மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது," என்றவர் அறிவித்தார்.

அதற்கு பிஸ்வால் விடையளிக்கையில், “உலகெங்கிலும் உள்ள நண்பர்களோடு என்ன செய்கிறோமா அதேபோல, நமது முன்னோக்கு குறித்து, குறிப்பாக உக்ரேனில் ரஷ்ய ஆக்கிரமிப்பு சம்பந்தமாகவும், மற்றும் அது கொண்டிருக்கும் தாக்கங்கள் குறித்தும், நமது இந்திய நண்பர்களுக்கும் நாம் அந்த புள்ளியை எடுத்துக்காட்டுகிறோம்," என்றார்.

தெளிவாக, ரஷ்யாவிற்கு எதிரானவை உட்பட, வாஷிங்டனின் சதித்திட்டங்கள் மற்றும் ஆத்திரமூட்டல்களில் இந்தியாவின் ஒத்துழைப்புக்காக ஒபாமா நிர்வாகம் அழுத்தம் அளித்து வருகிறது. “இந்த முக்கிய பிரச்சினைகள் மற்றும் சவால்கள்" மீதான கலந்துரையாடல்களுக்குப் பின்னர், பிஸ்வால் அறிவிக்கையில், “நமது முன்னோக்குகளுக்கு நெருக்கமாக நம்மோடு கொண்டு வர முடியும், மற்றும் சாத்தியமான அளவிற்கு முயற்சிகளை ஒருங்கிணைக்க முடியுமென நாங்கள் நம்புகிறோம்," என்றார்.

ரஷ்யாவிற்கு எதிராக இந்தியாவை வரிசையில் நிறுத்துவதானது, சீனாவிற்கு எதிராக நிறுத்துவதையும் விட மிகவும் கடினமானதென்று நிரூபிக்கும். பனிப்போர் காலம் முழுவதும் பெரும்பாலும், இந்தியாவின் பிரதான பிராந்திய விரோதியான பாகிஸ்தானோடு பலமான தொடர்புகளை வைத்திருந்த சீனாவிற்கு எதிராக புது டெல்லி முன்னாள் சோவியத் ஒன்றியத்தோடு அணி சேர்ந்திருந்தது. இந்திய ஸ்தாபகத்தின் பிரிவுகள் இன்னமும் ரஷ்யாவை இந்தியாவின் "எல்லா காலத்திற்குமான நண்பனாக" கருதுவதோடு, அது இந்தியாவின் முதன்மை இராணுவ வினியோகஸ்தராகவும் இருந்து வருகிறது.

இருந்தாலும் கூட, வாஷிங்டன் தெளிவாக திருப்தி அடைந்துவிடவில்லை. யுரேஷிய நிலப்பகுதி முழுவதிலும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கான அதன் ஒட்டுமொத்த மூலோபாயத்தின் பாகமாக, ரஷ்யா உடனான இந்தியாவின் உறவுகளைப் பலவீனப்படுத்த அது ஒவ்வொரு வாய்ப்பையும் பிரயோகிப்பதற்கு தீர்க்கமாக உள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com