Thursday, August 7, 2014

நாட்டின் பல பகுதிகளில் கடும் வறட்சி! வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கில் மாத்திரமல்லாது கிழக்கு மற்றும் தெற்கிலும் நிலவும் வறட்சியூடனான காலநிலையால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக குளங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதுடன், சிறு குளங்கள் முற்றாக வற்றியுள்ளன. இதனால், குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதுடன், விவசாய நடவடிக்கைகள் மற்றும் நன்னீர் மீன்பிடி நடவடிக்கைகளும் பாதிக்கப்ட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் கடும் வறட்சி நிலவுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலான குளங்கள் முற்றாக வற்றியுள்ளதுடன், சில குளங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது.

நாட்டின் பல பகுதிகள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, மத்திய மலைநாடு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் இடைக்கிடையே மழை பெய்துவருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம் நிலவுகின்றது. பிரதான வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடுவது கடினமாக காணப்படுவதோடு பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருகின்றது.

ஹட்டன் – நுவரெலியா, கம்பளை – நுவரெலியா, வெலிமடை – நுவரெலியா, அட்டன் – நுவரெலியா, அட்டன் – கொழும்பு, ஆகிய வீதிகளில் மாலை மற்றும் காலை வேளைகளில் அதிக பனிமூட்டம் நிலவுவதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி.குமாரசரி தெரிவிக்கின்றார். இந்த வீதிகளை பயன்படுத்துவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய மலைநாட்டில் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டுகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளில் இடைக்கிடையே கடும் காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

(க.கிஷாந்தன்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com