Thursday, August 7, 2014

“ஞானசாரவுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை உங்களுக்கு இல்லை” - அமைச்சர் ராஜித்தவுக்கு ஜனாதிபதி மகிந்த

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரினால் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு ரூபா ஒரு பில்லியன் நட்டஈடு வேண்டி வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிடுகிறார்.

இன்று பிற்பகல் கொழும்பில் தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தபோது இதுதொடர்பில் தான் கலந்தாலோசித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வேளை ஜனாதிபதி தன்னிடம் “ராஜித்த, அதற்கெல்லாம் நீங்கள் பதிலளிக்கத் தேவையில்லை… ” வழக்குத் தாக்கல் செய்யுங்கள் எனக் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது ஒரு சூழ்ச்சி எனவும், தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தன்னிடம் கூறியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தன்மீது சுமத்தப்படுகின்ற குற்றங்களுக்கு விடையளிக்குமுகமாக தான் ஊடகச் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து பின்னர் நீதிமன்றில் ஞானசாரருக்கு எதிராக ஆவன செய்யவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதற்கேற்ப, தான் ஞானசார தேரரிடம் ரூபா ஒரு பில்லியன் நட்டஈடு கேட்டு வழக்குத் தொடரவுள்ளதாகவும், வழக்கில் வெற்றிபெற்றால் அந்தத் தொகையில் வழக்கறிஞருக்குரிய பணம் போக அடுத்த பணத்தை மீனவ சம்மேளத்திற்கு வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தன்னிடம் எத்தனை வீடுகள் இருக்கின்றன என ஞானசார தேரர் வினவுகின்றார். தன்னிடம் 1983 ஆம் ஆண்டு நிர்மாணித்த ஒரேயொரு வீடு மாத்திரமே இருக்கின்றது. அண்மையில் தனக்குச் சொந்தமான வாகனத்தை விற்று காணியொன்று வாங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடற்கரையில் இருந்துகொண்டு கோடீஸ்வரனாகிய முறைபற்றி பரிசுத்த புத்த சமயத்தைச் சார்ந்தவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர்களும் ஏனைய மதத்தவர்களும் இதுதொடர்பில் கருத்துரைக்கவுள்ளதாகவும், ஆதரவு நல்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எதுஎவ்வாறாயினும், ஞானசார அமைச்சர் ராஜித்த தொடர்பில் கூறிப்பிடும் குற்றாச்சாட்டுக்களுக்குத் தேவையான தகவல்களை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே வழங்குகின்றார் என “லங்கா நிவ்ஸ் வெப்” நேற்று முன் தினம் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

(கலைமகன் பைரூஸ்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com