Friday, July 18, 2014

சுட்டுவீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு பின்னாலேயே மோடியின் விமானம் வந்தது!

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக பயணிகள் விமானம், நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்டது. அந்த விமானம், உக்ரைன் நாட்டு வான் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, திடீ ரென 'ராடார்' கருவியின் பார்வையில் இருந்து மறைந்தது.

சற்று நேரத்தில், விமானம் தீப்பிடித்தபடி, வானத்தில் இருந்து தரையில் விழுந்தது. மலேசிய விமானம் உக்ரைனின் கிழக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 298 பேர் உயிரிழந்தனர். விமானம் விபத்துக்குள்ளான பகுதியில்தான் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

விமானத்தை கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்திவிட்டர் என்று உக்ரைன் அரசு தரப்பு கூறியுள்ளது. எனினும் உக்ரைன் இராணுவம் தான் விமானத்தை வீழ்த்தி யுள்ளது என்று கிளர்ச்சியாளர்கள் தரப்பு கூறியுள்ளது.

இந்தநிலையில் உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் பின்னால் அதே வான்வழியில்தான் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பயணித்த விமானமும் வந்துள்ளது.

மலேசிய விமானம் ஏவுகணை தாக்குதலில் வீழ்த்தப்பட்டிருக்காவிட்டால் சம்பவம் நடந்த பகுதி வழியாகவே பிரதமர் மோடி பயணித்த ஏர் இந்தியா-001 விமானமும் சென்றிருக்கும் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் - ரஷ்யா எல்லையில் இருந்து 40 கி.மீ தொலைவில் டோரெஸ் எனும் இடத்தில் மலேசிய விமானம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது.

பிரதமர் நரேந்திர மோடி சென்ற ஏர் இந்தியா-001 விமானம் பிராங்ஃப்ர்ட் நகரில் இருந்து 11.22 (ஜி.எம்.டி) மணிக்கு புறப்பட்டது. மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட 1 மணி நேரத்தில் மோடியின் விமானமும் உக்ரைன் பிளைட் இன்பர்மேஷன் ரீஜனில் பறந்திருக்கும்.

மோடி சென்ற விமானத்திற்கு நிச்சயமாக எவ்வித ஆபத்தும் இல்லை என தெரிவித்த விமான அதிகாரி ஒருவர், சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் சென்ற அதே வான்வழியிலேயே மோடி விமானமும் சென்றிருக்கும். ஆனால், பைலட் சாதுர்யமாக யோசித்து பயணத்தடத்தை மாற்றியிருக்கிறார் என்றார்.

உக்ரைன் படைகளுக்கு எதிராக கடந்த சில மாதங்களாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் உக்ரைன் மீதான லிவைவ் வழித்தடம், சிம்ஃபெர்பூல் வழித்தடம் ஆகிய இரண்டு மார்க்கங்களிலேயே சென்று வந்தன.

ஆனால் கடந்த ஏப்ரலில் ஐ.நா விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட உத்தரவின் பேரில் அனைத்து விமானங்களும் லிவைவ் வழித்தடத்தை மட்டுமே பயன்படுத்தத் தொடங்கின. பாதுகாப்பு காரணங்களுக்காக ஐ.நா இந்த உத்தரவை பிறப்பித்தது. இந்நிலையில், பிரதமர் மோடி சென்ற விமானமும் லிவைவ் வழித்தடத்திலேயே சென்றுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com