Wednesday, July 30, 2014

தனி நாடு தேவை என்று ஊக்கப்படுத்தப்பட்டோம்! இது ஒரு தேவையற்ற யுத்தம் என பல காலத்தின் பின்புதான் உணர முடிந்தது!

பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா) நேர்காணலின் முழு வடிவம்!

கேள்வி: யுத்தத்திற்கு பின்னராக பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக பல்வேறு குற்றச் சாட்டுகள் இருந்து வருகின்றன இது தொடர்பில் தங்கள் கருத்து என்ன?

பொதுவாக இது முற்றுமுழுதாக தவறான ஒரு கருத்து. ஏனெனில் ஒரு யுத்தம் இடம்பெற்ற நாட்டில் உடனடியாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதென்பது ஒரு முடியாத விடயம். 30 வருடகாலமாக யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தற்போது 5 வருடங்கள் நிறைவுற்றி ருக்கின்றது. இந்த வருடங்களுக்குள் எமது அரசாங்கம் பல மாற்றங்களைக் ஏற்பட்டிருக்கின்றன.

பாரிய அளவிலான அபிவிருத்தி திட்டங்கள் - மக்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய வாய்ப்பு - சுதந்திரமாக கல்வி கற்கக் கூடிய வாயப்புகள் சுதந்திரமாக இலங்கையில் எந்த இடத்திற்கும் மூவின மக்களும் சென்றுவரக்கூடிய நிலைமைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

எமது வடக்கு கிழக்கு பிரதேசங்களை எடுத்துக் கொண்டால் எதுவித கைதுகள், இராணுவ கெடுபிடிகள், முற்றுகைகள் இல்லை. இன்று மிகவும் சிறந்த முறையில் இந்த மனித உரிமைகள் பேணுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. ஆனால் கடந்த யுத்த காலங்களில் பலர் காணாமல் போயிருக்கின்றார்கள். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

உண்மையில் யுத்தம் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இங்கிருந்த போராட்ட குழுக்களால் கூட பல இளைஞர்கள் கடத்தப்பட்டார்கள் கைது செய்யப்பட்டார்கள். போராடுவதற்காகக் கூட கொண்டு செல்லப்பட்டார்கள்.

மேலும் யுத்தங்கள் பல காட்டுப் பிரதேசங்களில் கூட இடம்பெற்றது. அங்கு பல உடல்கள் கைவிட்டுச் செல்லப்பட்டன. எனவே யார் யார் எங்கு காணாமற் போனார்கள் என்பதை திடமாகக் கூற முடியாது.

இன்று நாங்கள் ஒரு கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு தீர்மானித்திருக்கின்றோம் எல்.எல்.ஆர். சி என்ற ஒரு பொதுவான அமைப்பை உருவாக்கி அதனூடாக பலவிசாரணைகளை மேற்கொண்டு அதில் இன்று மக்கள் வெளிப்படையாகச் சென்று தங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்குரிய சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம்.

இதே போல் எமது இனப்பிரச்சனைகளை சிறந்த முறையில் பேசித் தீர்ப்பதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழுவினை ஏற்படுத்தி இருக்கின்றோம். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் அது புறக்கணிக்கப்பட்டு வருகின்றது அவர்களால் இதனைப் புறக்கணிப்பதன் மூலம் எதையும் வெல்ல முடியாத நிலை ஏற்படும். ஏனெனில் அவர்கள் அதில் பங்குபற்றாமலேயே பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்கள்.

இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு செயற்பாடாகும். ஆனால் நாம் அரசாங்கத்துடன் இருந்து கொண்டு எமது மக்களுக்காக பாரிய வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். வருடா வருடம் எமது மக்களின் வாழ்க்கைத்தரம், கல்வித்தரம் உயர்ந்து கொண்டிருக்கின்றது. எனவே இன்னும் இதனை நாங்கள் மேம்படுத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.

கேள்வி: புலம்பெயர் நாடுகளிலுள்ள அமைப்புகளின் செற்பாடுகள் பற்றி உங்கள் கருத்து என்ன?

அவர்கள் எங்களுடைய மக்கள் அதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் எமது உடன்பிறப்புகள்- சகோதரர்கள்தான் இன்று புலம்பெயர்ந்த மக்களாக வாழ்கின்றார்கள். புலம்பெயர்ந்த மக்களை நாம் ஒருபோதும் பிரித்துப் பார்க்க முடியாது. ஆனால் புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் சிறந்த தெளிவாக்கங்களை நாம் உருவாக்க வேண்டும்.

ஏனெனில் அவர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள் அவர்களுக்கு இங்கு நடக்கின்ற நடைமுறைகள் தெரியாமல் இருக்கலாம். எனவே இங்கிருக்கின்ற வெளிப்படைத் தன்மைகளை நாம் தெளிவாக்குகின்ற போதுதான் அவர்கள் சிறந்த விடயங்களை அறிந்து கொள்வார்கள்.

சில தமிழ் அரசியல் கட்சிகள் புலம் பெயர்ந்த மக்களை தவறாக வழிநடத்து கின்றார்கள் என்று தான் நான் கூறுவேன். ஏனெனில் இங்கு பல அட்டூழியங்கள் நடப்பதாகவும், இராணுவக் கெடுபிடிகள் இருப்பதாகவும், மக்கள் காணாமற் போவதாகவும் தவறான பிரச்சாரங்களை தற்போது மேற்கொண்டிருக்கின்றார்கள். எனவே இதனை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. என்னைப் பொருத்தமட்டில் இலங்கையில் மனித உரிமைகள் மிகவும் சிறந்த முறையில் வளர்ச்சியடைந்திருக்கின்றது என்றுதான் கூறுவேன்.

கேள்வி: இங்கு இனஅழிப்பு, இன அடக்கு முறைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறதே!

அண்மையில் முஸ்லிம் சிங்கள மக்களிடையில் தவறான புரிந்துணர்வு காரணாக முஸ்லிம் மக்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டது உண்மையான விடயம்தான். இதனை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் நம் உடனடியாக படைப்பிரிவினரை, காவல் துறையினரைப் அனுப்பி நிலைமையை கட்டுப்படுத்தினோம்.

ஜனாதிபதி அவர்கள் கூட அவ்விடத்திற்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் கலந்துரையாடி தீர்வைப் பெற்றுக்கொடுத்தார். அதெல்லாம் ஒரு பாரிய விடயமாக நாம் கருத முடியாது.

நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இவ்வாறான விடயங்கள் இடம்பெறுவதென்பது சாதாரணமான விடயம். ஆனாலும் சட்ட ஒழுங்குகள் சிறந்த முறையில் அந்த இடத்தில் பேணப்பட்டிருக்கின்றது. அசம்பாவிதங்கள் இடம்பெற்றிருந்தாலும் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றிருக்கின்றது. எனினும் இது போன்ற அசம்பாவிதங்கள் எதிர்காலத்தில் இடம்பெற விடக்கூடாது என்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்கின்றோம்.

கேள்வி: நாட்டில் மீள் நல்லிணக்க செயற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றது. அதில் உங்களின் பங்கு என்ன? அதற்காக மக்கள் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

உண்மையில் மீள் நல்லிணக்கம் என்பது மக்கள் மனங்களில் இருந்து உருவாக வேண்டும். ஏனெனில் முப்பது வருட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக புரையோடிப்போயிருந்த பிரச்சனை, இதன் நிமித்தம் மக்களின் மனங்களில் இருந்த காழ்ப்புணர்வுகள், நீக்கப்பட்டு மக்கள் மனங்களில் இருந்து உருவாக்கப்படவேண்டிய விடயம்.

தற்போது இது மெல்லமெல்ல உருவாகி வருவதை நாம் காண்கின்றோம். ஏனெனில் காலத்தின் மாற்றம் தான் இது ஏற்படுவதற்கு வாய்ப்பாக இருக்கும். இது குறுகிய காலத்தில் ஏற்படக்கூடிய விடயம் அல்ல. இதில் எனக்கும் பங்கிருக்கின்றது. எவ்வாறெனினில் நான் முதலில் தேசியநல்லிணக்க அமைச்சராகத்தான் இருந்தேன். எனவே இதில் நானும் ஒரு பங்குதாரன் என்பதை கூறிக்கொள்கின்றேன்.

கேள்வி: நீங்கள் போராளியாக இருந்து அரசியலுக்குள் வந்திருக்கின்றீர்கள் தற்போது அந்த மாற்றத்தினை எவ்வாறு உணர்கின்றீர்கள்?

அதில் பாரிய மாற்றங்கள் என்று கூறுவதற்கு இல்லை சொல்லப்போனால் முன்பு இருந்த அரசாங்கங்கள் விட்ட தவறின் காரணமாகத்தான் இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. அதாவது 83ம் ஆண்டு ஏற்பட்ட யூலைக்கலவரத்தின் பிற்பாடுதான்.

அந்நேரம் ஜே.ஆர் ஜெயவர்த்தன அவர்கள் நாட்டின் தலைவராக இருந்தார். அதன் பிற்பாடுதான் பாரிய யுத்தமாக இந்த நாட்டில் வெடித்தது. அதில் போராட வேண்டிய கடமை ஒன்றுக்கு நாம் தள்ளப்பட்டிருந்தோம்.தனி நாடு தேவை என்று ஊக்கப்படுத்தப்பட்டோம். இது ஒரு தேவையற்ற யுத்தம் என்று பல காலத்தின் பின்புதான் உணரக் கூடியதாக இருந்தது. எனவே இந்த யுத்தத்தை நிறுத்தி தற்போது நாங்கள் ஜனநாயக நீரோட்டத்திலே இணைந்து இன்று யுத்தத்தில் ஈடுபட்டதை விட பாரிய வேலைத்திட்டங்களை மக்களுக்கு நாங்கள் செய்து கொணடிருக்கின்றோம்.

இதனூடாக பல இன உறவுகள் ஏற்பட்டு இன்று பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை தற்போது மக்கள் நன்கு உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள் எனவே இதனை நாங்கள் நன்கு வளப்பத்தி மேலும் மேலும் மக்களுக்கு உதவியை வழங்க வேண்டும் என்பதைத்தான் நாம் எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி: இந்த விடயத்தில் புலம்பெயர் அமைப்புகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?
புலம்பெயர்ந்த மக்களிடம் நான் அன்பாகக் கேட்டுக் கொள்வது என்னவென்றால் இலங்கை ஒரு வன்முறையான நாடு அல்லது தவறான நாடாக சித்தரிக்கப்படுவதை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவையில்லை. அவர்கள் நினைத்தால் என்றும் வரலாம்.

புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களிடம் இருக்கின்ற பொருளாதார பலங்கள் அறிவியல் ரிதீயான வளங்களை அவர்கள் இங்கு வடக்கு கிழக்கிலே பிரயோகிக்க வேண்டும். மாறாக வெளிநாடுகளில் இருந்து கொண்டு சத்தம் போட்டுக் கொண்டு கதைத்துக் கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை.

இன்று வடக்கு கிழக்கில் பொருளாதார கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு வர்த்தகங்களை மேற்கொள்வதற்கு பல வாய்ப்புகள் இருக்கின்றது. இதில் அவர்கள் முதலீடுகளைச் செய்து எமது மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவார்களாக இருந்தால் யுத்தத்தில் இழந்த பல குறைபாடுகளை நாம் நீக்கக் கூடியாக இருக்கும். இதனை விடுத்து வீணே குற்றச்சாட்டுக்களை மாத்திரம் பிரயோகிப்பதில் எதுவித நன்மையும் பெறப் போவதில்லை.

கேள்வி: அபிவிருத்தியில் புலம்பெயர் உறவுகள் எவ்வாறு செயற்பட முடியும்?

அபிவிருத்தி என்பது இரண்டு விதமாக இருக்கின்றது. தற்போது வடக்கு கிழக்கில் அரசாங்கத்தினால் பாரிய அளவிலான கட்டுமான பணிகள் இடம்பெற்று ஒரு வகை அபிவிருத்தி மேற்கொள்ளபட்டு வருகின்றது.

ஆனால் தொழில் வாய்ப்பு என்ற ரீதியில் அரசாங்கத்தினால் முழுமையாக வழங்கமுடியாத நிலை ஏற்படும். ஏனெனில் அரசாங்கம் என்பது சட்டதிட்டங் களுக்கு அமைய கல்வித்தகமைகளுக்கு அமைய மாத்திரம் தான் தொழில் வாய்ப்புகளை வழங்க முடியும்.

இந்த யுத்தத்தின் காரணாக பல இளைஞர்கள் கல்வி கற்கின்ற வாய்ப்புகளை இழந்து தற்போது தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு சில தொழிற்சாலைகள்- தொழில்மையங்கள் வர்த்தக நிலையங்களை ஆரம்பிக்கின்ற போது தான் தொழில் வழங்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

இது போன்ற பாரிய முதலீடுகளை புலம் பெயர்ந்து வாழ்கின்ற மக்கள் மேற்கொள்வார்களாக இருந்தால் இங்கு பலமாற்றங்களை கொண்டுவரலாம் என நான் எதிர்பார்க்கின்றேன்.

கேள்வி: மீள்குடியேற்றம் தற்போது எந்த நிலைமையில் இருக்கின்றது?

மீள்குடியேற்றத்தைப் பொருத்த மட்டில் 98 வீதம் முடிவடைந்திருக்கின்றது. இரண்டு வீதமான பிரச்சனைகள் தற்போது இருக்கின்றது. அவற்றை மிக விரைவாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றோம் சம்பூர் போன்ற பிரதேசங்கள் ஏனைய பிரச்சனைகள் தற்போது முடிவடைந்திருக்கின்றது.

அந்த பிரதேசங்களில் இருக்கின்ற குறைபாடுகளை இணை அமைச்சுகளின் ஊடாக நிவர்த்தி செய்து வருகின்றோம். பொதுவாக மின்சார அமைச்சு, நீர்ப்பாசன அமைச்சு, விவசாய அமைச்சு, வீதிஅமைச்சு போன்ற அமைச்சுக்களினூடாக அந்தந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் பல முன்னேற்றங்கள் நடந்து கொணடிருக்கின்றன.

இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 45000 வீடுகள் யாழ்ப்பாணத்தில் கட்டப்படுகின்றதன. இதில் 4000 வீடுகள் தற்போது மட்டக்களப்பிலும் 1000 வீடுகள் திருகோணமலை மாவட்டத்திலும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அது போல் வீடு இழப்புகளுக்காக 1700 லட்சம் ரூபா நிதியும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தற்போது கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு லட்சம் ரூபா வீதம் வழங்கப்படுவதற்கும் திட்டமிட்டிருக்கின்றோம். இதே போன்று பல திட்டங்களை தற்போது எமது மக்களுக்காக நாம் செய்துக்கொண்டிருக்கிறோம்.

எனவே மிக விரைவில் அவர்கள் சிறந்த வாழ்க்கைக்குள் செல்வார்கள் என்பதை எதிர்பார்க்கின்றோம். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே பாராளுமன்ற தெரிவுக் குழுவினை ஏற்படுத்தி இருக்கின்றோம்.

இன்று யுத்தம் முடிவடைந்து அனைத்து மக்களுக்கும் சுதந்திரமாக வாழும் ஒரு சூழ்நிலை தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது சிங்கள தமிழ் முஸ்லிம்கள் சேர்ந்து வர்த்தகம் செய்கின்றார்கள். மூவின மக்களும் அனைத்து இடங்களுக்கும் செல்கின்றார்கள். அவ்வாறான சிறந்த புரிந்துணர்வு தற்போது ஏற்பட்டிருக்கின்றது என அவர் தெரிவித்தார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com