Wednesday, July 16, 2014

ஐவருக்கும் நுவரெலியா மேல் நீதிமன்றம் மரணதண்டனை! சம்பவத்தின் முழுவிபரம்!! (படங்கள்)

நுவரெலியாவில் 2000 ஆம் ஆண்டில் ஹோட்டல் உரிமை யாளர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படும் ஐவருக்கும் நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி ஈ.டபிள்யு.எம்.லலித் ஏக்கநாயக்க செவ்வாய்க்கிழமை (15.07.2014 அன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

குறித்த நகைக்கடையில் 756,714 ரூபாய் தங்க நகை கொள்ளையிட்டமை மற்றும் கொலை செய்யப்பட்டமைக்கான சான்றுகள் நிருபிக்கப்படதன் பின்னரே இத் தண்டனை வழங்கப்பட்டது.

இக்கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேலும், இருவரை விடுதலை செய்யுமாறும், தண்டனை வழங்கப்பட்டவர்களை கண்டி தும்பர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லுமாறும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

2000 ஆம் ஆண்டு பெப்ரவரி 12ஆம் திகதி மாலை நுவரெலியா புதிய கடைத் தெருவில் உள்ள பிரபல நகைக்டையான அருணா நகைக்கடையில் கொள்ளை யடிப்பதற்காக கும்பலொன்று அத்துமீறி நுழைந்துள்ளது. இக்கும்பலை தடுத்தும் நிறுத்தும் பொருட்டு கடையில் பணியாற்றியோரும், வாடிக்கையாளர்களாக வந்திருந்தோரும் அருகில் உள்ள ஹோட்டல் உரிமையாளர் ஒருவரும் முயற்சித்து உள்ளனர். தடுத்து நிறுத்த முற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்த ஹோட்டல் உரிமையாளர் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டார். சம்பவத்தின் போது கோவிந்தசாமி லோகேஸ்வர்ன் என்பவரே உயிரிழந்தவராவார்.

தப்பிச்சென்ற குற்றவாளிகளை நுவரெலியா பொலிஸார் பின்தொடர்ந்து சென்று வெலிமடை பிரதான வீதியில் அமைந்துள்ள பெலுங்கல எனும் இடத்தில் கைது செய்தனர். மொத்தம் 7 பேர் குற்றாவாளிகளாக இனம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதனிடையே இருவர் சிறைச்சாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

செவ்வாய்கிழமை (15) இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கைது செய்யப்பட்ட ரண் என்றி ஜயசேன, துவான் மோவின் பாருக் நிரபராதிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும் சிறைச்சாலையில் இருந்து தப்பிச்சென்ற ரலுவே தொன் எரன் சமிந்த, காதர் அஸ்வர் நஸ்லிம் ஆகிய இருவரை கண்டுபிடித்து தண்டனையை நிறைவேற்றுமாறும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த எதிரிசிங்க பெரும ஆராச்சிலாகே சஞ்சீவ நிசாந்த, மெதவல முதியான்சேலாகே உதயசான்த, ஆலிஎலகெதர புத்திக சாமப்பிரிய ஆகிய மூவருக்கும் தண்டனை வழங்கி தீர்பளிக்கப்பட்டது.

இதேவேளை தண்டனைபெற்ற கைதிகளில் ஒருவர் தமக்கு சிறைச்சாலையில் இடை இடையே தாக்குதல் நடத்தப்படுவதாகவும் தேவையற்ற விதத்தில் தனக்கு இடைஞ்சல்கள் ஏற்படுத்தப்படுவதாகவும் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து நீதிபதி இது தொடர்பாக தான் கவனம் செலுத்தவதாகவும் விடயம் தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு கடிதம் மூலம் அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த சிறைச்சாலை அதிகாரிகளிடம் தூக்குதண்டனை பெற்ற கைதிகள் தண்டனை நிறைவேற்றப்படும் வரை அவர்கள் மனிதர்களாக வாழ்வதற்கு இடமளிக்க வேண்டும் எனவும் இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் சிறைச்சாலையில் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் சார்பாக கான்ஸ்டபிள் லலித் தயாநந்த விக்கிரமசேகர நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.

(க.கிஷாந்தன்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com