Saturday, July 5, 2014

இலங்கையில் செயற்படுவதாய்க் கூறப்படுகின்ற முஸ்லிம் அடிப்படைவாதக் குழு எது?

பேருவலை, அளுத்கம நிகழ்வுடன் தொடர்புடைய விசாரணைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிகழ்வோடு மீண்டும் களத்தில் இறங்கியுள்ள அடுத்த பிரச்சினை அடிப்படைவாத அமைப்புக்கள் இலங்கையில் செயற்படுகின்றது என்ற கருதுகோளாகும். பொதுபல சேனா அமைப்பு அடிப்படைவாத அமைப்பு என முஸ்லிம் அமைப்பொன்றுதான் சுட்டிக் காட்டியது. அத்தோடு சிலர் பொதுபல சேனா அமைப்பு உட்பட பௌத்த அமைப்புக்கள் பலவற்றை அடிப்படைவாத அமைப்புக்கள் என விரல் நீட்டுகின்றன.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார் சில வருடங்களாக இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பு இரகசியமாக இயங்கிவருவதாகக் குற்றம் சாட்டிவருகின்றார். சில வருடங்களுக்கு முன்னர் சர்வதேச பொலிஸார் இலங்கை தொடர்பில் வெளியிட்ட கருத்தை அடிப்படையாக வைத்தே அவர் அவ்வாறு கூறுகின்றார். இலங்கையில் அடிப்படைவாத அமைப்பு இயங்கி வருவதாக சர்வதேச பொலிஸ் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தது. ஞானசாரர் இதுபற்றிக் குறிப்பிடும்போது, இலங்கையில் அடிப்படைவாத அமைப்பு இயங்குகின்றது என்பதற்கு தகுந்த சாட்சி இதுவாகும் எனக் குறிப்பிடுகின்றார்.

“அடிப்படைவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் இவைதான் என எங்களுக்கு தெளிவுறுத்த முடியுமாவது எவ்வாறென்றால், இந்தப் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை அதனுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது மட்டுமே. சர்வதேச பொலிஸால் முன்வைக்கப்பட்டுள்ள காரணங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போதும் அது தெட்டத் தெளிவாகின்றது. ஜிஹாத் கருதுகோளுடன் செயற்படுகின்ற வஹாபிஸ மத வாத அமைப்பு தற்போது நாடெங்கிலும் செயற்பட்டு வருகின்றது” என ஞானசாரர் குறிப்பிடுகிறார்.

ஞானசாரரின் விரல்கள் உயர்வது தௌஹீத் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, இஹ்வான் முஸ்லிம் போன்ற அமைப்புக்களை நோக்கியே. இவ்வமைப்புக்களின் அங்கத்தவர்கள் வெவ்வேறு முஸ்லிம் நாடுகளில் பயிற்சி பெற்று இலங்கைக்கு வந்துள்ளதாகவும், முஸ்லிம் சமுதாயத்தை அவர்களின் பிடிக்குள் சிக்கவைப்பதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுகின்றன எனவும் ஞானசாரர் குற்றம் சுமத்துகின்றார். அதற்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் பணம் திரட்டப்படுவதாகவும், இலங்கையை முஸ்லிம் நாடாக மாற்ற வேண்டும் எனும் குறிக்கோள் உடையவர்களாக அவர்கள் இருப்பதாகவும் தேரர் தெளிவுறுத்துகின்றார்.

இதேவேளை, ஜாதிக்க ஹெல உறுமயவும் பொதுபல சேனாவின் கருத்தினை ஒத்த கருத்தையே முன்வைக்கின்றது. எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு தோல்வியைத் தழுவிய பின்னர் முஸ்லிம் சமுதாயத்திலிருந்து முஸ்லிம் அடிப்படைவாத இயக்கம் தோன்றியுள்ளதாக அவ்விரு அமைப்புக்களும் ஒருமித்துக் கூறுகின்றன. ஏறத்தாள பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம்களிடமிருந்த நல்ல செயற்பாடுகள் பல மாற்றமடைந்துள்ளதாகவும், அறாபியர்களைப் போல ஆடை ஆபரணங்கள் கூட மாற்றமடைந்துள்ளதாகவும் ஜாத்திக்க ஹெல உறுமய குறிப்பிடுகின்றது. அதற்கான காரணம் அடிப்படைவாதத்தின் தலையீடே எனவும் குற்றம் சாட்டுகின்றது ஹெல உறுமய. இலங்கையிலிருந்து விலகியிருக்கின்ற ஒரு குழுவாகவே இந்த அடிப்படைவாத அமைப்பு செயற்படுவதாகவும், இதனால் சமுதாயத்தில் பாரிய பிரிவினை ஏற்பட்டுள்ளதாகவும் ஹெல உறுமய தெளிவுறுத்துகின்றது. அவ்வாறு சமூகத்தில் ஏற்பட்டுள்ள பிளவு ஏக காலத்தில் பிரிவினைவாதத்தின்பால் தள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதில் அசையாத நம்பிக்கை இருப்பதாகவும் ஹெல உறுமய கூறுகின்றது.

“முஸ்லிம் சமூகத்தில் இதற்கு முன்னர் முஸ்லிம் அரசியல் தலைவர்களே இருந்தார்கள். இந்த முஸ்லிம் தலைவர்கள்தான் முஸ்லிம் சமூகத்திற்கு ஒவ்வொன்றையும் திணித்தார்கள். அன்று அஷ்ரஃப் இருந்தார். இன்று ஹக்கீம், ரிஷாத் பதியுத்தீன், அஸாத் ஸாலி போன்ற அரசியல் தலைவர்கள் இருக்கின்றார்கள். என்றாலும், இன்று அரசியல் தலைவர்களால் சமுதாயத்திற்குள்ள தலையீடு மிகக் குறைவு. இன்று அதற்குப் பதிலாக முஸ்லிம் சமுதாயத்தில் இன்று அதிகம் தலையிடுவது அடிப்படைவாத மத அமைப்பே. இவ்வமைப்புக்களில் இருப்பவர்கள் யார் என்பது பற்றி எங்கள் யாருக்கும் தெரியாது. அதன் தலைவர்கள் பற்றி இரகசியம் காக்கப்படுகின்றது. ” என ஜாத்திக ஹெல உறுமயவின் பிரச்சாரச் செயலாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குற்றம் சாட்டுகின்றார்.

சென்ற சில வாரங்களுக்கு முன்னர் பொதுபல சேனாவுடன் பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டவர்களும் இந்த அடிப்படைவாதிகளே. அது பாரிய அளவில் கிழக்கு மாகாணத்தில் செயற்படுவதாகவும், அதற்கு அடுத்ததாக புத்தளம், பேருவலை போன்ற இடங்களை மத்திய நிலையங்களாகக் கொண்டு அது இயங்குவதாகவும் வர்ணசிங்க தெளிவுறுத்துகின்றார்.

“இந்த அடிப்படைவாத அமைப்பானது அவர்களுக்குக் கிடைக்கும் பணத் தொகையுடனேயே இயங்குகின்றது. இந்த அடிப்படைவாதிகளுக்கு வெளிநாட்டு உதவி மடைதிறந்து கொண்டு வருகின்றது. அதேபோல, தற்போது சரணாகதிகளாக சிலர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து சிலர் வெளிநாடுகளிலுள்ளவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்படுகின்றார்கள். இண்டர்போல் எனும் சர்வதேச பொலிஸ் குறிப்பிடுவது போல, அவர்கள் இலங்கையை ஒரு மத்திய நிலையமாகக் கொண்டு செயற்படுகின்றார்கள். இலங்கையை அவர்களின் பாதுகாப்பிடமாக்க் கொண்டுள்ள அவர்கள் நிசாப்தமாக தங்கள் கருமத்தைச் சரிவரச் செய்துகொண்டு செல்கிறார்கள். தப்லீக் ஜமாஅத்தினர் கிழக்கு மாகாண பல்கலைக்கழத்திற்கு புதிதாக வந்து சேர்ந்த 800 மேற்பட்ட முஸ்லிம் மாணவர்களுக்கு, ஏனைய மதத்தவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படக் கூடாது எனக் கட்டளையிட்டுள்ளது. இந்த அமைப்பானது இஸ்லாமிய சரீஆவுக்கு உட்பட்டு தனது பணியைச் செய்கின்றதா என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் பார்க்காமல் இருக்கின்றது. இது கவலைக்கிடமான விடயமாகும்” எனவும் வர்ணசிங்க மேலும் குற்றம் சுமத்துகின்றார்.

இந்த அடிப்படைவாத அமைப்பு சமுதாயத்தின் இருப்புக்கும் நல்வாழ்வுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் அவை தடை செய்யப்பட வேண்டும் எனவும், இது தொடர்பில் அரசாங்கமும், புலனாய்வுப் பிரிவினரும் ஆராய்வது கடமை எனவும் அவர் தெளிவுறுத்துகின்றார்.

“இவ்வமைப்புக்களின் செயற்பாடுகள் நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால்தான் அவற்றைத் தடைசெய்யுமாறு நாங்கள் கோருகின்றோம்.” என கலகொடஅத்தே ஞானசாரர் குறிப்பிட்டுள்ளார். “இந்த அடிப்படைவாத அமைப்பு மிகவும் சூட்சுமமாக செயற்படுகின்றது. இது தொடர்பில் நாங்கள் மிகவும் அகிம்சை வழியில் சுட்டிக் காட்டும்போது, சிலர் எங்களுக்கு அடிப்படைவாதிகள் நீங்கள்தான் என முத்திரை குத்துகின்றார்கள். ஆயினும் அவர்கள் இந்த அடிப்படைவாதிகளுக்கு எதிராக செயற்படுவதில்லை. இந்தப் பிரச்சினையானது இன்னும் பூதகரமாக மாறுவதற்கு முன் இது தொடர்பில் நாங்கள் சொல்வது பற்றி சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இந்த “ஹாமுதுரு” சொல்வது உண்மையா பொய்யா என தேடிப் பார்க்க வேண்டும்”

பொதுபல சேனாவினால் முன்வைக்கப்பட்டுள்ள இக்கருத்துக்கள் தொடர்பில் சிறிதளவாகவேனும் இன்று பொறுப்புச் சொல்லவேண்டியவர்கள் செயற்படுகின்றார்கள் எனவும் ஞானசார குறிப்பிடுகிறார்.

பொதுபல சேனா உள்ளிட்ட இன்னும் சில அமைப்புக்கள் இந்த அடிப்படைவாதிகளுக்கு எதிராக செயற்படும் போது, சிலர் பொதுபல சேனாவின் பக்கமும் விரல் நீட்டுவதற்கான காரணம் அதுவும் ஒரு அடிப்படைவாத அமைப்பு என்று குற்றம் சுமத்தியே. பொதுமக்களை உசுப்பேற்றி பொதுபல சேனா அடிப்படைவாத அமைப்பாக செயற்படுவதாக குற்றம் சுமத்துகின்றார் மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் ஸாலி. அளுத்கம, பேருவலை நிகழ்வில் சிங்கள மக்கள் வெகுண்டெழக் கூடிய முறையில் செயற்பட்ட பொதுபல சேனா அடிப்படைவாத அமைப்பு என அவர் குற்றம் சுமத்துகின்றார்.

பொதுபல சேனாவின் குற்றச்சாட்டுக்கு உள்ளாகின்ற தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராஸிக் என்பவரிடமும் நாங்கள் இது தொடர்பில் வினவினோம். தங்களது அமைப்பு அகிம்சைவாத அமைப்பு என அவர் பதிலளித்தார். இரத்தம் வழங்கும் முகாமினை நடாத்தும் நாம், சமூக சேவைகளில் ஈடுபடுகின்ற நாம் அரசாங்கத்திற்கு எதிராக ஒருபோதும் செயற்படுவதில்லை என குறிப்பிட்டார். என்றாலும், முஸ்லிம் பள்ளிகளில் பொதுமக்களுக்கு உபதேசிக்கின்ற விடயங்களை விடவும் வித்தியாசமான முறையில் தாங்கள் பொதுமக்களுக்கு உபதேசிப்பதாக அவர் ஏற்றுக் கொண்டார். தற்போதுள்ள இஸ்லாம் பரிசுத்தமான கொள்கையுடையது அல்ல எனவும், கால மாற்றத்திற்கேற்ப மாறிவந்த நவீன புதுமைகள் புகுந்துள்ளன எனவும் குறிப்பிடுகின்ற அவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய பரிசுத்த மார்க்கத்தின்பால் தாங்கள் செல்வதாகவும் குறிப்பிட்டார். ஆயினும், நாட்டிலுள்ள சட்டத்திற்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் தாங்கள் ஒருபோதும் மேற்கொள்வதில்லை எனவும் தெளிவுறுத்தினார்.

நாட்டின் பாதுகாப்புக்கு, சமாதானத்திற்கு சவாலாக முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பு செயற்படுவதாயின் அது தொடர்பில் சட்டரீதியாக முறைப்பாடுகள் ஏதேனும் குறித்த நிறுவனங்களுக்கு அனுப்பிவைத்திருக்கின்றீர்களா? என பொதுபல சேனா அமைப்பிடம் வினவினோம். பொதுபல சேனா பொலிஸிற்குச் சென்று வேறாக முறைப்பாடு செய்யாதவிடத்தும், தேவையான இடங்களுக்கு சென்று, அதுதொடர்பில் தெளிவுறுத்தியுள்ளதாக ஞானசாரர் குறிப்பிட்டார். பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரைச் சந்தித்து இதுதொடர்பில் உரையாடி அவர்களின் பார்வையை இப்பக்கம் திருப்பியுள்ளேன் எனக் கூறினார். தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய இந்த அடிப்படைவாத அமைப்புப் பற்றி செயற்படும்போது, முறைப்பாடுகள் வரும்வரை பார்த்திருக்க வேண்டிய தேவை இல்லை எனவும் ஞானசாரர் குறிப்பிடுகிறார்.

பொதுபல சேனா வேறாக முறைப்பாடு செய்யாதவிடத்தும், மதப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட விசேட பொலிஸ் பிரிவுக்கு மத ரீதியான பிளவுகள் 64 இன் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அடிப்படைவாத அமைப்பு பற்றிய 42 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அது தவிர, தாக்குதல் தொடர்பிலான 22 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. மத பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட பொலிஸ் பிரிவு இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது, இவற்றில் 10 முறைப்பாடுகளின் விசாரணைகள் முடிவடைந்துள்ளன எனக் குறிப்பிடுகின்றது. பௌத்த அமைப்புக்கள், தனியார் மற்றும் ஏனைய மதங்களுடன் தொடர்புடைய அமைப்புக்களிலிருந்தும், தனியாரிடமிருந்தும் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

கடந்த சில வாரங்களாக ஆரம்பமாகியுள்ள மதப் பிளவு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கின்ற பலரும், பொதுபல சேனா குறிப்பிடுவது போன்றதொரு முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பு நாட்டினுள்ளே இருக்குமாயின் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றுதான் கூறுகின்றார்கள். அப்போது ஏனைய அமைப்புக்களின் சட்டத்தை கையில் எடுத்து செயற்படாமலிருக்குமான என தர்க்கிக்க இடமுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த தர்க்கம் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்தைத் தெரிந்துகொள்வதற்காக நாங்கள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் வினா தொடுத்தோம்.

பொதுபல சேனா என்பதும் இன்னொரு அமைப்பு என்பதால் அவர்கள் சொல்வது போல அரசாங்கத்திற்கு ஆட முடியாது என அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் பொதுபல சேனா அமைப்பின் கருத்துக்களை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனைய மத அமைப்புக்களின் கருத்துக்களையும் கருத்திற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அவ்வாறே, இதுதொடர்பில் மகாநாயக்க தேரர்களின் என்னதான் சொல்கிறார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். தற்போது இந்த விடயங்கள் ஒவ்வொரு நிகழ்வுகளின் அடிப்படையிலேயே முன்வைக்கப்படுகின்றது. இனி அவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறும்போது அது தொடர்பில் விசாரணை நடாத்துமாறு குறித்த பிரிவுகளுக்கு நாங்கள் ஆலோசனை வழங்குகின்றோம். அது தொடர்பில் பரிசீலிக்கப்படுகின்றன. இது தொடர்பில் அரசாங்கம் மௌனியாக இருக்கின்றது என்று மட்டும் சொல்லவியலாது. அடுத்தது, அரசாங்கம் ஒருபோதும் அடிப்படைவாதத்திற்கு இடமளிக்காது எனவும் உறுதியாகச் சொல்லிக் கொள்ள வேண்டும்” எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

நன்றி - லக்பிம
சிங்களத்தில் - சஞ்ஜய நல்லபெரும (සංජය නල්ලපෙරුම)
தமிழில் - கலைமகன் பைரூஸ்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com