Monday, July 7, 2014

இனப்பிரச்சினை தொடர்பில் வெளிநாடுகள் மூக்கை நுழைக்க அரசு இடம்கொடுத்தால் நாம் அரசிலிருந்து வெளியேறுவோம்! - மிரட்டுகிறார் வீரவங்ச

“தென்னாபிரிக்காவின் உப ஜனாதிபதி ஸ்ரீரில் ரம்போச இலங்கைக்கு சுற்றுப்பிரயாணியாக வந்து தென் ஆபிரிக்க கிரிக்கட் சுற்றுப்போட்டியை பார்த்துவிட்டு தமது நாட்டுக்கு திரும்பிப் போகவேண்டும். ஆனால், அவர் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு விசேட பிரதிநிதியாக இங்கு வந்து இந்த நாட்டுக்குள் நுழைவராயின் எமதுகட்சி இந்த அரசை விட்டு வெளியேறும்” எனஅமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

எமது கட்சி அரசுக்கு சமர்ப்பித்துள்ள 12 யோசனைகளுள் 4வது யோசனைதான் இந்தநாட்டில் இனப்பிரச்சினைத் தீர்விலோ அல்லது அதிகாரப் பகிர்வினை அரசிடமிருந்து வாங்கிக் கொடுப்பதற்கு தென்னாபிரிக்காவுக்கோ வேறு எந்தநாட்டுக்கும் நடுநிலைவகிக்கமுடியாது.

இந்த நாட்டின் இனப் பிரச்சினை அல்லது அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக வெளிநாட்டவருக்கு இங்கு யாருக்கும் மூக்கை நுழைக்க முடியாது. இவ்விடயம் சம்பந்தமாக எம்மிடம் அரசாங்கம் இணங்கியிருந்தாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நோர்வையை இந்தநாட்டுக்குள் நுழைத்து நாம் அனுபவித்த அனுபவங்கள் இந்தநாட்டில் யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அதே தவறை இந்தஅரசாங்கம் மீளச் செய்யக் கூடாது. என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

இந்த நாட்டுக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் யாரும் வரலாம் - போகலாம். அவர்கள் ஜனாதிபதியையோ அல்லது எதிர்கட்சித் தலைவர் தமிழர் கூட்டணியினரையோ சந்திக்கலாம். அது அவர்களுக்குள்ள உரிமை. ஆனால், அவர்கள் ஒருபோதும் இந்தநாட்டின் இனப்பிரச்சினை பற்றி பேசுவதற்கும் நடுநிலைவகிப்பதற்கும் நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. இனப்பிரச்சினை விடயத்தில் உள்நாட்டிற்குள்ளேயே பேசித் தீர்த்துக்கொள்ளவேண்டும்.

எமது கட்சியான தேசிய சுதந்திர முன்னணி அரசுக்கு சமர்ப்பித்த 12 யோசனைகளை அடுத்தவாரம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் மீள பேசவுள்ளோம். இவ் விடயங்கள் சம்பந்தமாக ஒருமுறையே கூடி ஆராய்ந்தோம் எனவும் அமைச்சர் விமல் தெரிவித்தார்.

(அஷ்ரப் ஏ சமத்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com