Tuesday, July 8, 2014

கே.பி தொடர்பிலான மனுவிற்கு பதிலளிப்பதற்கு மத்தியரசுக்கு நீதிமன்றம் 4 வார கால அவகாசம்!

மைலாப்பூரை சேர்ந்த முன்னாள் சி.பி.ஐ. அதிகாரியான ஜெபமணி மோகன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவை பரிசீலனைக்கு உட்படுத்திய சீதிமன்றம் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கே.பி யை(குமரன் பத்மநாதன்) விசாரிக்க கோரிய வழக்கில் பதிலளிப்பதற்கு மத்தியரசுக்கு நீதிமன்றம் 4 வார கால அவகாசம் வழங்கியுள்ளது.

முன்னாள் சி.பி.ஐ. அதிகாரியான ஜெபமணி மோகன்ராஜின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அவரது நெருங்கிய நண்பரும், விடுதலைப் புலி இயக்கத்தை சேர்ந்தவருமான கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாபன், பொட்டுஅம்மான் உட்பட பலரை சி.பி.ஐ. பல்நோக்கு புலனாய்வு பிரிவு பொலிஸார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், இலங்கையில் நடந்த போரில் பிரபாகரன் கொல்லப்பட்டார். கே.பி. என்ற கே.பத்மநாபன் 2009 ஆம் ஆண்டு மலேசியாவில் வைத்து இலங்கை இராணுவம் கைது செய்தது. ராஜீவ்காந்தி கொலையில் பத்மநாதன்தான், நிதி உதவி வழங்கும் பொருளாளராக செயல்பட்டுள்ளார். இந்த கொலையில் நடந்த சர்வதேச தகவல் அனைத்தும் இவருக்கு தெரியும். இவரிடம் இருந்து பெறப்பட்ட ரகசிய தகவலை வைத்துக் கொண்டுத்தான் இந்தியாவை இலங்கை மிரட்டி வருகிறது.

எனவே, தற்போது இலங்கையில் உள்ள கே. பத்மநாதனை, சி.பி.ஐ. பல்நோக்கு புலனாய்வு பிரிவு பொலிஸார் இந்தியாவுக்கு அழைத்து வந்து, ராஜீவ்காந்தி கொலையின் உண்மை நிலை குறித்து விசாரிக்க வேண்டும் என்று கடந்த 2013 ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி பிரதமரின் தனிச் செயலாளர், மத்திய உள்துறை செயலாளர், சி.பி.ஐ. இயக்குனர் ஆகியோருக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஜெபமணி மோகன்ராஜ் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கிற்கு 4 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com