Thursday, July 3, 2014

ஈராக் எல்லையில் 30000 வீரர்களை நிலை நிறுத்திய சவுதி அரேபியா.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈராக்கில் ஷியா பிரிவு அரசை எதிர்த்து சன்னி போராளிகளான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினரின் போராட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. அங்கு இவர்கள் மின்னல் வேகத்தில் ஊர்களையும், நகரங்களையும் கைப்பற்றி வருகின்றனர்.

இந்த நாட்டின் தென்புற எல்லைப்பகுதியில் 800 கி.மீ தூரத்தை சவுதி அரேபியா பகிர்ந்து கொள்கின்றது. இந்த எல்லைப்புறத்தில் காவல் காத்துக்கொண்டிருந்த ஈராக் அரசு துருப்புகள் அனைவரும் தங்களுடைய காவல் நிலைகளைக் கைவிட்டு சென்றுவிட்டனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பற்று இருக்கின்றது.

இந்த வீரர்களில் 2,500 பேர் ஈராக்கிய நகரமான கர்பாலாவிற்கு கிழக்கே உள்ள பாலைவனப் பகுதிகளில் இருப்பதை வீடியோ பதிவு ஒன்று தெரிவிக்கின்றது. எந்தவித காரணமும் இன்றி இவர்களின் பாதுகாப்புப் பணி நிறுத்தப்பட்டதாக அதில் தோன்றிய ஒரு அதிகாரி குறிப்பிட்டார். ஆனால் அந்தப் பதிவின் நம்பகத்தன்மையை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

எண்ணெய்வளம் மிகுந்ததும், உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதிப் பங்குகளையும் கொண்டிருக்கும் சவுதி அரேபியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் நாட்டினுள் ஊடுருவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் சவுதி அரசு அந்தப் பகுதியில் தங்களின் 30,000 வீரர்களை காவல் பணியில் அமர்த்தியுள்ளது என்று அந்நாட்டிற்குச் சொந்தமான அல் அராபியா தொலைக்காட்சி இன்று தெரிவித்துள்ளது.

பயங்கரவாத அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யுமாறு மன்னர் அப்துல்லா அரசுக்கு உத்தரவிட்டுள்ளார் என்ற செய்தியும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com