Tuesday, June 3, 2014

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் வரக்காபொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியில் நடாத்திய ஒருநாள் செயலமர்வு (படங்கள்)

மாணவர் மத்தியில் ஊடகத் துறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அவர்களையும் இத்துறையில் ஈடுபடுத்தி, ஆர்வமூட்டும் நோக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத் துள்ளது.

தேசிய மட்டத்தில் பாடசாலைகள் தோறும் தேர்ச்சி பெற்ற வளவாளர்களைக் கொண்டு ஊடகத் துறை சார்ந்த கருத்தரங்குகளை நடத்தி வருகின்றது. இதன் ஓர் அங்கமாக வரக்காபொலை பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியில் ஒருநாள் செயலமர்வொன்றை கடந்த 31.05.2014 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடாத்தியது.

கல்லூரி அதிபர் எம்.ஆர்.எம். அக்ரம் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வை ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் வழிநடத்தினார். வரக்காபொலை கோட்டக் கல்வி வலயத்திலுள்ள நாங்கல்ல முஸ்லிம் மகா வித்தியாலயம், தும்மலதெனிய முஸ்லிம் வித்தியாலயம், கொடவல முஸ்லிம் வித்தியாலயம், வரக்காபொலை பாபுல் ஹஸன் மத்திய கல்லூரி ஆகியவற்றிலிருந்து இத்துறையில் ஆர்வமுள்ள 80க்கும் மேற்பட்ட மாவணர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அளுத்கம ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் உபபீடாதிபதியும் ஊடகவியலாளருமான கலைவாதி கலீல், சிரேஷ்ட ஊடகவியலாளர்களான எப்.எம். பைரூஸ், தாஹா முஸம்மில், பாயிஸ் எம். ஹனீபா, எம். பஸீர் ஆகியோர் விரிவுரைகளை நடத்தினார்கள். 21ம் நூற்றாண்டில் ஊடகம் எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் ஊடகத் துறையின் வரலாறு, மொழி நடை, நவீன ஊடகங்கள், சமூக ஊடகங்கள் போன்ற தலைப்பில் விரிவுரைகள் இடம்பெற்றன.

மாலை நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவில், வரக்காபொலை பிரதேச சபை உறுப்பினர் ரவிந்து பிரபாத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். செயலமர்வின் இறுதியில் கலந்து கொண்ட மாவணர்களிடம் தொடுக்கப்பட்ட 10 வினாக்களுள் கூடுதலான வினாக்களுக்கு சரியான விடையளித்த மாணவர்களுக்கு அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டன.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தமிழ் பேசும் மாணவர்களை இத்துறையில் ஈடுபடுத்துவதற்கு வழங்கி வரும் பயிற்சிகள் பாராட்டத்தக்கவை என, விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வரக்காபொலை பிரதேச சபை உறுப்பினர் ரவிந்து பிரபாத் பாராட்டிப் பேசினார்.

செயலமர்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வரக்காபொலை கலை இலக்கிய வட்டம் இதற்கு அனுசரணை வழங்கியது. விழாவில் கல்லூரியின் முன்னாள் அதிபர் எம்.ஜே.எம். காசிம், தும்மலதெனிய முஸ்லிம் வித்தியாலய அதிபர் திருமதி. ரபகா மன்சூர், தொழிலதிபர் இம்தியாஸ் சகரிய்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எம்.ஸித்திக் ஹனீபா

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com