Wednesday, June 11, 2014

D-Day நினைவுதினம்: இரண்டாம் உலக யுத்த நினைவுகூரலும், மூன்றாவது யுத்தத்திற்கான தயாரிப்பும். Bill Van Auken

இரண்டாம் உலக யுத்தத்தில் பங்கெடுத்த ஜேர்மனிய படையினர் தள்ளளாடும் வயதிலும் தமது வெற்றியை கொண்டாடுகின்றனர். படங்கள் உள்ளே

நேசநாட்டுப்படைகளிலும், ஜேர்மன் படையிலும் இரண்டிலும் சேர்ந்து சுமார் 20,000 துருப்புக்கள் உயிரிழந்த D-Day தாக்குதலைக் குறிக்கும் வகையில் 90 வயதான முன்னாள் இராணுவ சிப்பாய்கள் (பல பேருக்கு இது கடைசி தடவையாக இருக்கக்கூடும்) வெள்ளியன்று நோர்மண்டி கடற்கரைக்கு வந்திருந்ததைக் கண்டு சிலர் அசைவற்று போயிருக்கலாம். இந்த 70வது நினைவாண்டு கூட்டத்தில் பங்கு பெற்றிருந்தவர்கள் 1944இல் இதே தினத்தில் அதிருஷ்டவசமாக உயிர்பிழைத்தவர்களாவர். ஆனால் இப்போது அவர்களோடு உடனில்லாதவர்களின் நினைவுகளோடும் மற்றும் இளம் வயதின் அந்த கொடூரமான அனுபவத்தால் தங்களின் ஒட்டுமொத்த வாழ்வையும் இழந்து நின்ற நினைவுகளோடும் நிச்சயமாக வேதனை கொண்டிருந்திருப்பார்கள்.

இந்த பூமியின் வரலாற்றில் பாரிய படுகொலையை நடைமுறைப்படுத்திய இரண்டாம் உலக யுத்தத்தில் உயிர்பிழைத்தவர்களான இந்த தள்ளாடும் வயதினரின் குழுவை வரவழைத்திருந்தமை, ஜனாதிபதி பராக் ஒபாமாவால் முன்னணி பாத்திரம் வகிக்கப்பட்ட அந்த உத்தியோகப்பூர்வ கொண்டாட்டங்களின் எல்லையில்லா பாசாங்குத்தனத்தை எடுத்துக்காட்டியது.

நோர்மண்டியின் 70வது நினைவுதினத்தில் ஏராளமான வரலாற்று முரண்பாடுகள் நிறைந்திருந்தன. வெளிவேடத்திற்கு பாசிசத்தின் ஒரு இறுதிதோல்வியைக் குறித்துக் காட்டும் ஒரு விழாவாக நடந்த அதன் முந்தைய நாட்களில், அமெரிக்க ஜனாதிபதி, நவ-நாஜிக்களால் முன்னெடுக்கப்பட்ட அமெரிக்க ஆதரவிலான ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் அதிகாரத்திற்கு வந்த உக்ரேனிய ஆட்சிக்கு ஆதரவை திரட்டிக்கொள்ள ஐரோப்பாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதே அதிதீவிர-வலதுசாரி படைகள் தான் கிழக்கு உக்ரேனிய மக்களுக்கு எதிராக யுத்த குற்றங்களை நடத்த வாஷிங்டனின் ஆதரவோடு இப்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்கா மற்றும் அதன் பங்காளிகளின் பிரதான எதிரிகளாக இருந்த ஜேர்மனியும், ஜப்பானும் இன்று ரஷ்யா மற்றும் சீனாவைச் சுற்றி வளைப்பதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்ததிற்கு உதவும் நோக்கத்தில் மீள்-இராணுவமயமாக்க வாஷிங்டனால் முடுக்கி விடப்பட்டு வருகின்றன. ஜேர்மன் மற்றும் ஜப்பானில் உள்ள வரலாற்றாளர்கள், ஜேர்மன் மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியங்களால் நடத்தப்பட்ட குற்றங்களை நியாயப்படுத்த இரண்டாம் உலக யுத்தத்தை பற்றி திருத்தி எழுத வேலை செய்து வருகின்றனர்.

வெற்று வார்த்தைஜாலங்களாலும், எந்தவொரு உண்மை உள்ளடக்கத்திலிருந்தும் பிரித்தெடுக்கப்பட்ட வரலாற்று மேற்கோள்களாலும் நிரம்பிய தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவும் மற்றும் நேர்மையற்ற விதத்தில் தனிநபர் சார்ந்த வாழ்க்கை துணுக்குகளால் நிரம்பியிருந்த, ஒமாஹா கடற்கரையில் ஒபாமா ஆற்றிய உரை அமெரிக்க ஜனாதிபதிக்கே உரித்தானதாகும்.

“நாஜி துப்பாக்கிகள்" மற்றும் "ஹிட்லரின் அரண்" ஆகியவை குறித்து சிறியளவில் குறிப்பிட்டுக் காட்டியதற்கு அப்பாற்பட்டு, 70 ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்ட அந்த தியாகங்களுக்கான காரணங்கள் குறித்து அடுத்து கூறுவதற்கு ஒபாமாவிடம் ஒன்றும் இருக்கவில்லை. அவரது சுருக்கப்பட்ட வரலாற்றில் சோவியத் ஒன்றியத்தை பற்றி வேண்டுமென்றே தவிர்த்திருந்தார். நோர்மண்டி தாக்கப்பட்ட நேரத்தில் சோவியத் ஒன்றியம் ஏற்கனவே ஸ்டாலின்கிராடில் ஜேர்மன் இராணுவத்திற்கு (Wehrmacht) ஒரு மூலோபாய தோல்வியை ஏற்படுத்தியிருந்தது. ஜேர்மன் படைகளுக்கு ஏற்பட்டிருந்த 80 சதவீத இழப்புகளுக்கு செம்படையே காரணமாகும். அந்த யுத்தத்தில் சோவியத் தரப்பில் 26 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்.

நோர்மண்டியில் வரவழைக்கப்பட்டிருந்த அந்த வயதான முன்னாள் இராணுவத்தினரால் சண்டையிடப்பட்ட யுத்தத்தை, "9/11க்குப் பிந்தைய” அமெரிக்க இராணுவ சண்டையோடும் மற்றும் ஆப்கானிஸ்தான், ஈராக்கில் அதன் யுத்தங்களோடும் சமாந்தரமாக காட்ட முயன்ற அவரது முயற்சியே அனேகமாக ஒபாமா உரையின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். "உலகம் இதுவரை கண்டிராத சுதந்திரத்திற்கான பிரமாண்ட சக்தியாக அமெரிக்கா இருக்கிறது, இருக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்த இந்த தலைமுறைகளின் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மரியாதை செலுத்த எதிர்கால தலைமுறைகள்... என்றாவது ஒருநாள் இதே போன்ற இடங்களில் ஒன்று கூடுவார்கள் என்று தான் கூற வேண்டும்,” என்று அவர் முன் அனுமானித்தார்.

மில்லியன் கணக்கான ஈராக்கியர்களையும், ஆப்கானிஸ்தானியர்களையும் கொன்ற யுத்தங்களில் என்ன "சுதந்திரத்தை" அமெரிக்கா கொண்டு வந்தது? இத்தகைய யுத்தங்களைக் குறித்துக் காட்ட எதிர்கால தலைமுறைகள் எந்த இடத்தில் கூடுவார்கள் — பல்லூஜாஹ்விலா, அபு கிரைப்பிலா, ஹதிதா, பாக்ராம் சிறையிலா அல்லது அப்பாவி மக்களுக்கு எதிராக குண்டு வீசிய மற்றும் இரவு நேர தேடுதல் வேட்டைகளை நடத்திய இடங்களிலா மற்றும் எண்ணற்ற ஆளற்ற டிரோன் விமான தாக்குதல்களைக் கண்ட இடங்களிலா?

ஒபாமா அங்கே உரையாற்றி கொண்டிருந்தாலும் கூட, சார்ஜண்ட் போவே பேர்க்டாலின் விடுதலை குறித்து அமெரிக்க ஊடகங்களில் வந்திருந்த பரபரப்பூட்டிய வலதுசாரி செய்திகளின் நிழல் அவரது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் மீது படர்ந்திருந்தது. போவே பேர்க்டால், "அங்கே நடக்கும் ஒவ்வொன்றுக்கும் மன்னிப்பு கோரியும்" மற்றும் அமெரிக்க இராணுவத்தை "பொய்யர்கள், நயவஞ்சகர்கள், முட்டாள்கள் மற்றும் அட்டூழியக்காரர்களின் ஓர் இராணுவம்" என்று வர்ணித்தும் எழுதிய பின்னர், ஆப்கானிஸ்தான் யுத்தத்திலிருந்து வெளிப்படையாக வெளியேறி சென்றார்.

இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் சொந்த இராணுவவாதம் மற்றும் உலகளாவிய அபிலாஷைகளை, ஒரு பரந்த ஜனநாயக கோரிக்கைகளின் பின்னால் பெரிதும் மூடி மறைக்க முடிந்திருந்தது, இதற்காக அமெரிக்க மற்றும் சர்வதேச அளவில் உழைக்கும் மக்களிடையே ஹிட்லரின் பாசிசத்திற்கு இருந்த ஆழ்ந்த விரோதத்திற்குத்தான் நன்றி கூற வேண்டும். இன்றோ, அதுபோன்ற எந்தவொரு கோரிக்கையையும் அதனால் நம்பத்தன்மையோடு வழங்க முடியாது. சார்ஜண்ட் பேர்க்டாலின் உணர்வுகளோடு பெரிதும் ஒத்திருக்கும் மற்றும் வெளிநாடுகள் மீதான இராணுவ தலையீடுகளுக்கு விரோதமான உணர்வு கொண்ட மக்களை அமெரிக்க ஆளும்வர்க்கம் எதிர்கொண்டிருக்கிறது.

எவ்வாறிருந்த போதினும், முதலாம் உலக யுத்தம் "அனைத்து யுத்தங்களையும் முடிப்பதற்கான யுத்தமாக" இருந்தது என்பதைவிட, இரண்டாம் உலக யுத்தமானது ஜனநாயகத்திற்கான ஒரு யுத்தமோ அல்லது பாசிசத்திற்கு எதிரான ஒரு தர்ம யுத்தமோ அல்லது அதே விதத்தில், ஈராக்கிய ஆக்கிரமிப்பு பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமோ அல்ல. யுத்தத்திற்கு இட்டு சென்ற காலக்கட்டத்தில், மேற்கத்திய ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பிரதான நிதியியல் நலன்கள் ஹிட்லர் மற்றும் முசோலினியைப் புகழ்ந்ததோடு, அவர்களின் பாசிச சர்வாதிகாரங்களை சோசலிச புரட்சிக்கு எதிரான பாதுகாப்பு அரணாக பார்த்தன.

இறுதியில் அது, உலக சந்தைகள் மற்றும் மூலவளங்களை நிதியியல் மற்றும் உற்பத்தி கூட்டுபெருநிறுவன இலாப நலன்களுக்காக மறு-பகிர்வு செய்வதற்கான போட்டி முதலாளித்துவ வல்லரசுகளால் நடத்தப்பட்ட ஒரு ஏகாதிபத்திய யுத்தமாக இருந்தது.

சோசலிச புரட்சி பரவவில்லையானால், கிளர்ந்தெழும் முரண்பாடுகள் தவிர்க்கவியலாமல் மற்றொரு உலக யுத்தத்திற்கு எழுச்சியளிக்கும் என ஆய்வு செய்து, 1934இல் டிரொட்ஸ்கி எழுதினார்: “1914இல் ஜேர்மனியை யுத்த பாதைக்குத் தள்ளிய அதே பிரச்சினைகளோடு அமெரிக்க முதலாளித்துவம் நின்று கொண்டிருக்கிறது. உலகம் பிரிக்கப்பட்டுள்ளது? அதை மறு-பிரிவினை செய்தாக வேண்டும். ஜேர்மனியைப் பொறுத்த வரையில் அது "ஐரோப்பாவை மறுஒழுங்கமைக்கும்" பிரச்சினையாக உள்ளது. அமெரிக்கா உலகை 'ஒழுங்கமைக்க' வேண்டும். வரலாறு, மனித இனத்தை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொந்தளிப்பான எழுச்சிக்கு முன்னால் நேருக்குநேராக கொண்டு வருகிறது.”

இந்த வார்த்தைகளின் முற்கணிப்பானது கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் தெளிவாக்கி வருகின்றன. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் பொருளாதார பலத்தின் அடிப்படையில் முதலாளித்துவ உலகை மறுஒழுங்கமைப்பதில் வெற்றி கண்டிருந்த போதினும், இன்று அது அதன் பொருளாதார பலத்தை இழப்பை ஈடுசெய்துகொள்ளும் முயற்சியில், அதன் நெருக்கடியால் இராணுவ வழிவகைகளில் தங்கியிருக்க உந்தப்பட்டுள்ளது.

அவரது உரையில் ஒபாமா, "நமது அமைதிக்காக யுத்தம் நடத்திய" அங்கே கூடியிருந்த முன்னாள் இராணுவத்தினரைப் பாராட்டியதோடு, “நமது உலகின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக" அமெரிக்க இராணவத்தில் இன்று சேவை செய்து வருபவர்களைக் கடவுள் ஆசிர்வதிக்க வேண்டுமென அழைப்பிட்டார்.

இரண்டாம் உலக யுத்தத்தின் அந்த நினைவுதினத்தில் "சமாதானத்திற்கான" ஒட்டுமொத்த பேச்சும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஒபாமா நிர்வாகமும் மூன்றாவது யுத்தம் ஒன்றிற்கு மூர்க்கத்துடன் தயாரிப்பு செய்து வருகிறது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

அதன் ஆசிய-பசிபிக் "முன்னெடுப்போடு" அது திட்டமிட்டு சீனாவை ஆத்திரமூட்டி வருகிறது, அதேவேளையில் அப்பிராந்தியத்தில் உள்ள ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் இதர நாடுகளை ஒரு இராணுவ மோதலுக்கான நிலைமைகளை உருவாக்க தூண்டிவிட்டு வருகிறது.

உக்ரேனிய ஆட்சி-மாற்றத்திற்கான அதன் நடவடிக்கைகளில், ரஷ்யாவின் எல்லைக்கு மிக நெருக்கமாக நேட்டோ படைகளை முன்னெடுத்து சென்று, அதன் இருப்பிற்கே அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் ரஷ்யாவை அது எதிர்நோக்குகின்றது.

இறுதியாக பிராந்தியளவிலும் சர்வதேச அளவிலும் அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநிறுத்த ரஷ்யா மற்றும் சீனாவின் பலத்தை உடைப்பதும் மற்றும் அவ்விரு நாடுகளையும் அரை-காலனித்துவ அந்தஸ்திற்கு குறைப்பதுமே அதன் நோக்கமாகும். இந்த மூலோபாய நோக்கத்தை இரக்கமின்றி பின்தொடர்வதில், அது ஒரு அணுஆயுத மூன்றாம் உலக யுத்தத்தைத் தூண்டிவிடும் ஆபத்தையும் கொண்டுள்ளது.

எவ்வாறிருந்த போதினும் ஐரோப்பாவிற்கான ஒபாமாவின் நான்கு நாள் சுற்றுப்பயணம், ரஷ்யாவுடன் மோதலைத் தீவிரப்படுத்துவதில் வாஷிங்டனின் தரப்பில் இணைந்திருக்க, அதிகளவில் ஐரோப்பிய சக்திகளின் — குறிப்பாக பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் — பகிரங்கமான விருப்பமின்மையை அம்பலப்படுத்தியதோடு, அது ஏதோவொரு வித தோல்வியாக திரும்பி உள்ளது.

இது, பிரபல ஜேர்மன் பத்திரிகை Die Zeitஇல் "அமெரிக்காவுடன் ஐரோப்பா அதன் உறவுகளை மறுஒழுங்கு செய்ய அவசியமாகும்" என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையில் வெள்ளியன்று வெளிப்படையான வெளிப்பாட்டைக் கண்டது. “உக்ரேன் மற்றும் இரஷ்யாவை நோக்கிய அமெரிக்க கொள்கையோ அல்லது அமெரிக்காவின் மாபெரும் மூலோபாயம் போன்ற ஒன்றோ ஐரோப்பாவின் நலன்களுக்காக இல்லை,” என்று அந்த கட்டுரை எச்சரித்தது.

வாஷிங்டனின் ஆக்ரோஷம், சீன-ரஷ்ய-ஈரானிய அச்சை ஏற்படுத்துவதற்கு அடித்தளங்களை அமைத்து வருவதுடன், அது "எண்ணெய் போன்ற முக்கிய ஆனால் பற்றாக்குறையில் உள்ள மூலப்பொருட்களைப் பெறுவதைப் பாதுகாக்க, மேற்கை ஒரு மிகவும் ஆக்ரோஷமான வெளியுறவு கொள்கையைப் [அதாவது யுத்தத்தை] பின்பற்ற நிர்பந்திக்கும்" என்று அந்த கட்டுரை வாதிடுகிறது. இதற்கு நேரெதிராக அந்த கருத்துரை, ஜேர்மனியின் சுதந்திரமான நலன்கள் "ரஷ்யாவுடன் ஐரோப்பிய உறவுகளை ஆழப்படுத்துவதிலும், பேணி வருவதிலும்", அதேவேளையில் அதேபோன்ற உறவுகளை ஈரானுடன் பின்தொடர்வதிலும் தங்கியுள்ளது என்று வலியுறுத்துகிறது.

ஒரு புதிய உலக யுத்தத்திற்கான அச்சுறுத்தலானது ரஷ்யா மற்றும் சீனாவுடன் அமெரிக்க ஏகாதிபத்தியம் மோதல்களைத் தூண்டுவதில் மட்டும் தங்கியிருக்கவில்லை, மாறாக பொருளாதார மற்றும் நிதியியல் நெருக்கடி தொடர்ந்து கொண்டிருப்பதன் கீழ், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் முரண்பட்ட ஏகாதிபத்திய நலன்களிலும் தங்கி இருப்பதோடு, இது அனைவரையும் ஒன்றுக்கு எதிராக மற்றொன்றை மூர்க்கமான மோதலுக்குள் திருப்பிடும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.

100 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக மீண்டுமொருமுறை, மனித இனம் 1914 மற்றும் 1939இல் தொடங்கியதைவையை விடவும் மிகவும் கொடூரமானதாக ஓர் உலகளாவிய ஏகாதிபத்திய மோதலின் அச்சுறுத்தலை மற்றும் சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைமையுடன் முகங்கொடுத்துள்ளது.

சர்வதேச சோசலிச புரட்சிக்கு வெளியே ஒரு புதிய ஏகாதிபத்திய யுத்தத்தைத் தடுப்பதற்கு அங்கே எந்தவொரு சாத்தியக்கூறும் இல்லை. நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவைக் கட்டியெழுப்புவதன் மூலமாக தொழிலாளர் வர்க்கத்தில் ஒரு புதிய புரட்சிகர தலைமையை ஸ்தாபிப்பதே தீர்க்கமான கேள்வியாகும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com