Monday, June 16, 2014

வாஷிங்டனின் உந்துதல்கள் தென்சீன கடலில் பதட்டங்களை தீவிரப்படுத்துகின்றன. By Joseph Santolan

பெய்ஜிங்கிற்கு குழிபறிக்க மற்றும் அப்பிராந்தியம் முழுவதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டைப் பலப்படுத்த நோக்கங்கொண்ட "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாக, தென் சீனக் கடலில் சீனாவை எதிர்கொள்ள பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமுக்கு அமெரிக்கா அழுத்தம் அளித்து வருகிறது.

திங்களன்று ஐக்கிய நாடுகளுக்கான சீனாவின் துணை தூதர் வாங் மின் (Wang Min) பொதுச் செயலாளர் பான் கீ-மூனுக்கு நிலைப்பாட்டை அறிவிக்கும் ஒரு அறிக்கையை அளித்ததோடு, அதை பொது அவைக்கு சுற்றறிக்கையாக அனுப்புமாறும் கேட்டுக் கொண்டார். தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய பாராசெல் தீவுகளுக்கு 32 கிலோமீட்டருக்கு மேற்கே கடல் பகுதிக்குள் பெய்ஜிங் மே 1இல் அமைத்திருந்த சீன தேசிய கடலடி எண்ணெய் நிறுவனத்தின் (CNOOC) எண்ணெய் தோண்டும் தளத்திற்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக அந்த அறிக்கை வியட்நாமைக் குற்றஞ்சாட்டியது.

வியட்நாமிய கப்பல்கள் சீன வாகனங்களை 1,416 முறை மோதியதாக பெய்ஜிங் வாதிட்டதோடு, நீருக்கடியில் இருந்த அந்த எண்ணெய் தோண்டும் தளத்தை அணுகவும் மற்றும் அவர்களின் கப்பல்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் வலைகள் மற்றும் சிதைந்த பொருட்களைப் பரப்பிவிடவும் ஹனோய் "கடலுக்கடியில் நீந்துவோரை" (frogmen) நியமித்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

இவை "சீன இறையாண்மை, இறையாண்மை உரிமைகள் மற்றும் நீதித்துறை மீதான தீவிர அத்துமீறலாகும், சீனர்களின் பாதுகாப்புக்கும் மற்றும் தோண்டப்படும் HYSY 981 எண்ணெய் வயலின் பாதுகாப்புக்கும் மரணகதியிலான அச்சுறுத்தல்களாகும்" என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. அது இந்த பிரச்சினையைத் தீர்க்க சீனா மற்றும் வியட்நாமிற்கு இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது.

ஒரு ஆத்திரமூட்டும் விடையிறுப்பில் வியட்நாமிய தேசிய சட்டசபை செவ்வாயன்று அறிவிக்கையில், அங்கே கூடுதல் கடற்படை வாகனங்களை நிறுத்த அது 762 மில்லியன் டாலரை வரவு-செலவு திட்டத்தில் கொண்டு வருவதாக அறிவித்தது. புதனன்று, பெய்ஜிங்கிற்கு விடையிறுப்பாக ஹனோய் அதன் நிலைபாட்டு அறிக்கையை ஐநா சபையில் சமர்பித்ததோடு, அந்த அறிக்கை சீனா "வியட்நாமின் கடல்சார் பகுதிகளுக்குள் ரோந்து வாகனங்களை அனுப்புகிறது என்றும், கடல்வழி பாதுகாப்பு மற்றும் காவலில் தலையிடுகின்ற மற்றும் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பைப் பாதிக்கின்ற அனைத்து நடவடிக்கைகளை நிறுத்துமாறும்" முறையிட்டது.

பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தால் மார்ச் 30இல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஹேக்கில் அமைந்துள்ள கடல் சட்டத்திற்கான சர்வதேச தீர்பாயத்திடம் (ITLOS - International Tribunal on the Law of the Sea) தென் சீனக் கடலில் சீனாவின் எல்லை உரிமைகோரலைச் சட்டரீதியில் பிரச்சினைக்குள்ளாக்குவதில் வியட்நாமிற்கு அழுத்தம் அளிக்க, பெய்ஜிங் மற்றும் ஹனோய்க்கு இடையிலான பதட்டங்களை வாஷிங்டன் பயன்படுத்தி வருகிறது.

வெளியுறவுத்துறை கமிட்டியில் பார்வையிடும் ஓர் உறுப்பினரான அமெரிக்க செனட்டர் பென் கார்டினுடனான ஒரு சந்திப்பில், வியட்நாமின் பிரதம மந்திரி என்குயன் டங் (Nguyen Dung) மே இறுதியில் அறிவிக்கையில், ஹனோய் "சட்டரீதியான நடவடிக்கைக்கு தயாராக மற்றும் ஆயத்தமாக உள்ளது ... இந்நடவடிக்கையை மேற்கொள்ள நாங்கள் மிகவும் பொருத்தமான நேரத்தைப் பரிசீலித்து வருகிறோம்.” “பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரமின்மைக்கு அமெரிக்கா மிகவும் திடமான, மிகவும் துல்லியமான பங்களிப்புகளை வழங்க வேண்டுமென" வியட்நாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சீனா பல தூர்வாரும் இயந்திரங்களைப் பயன்படுத்தி வருவதாகவும், கடல் படுகைகளை வாரி எடுத்து மண்ணையும், பாறைகளையும் வடக்கு ஸ்ப்ராட்லி தீவுகளின் வடக்கில் ஐந்து கடல்குன்றுகளில் பரப்பி, அதன் நிலப்பகுதியை ஒன்பது ஏக்கர்களுக்கு விஸ்தரித்து வருவதாகவும் கடந்த வாரங்களில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெனிக்னோ அக்வினோவின் (Benigno Aquino) நிர்வாகம் வாதிட்டது. பெய்ஜிங் ஒரு விமான ஓடுதளத்தை கட்டி அமைத்து வருவதாகவும், தென் சீனக் கடலின் மீது ஒரு வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை (ADIZ) அறிவிக்க இந்த விமான ஓடுதளத்தைப் பயன்படுத்தும் நோக்கம் இருப்பதாகவும் மணிலா ஊகிக்கிறது.

சீனா மீதான அதன் அழுத்தத்தைத் தீவிரப்படுத்த வாஷிங்டன் இந்த குற்றச்சாட்டுக்களை பற்றி உள்ளது. கிழக்கு ஆசிய மற்றும் பசிபிக் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை வெளியுறவுத்துறை செயலர் டானியல் ரஸ்செல் செவ்வாயன்று கூறுகையில், “சீரமைப்பு வேலை மற்றும்... உள்ளதை உள்ளவாறே வைத்திருப்பதற்கு அப்பாற்பட்டு செல்கிறது என்று ஒரு நியாயமான மனிதரால் கருதக்கூடிய அளவிற்கு பெருமளவிலான தளங்களைக் கட்டியமைத்தல் போன்ற தென் சீனக் கடலின் நடவடிக்கைகள் குறித்து அங்கே நிறைய பத்திரிகை செய்திகள் உள்ளன,” என்று தெரிவித்தார்.

மலைப்பூட்டும் பசாங்குத்தனமாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செய்தி தொடர்பாளர் ரஸ்செல் தொடர்ந்து கூறுகையில், “எல்லை உரிமைகோரல்களை முன்னெடுப்பதற்கான ஒரு வழிமுறையாக நிர்பந்தித்தல் மற்றும் பலத்தைக் காட்டி அச்சுறுத்தல் போன்றவற்றை ஏற்க முடியாது,” என்று கூறினார்.

தென் சீனக் கடலில் மட்டுமின்றி மாறாக உலகம் முழுவதிலும் பல வெடிப்பு புள்ளிகளில், வாஷிங்டன் தான் அதன் நலன்களை முன்னெடுக்க நிர்பந்தித்தல் மற்றும் பலத்தைக் காட்டி அச்சுறுத்தல் போன்றவற்றை பயன்படுத்தி வருவதோடு, யுத்தத்தை நோக்கி உந்தி வருகிறது. அப்பிராந்தியம் முழுவதிலும் அமெரிக்க இராணுவ தயாரிப்புகள் மற்றும் கூட்டுறவுகளை விவரித்து சிங்கப்பூரில் அமெரிக்க பாதுகாப்பு செயலர் சக் ஹாகெல் பேசிய இரண்டு வாரங்களுக்கும் குறைந்த நாட்களில் ரஸ்செலின் கருத்துக்கள் வெளிவருகின்றன.

இது ITLOSஇல் மணிலாவின் சட்ட வழக்கைப் பாதிக்கக்கூடுமென்ற மணிலா மற்றும் வாஷிங்டனின் கவலையே, “தீவைக் கட்டியமைக்கிறது" என்ற பெய்ஜிங்கிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் உள்ள ஒரு முக்கிய காரணியாகும்.

ஜூன் 3இல், தீர்ப்பாயம் நடைமுறை விதி 2ஐ பிரசுரித்தது, அது மணிலாவின் வழக்கிற்கு அதன் எதிர்வாதத்தை சமர்பிக்குமாறு டிசம்பர் 15 வரையில் பெய்ஜிங்கிற்கு கால அவகாசம் அளித்தது. அந்த விசாரணையில் பங்கெடுப்பதற்கு அதன் மறுப்பை மீண்டும் வலியுறுத்தி, பெய்ஜிங் ஒரு வாய்மொழி குறிப்பைக் கொண்டு விடையிறுப்பு காட்டியது.

ITLOSஇல் இருக்கும் மணிலாவின் வழக்கு, தென் சீனக் கடலில் பெய்ஜிங்கின் உரிமைகோரல்களை செல்தகைமையற்றதாக்க பார்த்து வரும் வாஷிங்டனால் வரையப்பட்டு, வாதிடப்பட்டு வருகிறது.

“அனைத்து கடல்சார் உரிமைகோரல்களும் நிலத்திற்குரிய விதிமுறைகளில் இருந்து பெறப்பட வேண்டும் அல்லது கடல்களுக்கான சர்வதேச சட்டத்திற்கு பொருந்தியதாக இருக்க வேண்டும் ... நிலத்திற்குரிய விதிமுறைகளில் இருந்து பெறப்படாத தென் சீனக் கடலின் உரிமைகோரல்கள் அடிப்படையிலேயே பிழையானதாகும்" என்ற வாதத்தை அமெரிக்கா தாங்கிப்பிடிப்பதாக குறிப்பிட்டு, ரஸ்செல் ITLOSஇன் கேள்விக்கு பெப்ரவரியில் பதிலளித்திருந்தார்.

அமெரிக்க சட்ட நிறுவனமான ஃபோலே ஹோக்கின் கூட்டாளியும், ITLOSஇல் உள்ள பிலிப்பைன்ஸ் வழக்கின் தலைமை வழக்கறிஞருமான போல் ரிச்லெர் நியூ யோர்க்கில் உள்ள மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுக்களுக்கான மையத்தில் (CSIS) பேசுகையில், ஹேக்கில் சீனாவிற்கு எதிராக வரும் ஒரு தீர்ப்பு பெய்ஜிங்கை "சர்வதேச தடைவிதிப்புக்குள்" திருப்பும், அதற்காக அது "பெரும் விலை கொடுக்க வேண்டியதிருக்கும்" என்று கூறினார்.

தென் சீனக் கடலின் தீவுகள் மற்றும் பிராந்தியங்கள் மீதான மணிலாவின் வரலாற்றுரீதியிலான உரிமைகோரல்கள் பெய்ஜிங்கின் அத்தகைய வாதங்களை விட குறிப்பிடத்தக்க அளவிற்கு பலவீனமாக உள்ளன. இதனால் தான் மணிலா ஒரு பிராந்திய பிரச்சனையை முன்னிறுத்தாமல், மாறாக, தீவுகள் மீதில்லாமல் சர்ச்சைக்குரிய கடல்கள் மீதான உரிமைகோரல்கள் அடிப்படையில், கடல்களுக்கான சட்டத்தின் ஐநா தீர்மானத்தின் (UNCLOS) கீழ் ஒரு கடல்சார் பிரச்சினையை முன்னிறுத்துகிறது. வரலாற்றுரீதியிலான உரிமைகோரல்கள் அடிப்படையில் அல்லாமல் முதன்மையாக அண்மையில் உள்ள கடலோர பகுதியின் அடிப்படையில் பிரச்சினைக்கு தீர்ப்பளிக்க வேண்டுமென அவை வாதிடுகின்றன.

ஆகவே தென் சீனக் கடலில் உருவாகி இருக்கும் நிலப்பகுதி, தீவுகள் அல்ல பாறைகளாகும் என்பதால் அது பிராந்திய நீதிச்சட்டத்திற்கு உட்பட்டதல்ல கடல்சார் நீதிச்சட்டத்திற்கு உட்பட்டதாகும் என்பதே மணிலா வாதத்தின் ஒரு முக்கிய உட்கூறாக உள்ளது. ஆனால் இந்த வாதம், 300 மக்கள், ஒரு தொடக்கப்பள்ளி மற்றும் 40 சிப்பாய்கள் உள்ள ஸ்ப்ராட்லியில் உள்ள பாக்-அசா (Pag-asa) தீவில் மணிலா ஒரு உத்தியோகபூர்வ உள்ளூர் அரசாங்க பிரிவைக் கொண்டுள்ளது என்ற உண்மைக்கு முன்னால் அழிந்து போகிறது. இருப்பினும் கூட, ஸ்ப்ராட்லி தீவுகளின் வடக்கு பகுதியில் பெய்ஜிங் சட்டவிரோதமாக தூர்வாரி வருகிறது மற்றும் கட்டமைப்புகளைச் செய்து வருகிறது என்பதே மணிலாவின் ஆட்சேபணைகளுக்கு அடியில் இருக்கும் சட்ட வாதமாகும்.

“தென் சீனக் கடலில் தற்போது ஆக்கிரமிக்கப்படாத எந்தவொரு நிலப்பகுதியையும் ஆக்கிரமிப்பதில்லை என்று உறுதியளிக்க" பிரச்சினைக்குரியவர்களுக்கு அழைப்பு விடுத்து, ஜூன் 12இல் ரஸ்செல் மணிலாவின் தரப்பிற்கு ஆதரவளித்தார். தெளிவாக பெய்ஜிங் இந்த அறிக்கையின் இலக்காக இருக்கிறது.

லிபியா, சிரியா அல்லது உக்ரேனில் செய்யப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்திய தலையீடுகளுக்கான வழக்கமான போலி மனிதாபிமான நியாயப்பாடுகளை ஒரு கடல்சார் பிரச்சினையில் எளிதாக பயன்படுத்த முடியாது, இதில் மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவதில்லை, மேலும் தெளிவாக பணயத்தில் இருப்பது என்னவென்றால் உரிமைகோரும் அரசுகளின் போட்டி பொருளாதார நலன்களாகும்.

வாஷிங்டன் "சுதந்திர கடல்வழி போக்குவரத்து" எனும் கருத்துருவைச் சுற்றி சீனாவிற்கு எதிரான ஒரு வழக்கை கட்டியமைக்க முனைந்து வருகிறது, மேலும் அவ்வாறு செய்வதற்கு சர்வதேச நீதிமன்றத்தில் பெய்ஜிங்கின் பிராந்திய உரிமைகோரல்களை செல்தகைமையற்றதாக ஆக்க முயற்சிக்கிறது. தென் சீனக் கடலில் ஒரு அபாயகரமான நடைமுறையின் பயங்கர விளையாட்டில் சீனாவை ஈடுபடுமாறு செய்யவும், பின்னர் அந்த பிரச்சினைகளின் அடிப்படையில் ITLOSஇல் வழக்கு தொடுக்கவும் வாஷிங்டன் பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் இரண்டிற்கும் அழுத்தம் அளித்து வருகிறது.

இந்த பிரச்சாரத்தின் தாகம் யுத்தத்திற்கான ஒரு சட்டபூர்வ போலிக்காரணத்தை தயாரிப்பதாகும்.

அதே நேரத்தில் வாஷிங்டனும் அவசியமான இராணுவ தயாரிப்புகளைச் செய்து வருகிறது. ஏப்ரல் மாத இறுதியில், அந்நாடு முழுவதிலும் கணக்கில்லா அமெரிக்க படைகளை நிறுத்த வாஷிங்டன் மணிலா உடன் கையெழுத்திட்டது. அது காம் ரான் வளைகுடாவில் (Cam Ranh Bay) அமெரிக்க கப்பல்களை நிலைநிறுத்துவதற்கு ஹனோயோடும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com