Monday, June 30, 2014

நவி பிள்ளை நியமித்த ஆணைக்குழுவின் சுயரூபம் அம்பலம்!

சர்வதேச உலகால் ஏற்றுக்கொள்ளப்பட்டாதவர்களையே பிள்ளை நியமித்துள்ளார்!

இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம் பெற்றதா என்பது தொடர்பில் கண்டறிவதற்காக, பிள்ளை நியமித்த ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள், உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் அல்லவென, சர்வதேச ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் உதவியுடன் இலங்கையில் போர்க்குற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறி விசாரணைகளை நடாத்துவதற்கென, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை நியமித்த குழுவின் அங்கத்தவர்களின் பெயர் விபரம்; வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இவர், இரு அங்கத்தவர்களை நியமித்ததுடன், அவர்கள் இருவருக்கும் சர்வதேச ரீதியில் பாரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இவர்கள் இருவரும் சர்வதேச புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுபவர்கள் என, தகவல்கள் அம்பலமாகின.

ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் பேங்கிமூன், இந்த நியமனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தமையினால், இவர்கள் இருவரதும் பெயர்களை நீக்க, நவி பிள்ளை நடவடிக்கை எடுத்ததாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புதிதாக 3 அங்கத்தவர்களை கொண்ட குழுவினை நியமிக்க, அதனை தொடர்ந்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எதிராக நியமித்துள்ள புதிய குழுவில், பின்லாந்தின் மார்டி அத்திசாரி, நியூசிலாந்தின் சில்வியா கார்டிரைட், பாகிஸ்தானை சேர்ந்த அஸ்மா ஜஹன்கீர் இடம்பெற்றுள்ளனர். மார்டி அத்திசாரி, பின்லாந்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி என்பதுடன், இவர் கொசோவோ சமாதான திட்டத்தின் அநுசரணையாளராகவும், செயற்பட்டுள்ளார்.

இவரது தலையீடுகள் காரணமாக, கொசோவோ, சேர்பியாவிலிருந்து பிரிக்கப்பட்டதுடன், அங்கு சுயாதீன இராச்சியம் பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்காக இவர் கொசோவோ பிரிவினைவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு 40 மில்லியன் யூரோவை இலஞ்சமாக வழங்கியுள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பின்லாந்தின் எஸ்.ரி.ரி. செய்தி முகவர் நிறுவனம், 2007ம் ஆண்டில் இது தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்தியது.

அத்துடன் பல மில்லியன் யூரோவை இலஞ்சமாக பெற்று பிரிவினைவாதத்திற்கு துணைபோன நபர் ஒருவர், இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதை கண்டறிய நியமிக்கப்பட்டதால், உண்மையான பெறுபேறுகளை பெற முடியுமா என. சர்வதேச விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை, பிள்ளையின் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள ஏனைய அங்கத்தவர்ளுள் ஒருவரான பாகிஸ்தானின் அஸ்மா ஜஹான்கீர், முஸ்லிம் என்பதுடன், அளுத்கம பேருவளை சம்பவங்களின் பின்னரே இவர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளதாக, தகவல்கள் தெரியவந்துள்ளன.

இந்த செயற்பாடுகளை பயன்படுத்தி, இனவாத, மதவாத உணர்வினை தூண்டி, சர்வதேச விசாரணைகளை வேறு திசைக்கு இட்டுச்செல்வதே, நவி. பிள்ளையின் நோக்கமா என, சர்வதேச விமர்சககள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் நவநீதம் பிள்ளையின் இலங்கைக்கு எதிரான விசாரணைகளில் உண்மையான பயனை எதிர்பார்க்க முடியுமா என, சர்வதேச ரீதியில் பேசப்படுகிறது.

...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com