Thursday, June 26, 2014

மங்களவின் அரச துரோக செயலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும்! - ஹெல உறுமய

ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் அறிக்கையானது நாட்டை முற்றுகையிடும் சூழ்ச்சிக்கு ஆதரவு வழங்குவதாகும் என ஜாத்திக ஹெல உறுமய குறிப்பிடுகிறது.

அக்கட்சியின் ஊடகச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிஷான் வர்ணசிங்க இது தொடரபில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"மங்கல சரமவீரவின் அறிக்கையானது நாட்டை முற்றுகையிடும் சூழ்ச்சிக்கு உரமூட்டுவதாகும்

சென்ற 24 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம ஊடகப் பேச்சாளரான மங்கள சமரவீரவினால் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தொடர்பில் தகவல் வெளியிட்டிருப்பதானது, நாட்டுக்கும் நாட்டுப் பாதுகாப்புக்கும் கேடு விளைவிக்கும் செயலாகும் என்பதை தெளிவுறுத்துகின்றோம். நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு செயற்படும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் பெயர்களை வெளியிட்டு, அளுத்கமையில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேசத்தை வேறொரு பக்கத்திற்கு திசை திருப்புவதற்கு மங்கள சமரவீர செயற்பட்டுள்ளதுடன், இது தெளிவாக இழிந்ததொரு துரோக செயலாகும் என நாங்கள் இதனைக் காண்கிறோம். இவரின் இந்த செயற்பாடானது இலங்கைக்கு எதிராக செயற்படும் துரோகிகளுக்கு இது வலு சேர்க்கும் செயலாகும்.

இலங்கை அரசின் பாதுகாப்புப் பிரிவுகளிலுள்ள புலனாய்வு அதிகாரிகள் மதவாத, இனவாத பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு பின்னணியில் நிற்கிறார்கள் என குறிப்பிட்டிருப்பதும், சிற்சில பௌத்த அமைப்புக்களும் பாதுகாப்புப் பிரிவும் சிறுபான்மை இனத்தை நசுக்கி அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக ஆவன செய்து வருகின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டானது இலங்கையை சர்வதேச நாடுகள் நசுக்குவதற்கும், முற்றுகையிடுவதற்கும் ஏதுவாக அமைந்துள்ளது. அளுத்கம விடயம் தொடர்பில் புதியதொரு விடயத்தை சோடித்து, நாட்டையும் அரசாங்கத்தையும் நெருக்கடியாக்குவதற்குரிய மிகவும் இழிந்த செயலாகும். இதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம ஊடகப் பேச்சாளரான மங்கள சமரவீரவின் துரோக செயலுக்கு அனைத்து தேசாபிமானம் மிக்க நாட்டு மக்களும் ஒன்றுபட வேண்டும். யுத்த முடிவு வேளையில் ஐக்கிய தேசியக் கட்சி செய்த காட்டிக் கொடுப்புக்கள் பற்றி இவ்விடத்தில் நாங்கள் நினைத்துப் பார்க்கிறோம். அதனால் அன்று புலனாய்வுப் பிரிவிலும், பாதுகாப்புப் பிரிவிலும் பல்லாயிரக் கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. அதனால், இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மங்கள சமரவீரவின் விரோத, குரோத செயலுக்கு எதிராக உடனடியாக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை நாங்கள் வலுக்கட்டாயப்படுத்தி நிற்கிறோம்” எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com