Saturday, May 10, 2014

இலங்கையைச் சேர்ந்த ஜாகீர்உசேன் கைதை தொடர்து பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை கைதுசெய்ய நடவடிக்கை!

இலங்கையில் இருந்து, சென்னை நகருக்குள் உளவாளியை அனுப்பி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளதால் அவர்களை கைது செய்ய சென்னை காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னையில் சமீபத்தில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு வைத்திருந்ததாக, இலங்கையைச் சேர்ந்த ஜாகீர்உசேன் (37) என்பவர் கைது செய்யப்பட்டார்.

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர் தன்னை சென்னைக்கு உளவு பார்க்க அனுப்பியதாக ஜாகீர்உசேன் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டது. அவனிடம் நடத்தப்பட்ட 3 நாள் விசாரணையில் மேலும் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டதாக தெரிய வந்துள்ளது.

மும்பையில் தாக்குதல் நடத்தியதுபோல, பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தமிழகத்தின் மீதும் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி உள்ளனர். அதற்கு இலங்கையை ஒரு தளமாக பயன்படுத்துவார்கள். இலங்கையில் தங்கி இருந்து கொண்டு, கடல் வழியாக ஊடுருவி வந்து, தமிழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம். தீவிரவாதிகளின் முதல் இலக்கு, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம். அடுத்த இலக்கு பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகம்.

இதுபோல அடுத்தடுத்து, தமிழகத்தின் பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. இந்த தாக்குதல், செப்டம்பரில் நடக்கும் விநாயகர்சதுர்த்தி திருவிழா, ஆகஸ்டு-15 சுதந்திர தினவிழா அல்லது டிசம்பர்-6-ந் தேதி பாபர்மசூதி இடிப்பு தினம் ஆகிய நாட்களில் அரங்கேற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாகீர் உசேனைப் போல மேலும் 2 உளவாளிகளை, சென்னை நகருக்குள் ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். அவர்களை சென்னையில் தங்க வைக்க, இடம் பார்க்கும் வேலையும், ஜாகீர் உசேனிடம் கொடுக்கப்பட்டது. அந்த உளவாளிகள் இருவரும் தீவிரவாத பயிற்சி பெற்றவர்கள் என்றும், அவர்களை கட்டுமான தொழிலாளர்களைப் போல, சென்னையில் தங்கவைப்பதற்கும், ஜாகீர் உசேன் ஏற்பாடு செய்துவந்ததாக தெரிகிறது. அதற்குள் அவர் காவல்துறை கையில் சிக்கிவிட்டார். ஆனாலும், அந்த உளவாளிகள் இருவரும், சென்னை நகருக்குள் கண்டிப்பாக ஊடுருவி வந்து, பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாகவும், அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த உளவாளிகளின் பெயர் விவரங்களை, ஜாகீர் உசேன், கியூ பிரிவு காவல்துறையினர் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், கியூ பிரிவு காவல்துறையினர், அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். ஜாகீர் உசேன் கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையிலும், ஜாகீர் உசேன் தான் வைத்திருந்த செல்போன் மூலம், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் அடிக்கடி தொடர்புகொண்டு பேசிய, செல்போன் பேச்சு மற்றும் சில முக்கிய ஆதாரங்கள் அடிப்படையில், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் பாஸ் என்ற ஷா, அமீர்சுபேர்சித்திக் ஆகிய இருவர் மீதும், கியூ பிரிவு காவல்துறையினர், சட்டவிரோத வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அவர்கள் இருவரையும் கைது செய்து சென்னைக்கு கொண்டுவரவும், மத்திய அரசின் வெளிவிவகாரத்துறை மூலம் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் கியூ பிரிவு காவல்துறை வட்டாரம் தெரிவித்தது. ஜாகீர் உசேனுடன் சேர்ந்து, செயல்பட்டதாக இன்னொரு இலங்கை ஆசாமி சிவபாலன், சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சலீம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களையும் காவலில் எடுத்து விசாரணை நடத்திட, கியூ பிரிவு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com