Thursday, May 22, 2014

ஜனாதிபதி மஹிந்தவுக்கு சீன ஜனாதிபதி புகழாரம்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இலங்கை துரித வளர்ச்சியடைந்துள்ளதாக, சீன ஜனாதிபதி புகழாரம் சூட்டியுள்ளார். ஆசிய நாடுகளுக்கு இடையிலான செயற்பாடுகள் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவது தொடர்பான 4வது மாநாடு நடைபெற்று வரும் நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சீன ஜனாதிபதி சீ ஜின் பிங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று சங்ஹாய் நகரில் நடைபெற்றது.

இதன் போது இரு நாடுகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் வளர்ச்சி தொடர்பாக அதிக அவதானம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளதுடன் சர்வதேச ஊடக பிரிவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு சீனா வழங்கி வரும் பங்களிப்பு தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இச்சந்திப்பின் போது தெரிவித்தார். அத்துடன் தனது கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் நாட்டை அபிவிருத்தி பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கு சீனா வழங்கி வரும் பங்களிப்பை தான் மதிப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கை விசேட முக்கியத்துவம் வாய்ந்த நாடு என தெரிவித்த சீன ஜனாதிபதி இரு நாடுகளுக்கு இடையில் உறவுகள் மிகவும் உயர்ந்த நிலையில் வளர்ச்சியடைந்து வருவதாகவும் தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான கடற்படை ஒத்துழைப்பு தொடர்பாக இப்பேச்சுவார்த்தையின்போது அவதானம் செலுத்தப்பட்டது.

சீனா அறிமுகப்படுத்திய பட்டு வீதி திட்டத்திற்காக இலங்கை அதிகபட்ச உதவிகளை வழங்குமெனவும் ஜனாதிபதி இச்சந்திப்பின்போது மேலும் கூறினார். இலங்கையின் ஆதரவை மதிப்பதாக தெரிவித்த சீன ஜனாதிபதி இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக திகழும் இலங்கை அப்பிராந்தியத்தில் சிறந்த பாரிய சேவைகளை ஆற்றி வருவதாகவும் சுட்டிக்காடட்டினார். ஐ.நா மனித உரிமை பேரவையின் போது சீனா வழங்கிய ஆதரவிற்காக ஜனாதிபதி தனது நன்றியை தெரிவித்தார்.

ஒரே சீனா எனும் கொள்கையை உயர்நிலையில் வைப்பதற்காக இலங்கை தொடர்ந்தும் உதவி வழங்குமென்றும் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை சீனாவுடன் இணைந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு, சுற்றுலா, இணையத்தள கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக இப்பேச்சுவார்த்தையின் போது அவதானம் செலுத்தப்பட்டது. இலங்கை சீனாவை சுற்றுலா துறையின்கேந்திர நிலையமாக இனங்கண்டுள்ளதுடன் 2016 ஆம் ஆண்டளவில் 2 இலட்சத்து 75 ஆயிரம் சீன உல்லாச பயணிகளை இலங்கைக்கு தருவிப்பது தமது பிரதான நோக்கம் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இணையத்தளங்கள் ஊடாக ஒரு சில நாடுகளின் ஸ்தீரமின்மையை ஏற்படுத்தும் செயல்பாடுகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர்மேலும் கூறினார். இதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுமென்றும் ஜனாதிபதிசுட்டிக்காட்டினார். அத்துடன் இலங்கையில் இடம்பெற்று வரும் துரித அபிவிருத்தி திட்டங்களை காண்பதற்கு வருகை தருமாறு சீன ஜனாதிபதி சி ஜின் பிங்கிற்கு அழைப்பு விடுத்தார்.

இதன் மூலம் சீனாவின் உதவியில் இலங்கையில் இடம்பெறும் அபிவிருத்திகளை அவதானிக்கும் வாய்ப்பு உருவாகும். 1986 ஆம்ஆண்டிலேயே சீன உயர்மட்ட தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருகை தந்ததாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுக் கொண்ட சீன ஜனாதிபதி சி ஜின் பின் இலறஙகைக்கு விஜயம் செய்வதில் தான் பெரும் ஆர்வத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தார். அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷெனுகா செனவிரத்ன, சீனாவுக்கான இலங்கை தூதுவர் ரஞ்சித் உயன்கொட, ஜனாதிபதி ஊழியர் செயலணியின் தலைவர் காமினி செனரத் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com