Wednesday, May 7, 2014

பத்மா இளங்கோவனின் செந்தமிழ் மழலைப் பாடல்கள், செந்தமிழ் சிறுவர் பாடல் மீது ஒரு பார்வை..! இரா. சம்பந்தன்

கவிதையென்றால் என்ன..? அதன் பாடுபொருள் தனிமனித வாழ்வா..? சமுதாயமா..? இயற்கையா..?எதைப்பற்றியதாகவும் இருக்கலாம்..! ஆனாலும் மானுடத்தின் விடிவுக்காக ஏதாவது ஒன்றைச் சொல்லியிருக்க வேண்டும்..!

மனித வாழ்வின் மகிழ்ச்சி, புன்னகை சார்ந்திருப்பதோடு, கண்ணீர், வியர்வை, விம்மல், காயங்கள் எதையும் தவறாமல் கவனத்திலெடுத்து மொழியின் அழகுக் கூறுகளில் கலவையாக்கி ஓரளவாவது இலக்கண நீரூற்றிப் படைப்பாளி கவிதை மாளிகையை நிர்மாணிக்க வேண்டும். அங்கே வாசகர்கள் விருப்போடு உள்நுழைந்து அனுபவிக்க வேண்டும்.

சிறுவர்களுக்கான பாடல்கள் புனைவதென்பது சிரமத்திற்குரிய விடயமென்றே கூறிவிடலாம். பெருங்கவிஞர்கள்கூட இப்பணியிலிருந்து விலகி பின்வாங்கிவிடுவதுண்டு. சிறுவர் இலக்கியம் - பாடல்கள் படைக்கும்போது மிகமுக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது, எளிமையான நடைதனிலே - இலகுதமிழ்ச் சொற்களிலே பாடல்கள் அமைதல் வேண்டும். சிறுவர்களின் உள்ளங்களில் அப்பாடல்கள் அழிக்கமுடியா வர்ணங்களாய் தீட்டப்பட வேண்டும். ஓசை நயம் கோலோச்ச, எதுகை மோனை கைகோர்த்து ஜோடியாக நடைபயின்று ஏதாவதொரு கருத்தை எடுத்துக்கூறி, சிறுவர்களின் சிந்தனா சக்தியைத் தூண்டித் தூண்டித் தூண்டாமணி விளக்காக ஒளிபெறச் செய்வதென்பது படைப்பாளியின் பாரிய கடமையாகும்.

இதுவரை யான் கூறியதிலிருந்து எள்ளவும் பிசகாமல் மிகவும் நேர்த்தியாக சிறுவர் இலக்கியமான பாலர் பாடல்களைத் திருமதி பத்மா இளங்கோவன் படைத்துக்கொண்டிருக்கிறார். அண்மையில் அவர் வெளியிட்ட இரு நூல்களைப் பார்க்கக்கூடிய அரிய வாய்ப்பெனக்குக் கிட்டியிருந்தது.

முதலாவது செந்தமிழ் மழலைப் பாடல்கள், அடுத்தது செந்தமிழ் சிறுவர் பாடல்.
முதலாவது நூலில் முதலாவது பாடல்... ..

'குழந்தைகளே குழந்தைகளே
ஓடி வாருங்கள்
கொஞ்சு தமிழ்ப் பாடல்களைப்
பாடிப் பாருங்கள்..!'

எதுகை, மோனை மட்டுமல்லாமல் எளிமையான நடையுமல்லவா..!
இப்பாடல் குழந்தைகளின் உள்ளங்களில் பூச்சொரியும்.

'அல்லா, புத்தர், சிவன், யேசு
என்றே கடவுள் பல இருந்தும்
எல்லார் வழியும் ஒன்றே யாம்
அன்பே கடவுள் அறிவோம் நாம்..'

என்ற பாடல் ஒன்றே குலம், ஒருவனே தேவன், அன்புதான் கடவுள் என்பதையும் ஆணித்தரமாக எடுத்தியம்புகின்றது.

'அழகிய சின்ன வீடு
அதுவே எமது கூடு
அப்பா அம்மா வோடு
அன்பாய் வாழும் வீடு..'

இப்பாடலில் ஓசைநயம் சிம்மாசனமிட்டுக் கோலோச்சுகின்றது. மழலைகள் இப்பாடலை எக்காலத்திலும் மறந்துவிட முடியாது..!

'பசுவே பசுவே வருவாயா... ..' என்ற பாடலில் கன்று பட்டினியாக இருக்கக்கூடாது.. அதுகண்டு தாய்ப்பசுவும் வேதனையுறக்கூடாது..

கன்றுக்குப் பாதி, குழந்தைக்குப் பாதி..! இங்கே கவிஞரின் மனிதநேயம் எம் கண்முன்னே மின்னலடிக்கிறது.

'சின்னச் சின்னப் பூக்கள்... ..' பாடல் மூலம் பூக்களின் புன்னகையை எம் கண்முன்னே நிறுத்துகின்றார்.

'கா... கா... என்றே கரைந்திடுவாய்..' என்ற பாடலில், எள்ளானாலும் ஏழாய்ப் பகிர்ந்துண்.. என்ற வாக்கியத்தில் கூறப்படுவதுபோல் வாழ்வது மனிதனா..? காக்கைகளா..? சிறார்கள் தெரிந்துகொள்ள வேண்டியதைத் தெளிவாகவே கூறியிருக்கிறார்.

'நம்பிக்கை' என்ற தலைப்பிலான பாடல் சிறுவர்களின் நெஞ்சங்களில் நம்பிக்கை விதைகளைத் தூவிச் செல்கின்றது.

'நெஞ்சில் உரம் கொண்டிருந்தால்
நொருங்கி விழும் துயர்களப்பா... ..' எவ்வளவு அழகான வரிகள். துயர்துடைக்கும் சஞ்சீவி வரிகளப்பா..!

இந்த நூலின் பல பாடல்கள் இனிமையாகவும் எளிமையாகவும் அமைந்திருக்கின்றன. பல பாடல்கள் சிந்தனையைத் தூண்டும் கருத்துக்களை உவமையணியோடு இணைத்துப் பாலோடு தேன் கலந்து சிறுவர்களைப் பருகிடச் செய்திருக்கின்றார்.

இந்நூல் கவிஞரின் கவித்துவத்துக்கு அணிசேர்த்துள்ளது என்பதை எவரும் மறுத்துவிட முடியாது..!

சிறுவர் இலக்கியத்தளத்தில் தனக்கென்றோர் தனியிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் பத்மா இளங்கோவனின் இன்னொரு நூலான செந்தமிழ் சிறுவர் பாடல் என் பார்வையில் பதிந்தபோது, பல பாடல்களை இலகுவான நடைதனில் மிகவும் நுணுக்கமாகவும், இலாவகமாகவும் கருத்துச்செறிவு அங்கங்கே கண்சிமிட்ட, ஓசைநயம் மெட்டமைக்க எல்லாப் பாடல்களுமே விரைந்து சென்று குழந்தைகளின் உள்ளங்களில் கொலுவிருக்கக்கூடியதாக வடிவமைத்துள்ளார்.

நீண்டகால ஆசிரியப்பணி, பாலர் கல்வியில் விசேட பயிற்சி பெற்றமை, கல்லூரி நாட்களில் கவிதாவுலகின் நீள அகலங்களைத் தெரிந்து வைத்திருந்தமை அவருக்குக் கைகொடுத்து அவரை ஏணியிலே ஏற்றிவிட்டிருக்கின்றது.

இந்நூலின் முதலாவது பாடலில் பொன்னையூற்றி வார்க்கும் வண்ண வரிகளாக இவ்வரிகளை வார்த்தெடுத்திருக்கின்றார்.

அந்த முத்துதிர்க்கும் பாடலிதோ... ..
'தாயின் பாலைப் போலவே
தாய் மொழியும் பலம்தரும்
வாயில் பேச்சு ஒலிக்கையில்
விரும்பிக் கேட்க வைத்திடும்..'

தாய்ப் பாலென்பது ஒளடதம்போல் அமைவதோடு, அஜீரணமின்றி ஊட்டச்சத்துக்களை வழங்கி, நோயெதிர்ப்புச் சக்தியையும் வழங்குகின்றது. அதுபோல் தமிழ்மொழியும் அவசியமானதென்பதை அகிலத் தமிழினத்திற்கு அறியத்தந்திருக்கின்றார்.

'தாய்த் திருநாள்' என்ற தலைப்பிலான பாடலில்...

'ஆயிரம் மலர்களின்
அழகினைக் காணலாம்
அம்மா உந்தன்
முகம் போலாகுமா.?'

மலர்களின் வர்ணங்களையும், வண்ணங்களையும் விஞ்சிவிட்ட வடிவழகு தாயின் வதனமென்றும் வாசமலர்களின் வாசத்தைவிடப் பாசமலரான தாய்ப்பாசமே உலகில் தலைசிறந்ததென்றும் அறிவிப்பதோடு, அவர் தாய்மேல் கொண்டுள்ள தணியாத தாகமும் அந்த வைர வரிகளில் மின்னுகின்றது.

'குருவிகளே... குருவிகளே...' என்ற தலைப்பிலான பாடலில், 'தத்தித் தத்தித் ததிக்கிடத்தோம்..' என்ற வரிகளில் நாட்டிய - நடனக் கலையையும், 'அருவிபோல் அழகாய் வந்து மண்ணில் இறங்குகிறீர்..' என்ற வரிகளில் இசையோடு பாடிக்கொண்டே அருவி மண்ணில் இறங்குவதுபோல் குருவிகளும் மண்ணில் இறங்குவதையும், மீண்டும் பறக்கும்போது ஏவுகணைகளைப்போல் மிக விரைவாகச் சிறகு விரிப்பதையும் எம் கண்முன்னே விரிக்கின்றார்.

இந்நூலின் கடைசிப் பக்கத்தில் அமைந்துவிட்ட 'அழகே தான்...' என்ற தலைப்பிலான பாடல்... இல்லை.. இல்லை கவிதையென்றே கூறலாம். எல்லாப் பாடல்களிலும் தலைசிறந்ததாகத் தெரிகின்றது. இந்தப் பாடலில் பெருங்கவிஞரையே நாம் தரிசிக்கக்கூடியதாகவிருக்கின்றது..!

'சிரிக்கும் சின்ன விழிகளில்
சுடரும் ஒளி அழகுதான்
விரிந்து கிடக்கும் உலகிலே
வண்ணக் கோலம் நீங்களே..' - என்ற வரிகளில், சின்ன விழிகளில் சுடரொளியையும், உலகத்தின் மொத்த அழகெல்லாம் மழலைகள் என்றும், தொடர்ந்து வரும் வரிகளில் பனிமலர்களென்றும், கிளிமொழி பேசுபவரென்றும், சிவந்த பாதம் கொண்டவரென்றும், வஞ்சமிலா நெஞ்சங்கொண்டு நெஞ்சைக் கொள்ளை கொள்பவர் என்றம் வர்ணனைகள் செய்கின்றார்.

அதே பாடலில்...

'கறுப்பு சிவப்பு வெள்ளையென்று
கவலை ஏதும் கொள்ளாமல்
வெறுப்பு பேதம் இன்றியே
வாழும் விந்தை அழகுதான்..!' - என்று இன, மத, மொழி, நிற பேதங்கள் கடந்த சமத்துவ வாழ்வின் அழகினைக் காட்டுகின்றார்.

'உலகம் உயர வேண்டி - நீங்கள்
உழைப்ப தென்றும் அழகுதான்
விலையே போக முடியா - உங்கள்
வீரம் மானம் அழகுதான்..!' இப்பாடலில் உனக்காக மட்டுமல்லாமல், உலகத்திற்காக உழைக்க வேண்டுமென்றும், விலை போகா வீரம் , மானம் தமிழர்க்கு அழகு என்பதையும் உணர்த்துகின்றார்.

'அகதி வாழ்வின் போதும் - நீங்கள்
உரைக்கும் தமிழ் அழகுதான்
சுகமாய் வாழ்ந்த போதும் - மண்ணின்
சாகா நினைவு அழகுதான்..!' இந்த நான்கு வரிகளுக்குள் எத்தனை உணர்வுகள் தெறிக்கின்றன. அகதி வாழ்வின் அவலங்களுக்குள்ளும் பெற்றோர் தம் சிறார்களுக்குத் தமிழைக் கற்பித்து வருகிறார்களென்றும், மண்ணின் நினைவுகள் மனதைவிட்டகலாதவை என்றும், சுகமாய் வாழ்ந்த போதும் துடைத்தெறிய முடியா சோகம் நெஞ்சக் கூட்டில் படிந்து கிடப்பதையும் நிதர்சனமாகக் காட்டுகின்றார்.

பத்மா இளங்கோவனின் இரு நூல்களான 'செந்தமிழ் மழலைப் பாடல்கள்', செந்தமிழ் சிறுவர் பாடல்' என்பன கவிநயம், ஓசைநயம், மொழியின் வீச்சு மட்டுமல்லாமல் பலவிதமான கருத்துக்களையும் உள்ளடக்கியிருப்பதோடு, கல்வி கற்கும் சிறார்கள் மொழியில் ஆளுமை பெறுவதற்கும், கவித்துவமுள்ள சிறார்கள் எதிர்காலத்தில் கவிதைகள் எழுதுவதற்கு இந்நூல்கள் கைநூல்களாக அமையும் என்பதையும் கூறிவிட முடியும்..!

தாயகத்தில் நன்கறியப்பட்ட ஆசிரியரும், படைப்பாளியுமான பத்மா இளங்கோவன் அவர்களது ஆக்கங்கள், ஐரோப்பாவிலும் வெளிவந்த, வெளிவருகின்ற பத்திரிகை, சஞ்சிகைகளிலும், வானொலி, தொலைக்காட்சிகளிலும் வெளியாகியுள்ளன. இவரது அரும்பணி மென்மேலும் தொடர வாழ்த்துவோமாக..!

- 'கவிவாணன்' இரா. சம்பந்தன்
ராட்டிங்கன், ஜேர்மனி.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com