Friday, May 30, 2014

முன்னாள் உளவுப் பிரிவு தலைவர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம்!

முன்னாள் உளவுப் பிரிவு தலைவர் அஜித் தோவல், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றவுடன், மத்தியில் நடக்கும் இரண்டாவது முக்கிய நியமனமாக இது கருதப்படுகிறது. முன்னதாக பிரதமரின் முதன்மை செயலராக நிருபேந்திர மிஷ்ரா நியமிக்கப்பட்டார்.

அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, வெள்ளிக்கிழமை முதல் இந்த நியமனம் அமலுக்கு வருகிறது. பிரதமர் பதவியிலிருக்கும் வரை அல்லது மேற்கொண்டு உத்தரவுகள் வரும்வரை தோவல் இந்தப் பதவியில் நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி பிரதமரான நிமிடத்திலிருந்தே தோவல் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்ற யூகங்கள் பரவின. அவர் மோடியை ஏற்கனவே குஜராத் பவனில் சந்தித்து நாட்டின் பாதுகாப்புக்கு இருக்கும் சவால்களைப் பற்றி ஆலோசித்துள்ளார்.

தோவல், கடந்த 2005-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உளவுப் பிரிவு தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர். ராணுவம் தரும் கௌரவமான, கீர்த்தி சக்ரா விருதைப் பெற்ற முதல் காவல்துறை அதிகாரி என்ற பெருமையை பெற்றவர் தோவல். 1968-ஆம் ஆண்டு ஐபிஎஸ் முடித்த அவர் உளவுப் பிரிவில் உள்ள சிறந்த அதிகாரிகளில் ஒருவர். 1999-ஆம் ஆண்டு நடந்த கந்தகார் விமானக் கடத்தலில், இந்தியாவுக்காக கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் முதன்மையானவர்.

பொலீஸ் அதிகாரியாக சில வருடங்கள் பணியாற்றிய பின், 33 வருடங்களுக்கும் மேலா உளவுப் பிரிவு அதிகாரியாக, வடகிழக்கு இந்தியா, ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களில் தோவல் பணியாற்றியுள்ளார். இந்த அனுபவத்தால் இந்தியாவிற்கு இருக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களைப் பற்றிய ஆழ்ந்த பார்வையை தோவல் தருவார் எனத் தெரிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com