Friday, May 2, 2014

யாழ்ப்பாணத்தில் முன்னாள் புலிகள்: பனைமரத்திலே வௌவாலா? புலிகளுக்கே சவாலா?

“விடுதலைப் புலிகளாகி போராட புறப்பட்டதால் இன்று நடுத்தெருவில் விடப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள்” என்று இலங்கை வடக்கு மாகாணம் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை விவசாய அமைச்சு அலுவலகத்தில் கால்நடை உற்பத்தி சுகாதார இலாகா, மற்றும் நீர்ப்பாசன இலாகாவில் பணிபுரிய 16 பேருக்கு நியமன கடிதங்களை வழங்கி வைத்து உரையாற்றிய போது அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், “எங்களைச் சந்திக்க வருபவர்களில் அநேகர் வேலைவாய்ப்புக் கேட்டே வருகின்றனர். அந்த அளவுக்கு வேலையில்லாப் பிரச்னை இன்று வடக்கு மாகாணத்தில் உள்ளது. இவர்களிலும் முன்னால் விடுதலைப்புலி உறுப்பினர்களே அதிகம் சிரமப்படுகின்றனர்.

முன்னாள் விடுதலைப்புலிகளில் அநேகர் கல்வியை இடைநிறுத்தி யுத்தம் புரிய சென்றவர்கள். இவர்களிடம் கல்விச் சான்றிதழ்கள் இல்லை என்பதால், அரசுப் பணிகளை பெறமுடியாமல் உள்ளது. விடுதலைப்புலிகளாக போகாமல் இருந்திருந்தால் இவர்களும் ஏனையவர்களைப் போல உயர்கல்வியை முடித்து இன்று பொறியியலாளர்களாகவோ, மருத்துவர்களாகவோ, ஆசிரியர்களாக கூட வந்திருப்பார்கள்.

ஆனால், போராட்டம் என்று புறப்பட்டுத் தங்கள் கல்வியை இழந்த இவர்களை, எமது தமிழ் சமூகமே அரவணைக்கத் தயங்குகிறது.

நடுத்தெருவில் விடப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு தனியார் துறையினராவது வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க முன்வர வேண்டும்” என்று பேசினார்.

வாவ்… தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஒருவர்கூட இப்படி சென்சிபிளாக பேசுகிறார்! நம்பவே முடியவில்லை, இருப்பினும் வெல்டன் அமைச்சரே!

premium-idஇன்று இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் நிலைமை, நிஜமாகவே, அமைச்சர் கூறியதுதான்.

1) யுத்தம் முடிந்தபின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் அநேகருக்கு, அரசு வேலைகளை பெறக்கூடிய கல்வித்தகுதி கிடையாது.

2) தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் உள்ள அநேக தனியார் நிறுவனங்கள், “ஓ.. வன்னியில் இருந்தீர்களா?” என்ற கேள்வியுடன், கும்பிடு போட்டு அனுப்பி விடுகிறார்கள். நாளைக்கே இவர்கள் மீண்டும் துப்பாக்கி தூக்கினால் தமக்குத்தானே சங்கடம் என்பதே பலரது நினைப்பு.

3) 9 மாகாணங்கள் உள்ள இலங்கையில் 100 சதவீதம் தமிழ் பேசும் வடக்கு மாகாணத்தில், இதுதான் நிலை. மற்ற மாகாணங்களில் வேலை தேட வேண்டுமானால், சிங்களம் தெரிந்திருக்க வேண்டும். (கல்வித் தகுதி இல்லாமல், தமிழும் தெரியாமல், மராத்தி மொழி மட்டும் பேசும் நபர், தமிழகத்தில் வேலை வாய்ப்பு பெறுவது, எந்தளவுக்கு சாத்தியம்?)

4) தமிழ் பேசும் மாகாணத்தைவிட்டு, மற்ற 8 மாகாணங்களுக்கு (கிழக்கு மாகாணத்தில் 50 சதவீதம் தமிழ் உண்டு. அங்கும் முன்னாள் விடுதலைப் புலிகள் வேலை தேடியபடி உள்ளனர்) வேலை தேடி போக சிங்களம் படிக்கலாமா…?

“ஐயகோ, சிங்கள திணிப்பு” என்கிறது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

“உசிரே போனாலும் சிங்களம் மட்டும் கற்காதீர்கள்” என்கிறார்கள், தமது குழந்தைகளுக்கு ஆங்கிலம், பிரெஞ்ச், ஜேர்மன், கற்றுக்கொடுத்துள்ள வெளிநாட்டு தமிழர் அமைப்பினர்கள்.

5) தனியார் வேலையும் கிடையாது, வவுனியாவுக்கு தெற்கே போக மொழியும் தெரியாது என்ற நிலையில், முன்னாள் புலிகளுக்கு பரிச்சயமான விஷயத்தை (ஆயுதப் பயிற்சி) வைத்து இலங்கை ராணுவத்தில் சேரலாமா?

“இனவாத சிங்கள ராணுவத்துக்கு ஆள் பிடிக்கிறார்களே.. இந்த கொடுமையை கேட்பார் இல்லையா?” என்று விக்கி விக்கி அழுகிறார்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள். (சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் இலங்கை ராணுவ தொண்டர் படைக்கு விளம்பரப்படுத்தப்பட்ட 70 வெற்றிடங்களுக்கு விண்ணப்பித்த தமிழர்கள், சுமார் 650 பேர்)

ஓகே.. ஓகே.. இந்த முன்னாள் விடுதலைப் புலிகளை என்ன செய்யலாம்? வேறு எந்த சாய்ஸூம் இல்லையா அவர்களுக்கு?

ஏனில்லை.. தாராளமாக உள்ளது.

1) “சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சிக்கான தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் இப்போது தென்னாபிரிக்காவில் தொடங்கவுள்ளது (இதற்குமுன் 30 வருடங்களாக, இந்தியா, பூட்டான், தாய்லாந்து, சுவிட்சலாந்து, நார்வே என நாடுநாடாக நடந்தது).

தீர்வு கிடைத்ததும், உங்களை கவனிக்கிறோம். அதுவரை பல்லைக் கடித்துக்கொண்டு, அவ்வப்போது எங்களுக்கு ஓட்டு போட்டுக்கொண்டு இருங்கள்” என்கிறது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

2) “கல்வி, வேலைவாய்ப்பு எல்லாம் எதுக்குங்க… இலங்கையின் எந்தப் பகுதியிலாவது ஒரு சிறிய வெடிகுண்டை வெடிக்க வையுங்கள் போதும். நாம் மாதாமாதம் பணம் அனுப்புவோம்.

அப்படியே, “இதோ வந்துவிட்டது புலி” என்று சொல்லி வெளிநாட்டில் நாமும் கொஞ்சம் வசூல் செய்ய உதவியாக இருக்கும்” என்கிறார்கள், வெளிநாட்டு புலிகளின் ‘நெடியவன் படையணி’, ‘விநாயகம் ரெஜிமென்ட்’.

(நம்பினால், நம்புங்கள்… இந்த சாய்ஸில்தான் சமீபத்தில் உயிரை விட்டார்கள், புலிகளின் புதிய தலைவர் கோபி, மற்றும் சிலர்)

3) “கனல்போல் கண்சிவந்து, தணல் ஆற்றை தாண்டிக் குதித்த வீர மறவா.. அவசரப்படேல்! ரகசியத் தளத்தில் திட்டம் தீட்டும் தேசியத் தலைவர் பிரபாகரன், கத்தியுடன் கடிது வருவார் (எப்பங்க?). அவ்வணியில் இணைத்து, சிங்களச் செருக்கர்களை கிறுக்கர்களாக ஓடவைக்க, நின் தோள்வலிமை காட்ட தயாராக காத்திரு” என்கிறார்கள், செந்தமிழன் சீமான், வைகோ, நெடுமாறன்.

ஒருவேளை இவர்கள் சொல்வது உண்மையாக இருக்குமோ?

இருக்கலாம். ஏனென்றால்-

சிங்களச் செருக்கர்களை கிறுக்கர்களாக ஓடவைக்க சீமான் அனுப்பப்போகும் தேசியத் தலைவரின் தாயாரின் இறுதிக் காலத்தில், மருத்துவ சிகிச்சைக்காக யாழ்ப்பாணத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில்கூட வைத்து பராமரிக்க முடியாதவர்கள் அல்லவா..!

தடுப்பில் இருந்து சுதந்திரமாக விடுவிக்கப்பட்ட (பிரபாகரனின் தாயார்) பார்வதி அம்மாள், யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றது, அரசு பொது மருத்துவமனையில்! சிங்கள ஏகாதிபத்திய அரக்க அரசு செலவில்!!

இதில், “பனைமரத்தில் வௌவாலா.. புலிகளுக்கே சவாலா?” என்ற வீரப் பாடல் ஒலிக்க வெளிநாடுகளில் நிதி வசூல்வேறு நடக்கிறது!




நன்றி விறுவிறுப்பு

1 comments :

Arya ,  May 2, 2014 at 7:24 PM  

யாருக்காக இவர்கள் போராடினார்கள் ? பிரபாகரனின் கொலை வெறிக்கு உதவினார்கள் , ஈழ போராட்டம் மே மாதம் 6ம் திகதி 1986 ம் ஆண்டு ஸ்ரீ சபாரத்தினம் அவர்களை புலிகள் கொலை செய்ததுடன் முடிவடைந்து விட்டது , பின்பு நடந்தது எல்லாம் பிரபாகரனில் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதக்கான பயங்கரவாத நடவடிக்கைகளே.

மாற்று இயக்கவத்தவர்களும் புலிகளின் ஆட்சிகாலத்தில் மிக பெரிய கொடுமைகளை அனுபவித்தார்கள் , யாரும் அவர்களுக்காக வாய் திறந்து பேச வரவில்லை.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com