Sunday, May 11, 2014

நடிகரை பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த துணை நடிகை!

பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த ஆத்திரத்தில் நடிகரை பாலில் விஷம் கலந்து கொடுத்து துணை நடிகை கொலை செய்துள்ளார். கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம், பரப்பாடி இளங்குளம் மெயின்ரோட்டை சேர்ந்த சூசைமரியான் என்பவரின் மகன் ரெனால்டு பீட்டர் பிரின்ஸ் (36). அவருடைய மனைவி சோனா. இவர்களுக்கு ஐபெல், ஆஸ்பெல் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் பீட்டர் பிரின்ஸ் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வந்தார்.

தொழில் விஷயமாக அவர் அடிக்கடி சென்னை சென்றார். பின்னர் கம்ப்யூட்டர் மையங்களை வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டு, சென்னை மதுரவாயலில் வீடு எடுத்து தனியாக தங்கினார். சென்னையில் இருந்தபடி, ஆன்லைன் மூலம் அரிசி, பருப்பு போன்ற உணவுப்பொருட்களை மொத்தமாக வாங்கி, விற்கும் வியாபாரம் செய்துவந்தார். சினிமா படங்களுக்கும் பைனாஸ் செய்தார்.

'காகிதபுரம்' என்ற படத்தில் கதாநாயகனாகவும் பீட்டர் பிரின்ஸ் நடித்தார். "கொக்கிரகுளம்-நெல்லை மாவட்டம்" என்ற படத்திலும் நடித்து இருக்கிறார். ஆனால், இந்த படங்கள் இன்னும் வெளிவரவில்லை. நேரம் கிடைக்கும்போது சொந்த ஊருக்கு வந்து, மனைவி, குழந்தைகளை பார்த்துச் சென்றார். கடந்த சில மாதங்களாக அவர் ஊருக்கு வரவில்லை.

இந்நிலையில், சினிமா துணை நடிகை சுருதி சந்திரலேகா (25) என்பவர் கடந்த ஜனவரி 18ஆம் தேதி, சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், 'தன்னுடைய கணவர் பீட்டர் பிரின்ஸ் என்பவரை சில நாட்களாக காணவில்லை. அவரை கண்டுபிடித்து தரவேண்டும்' என்று கூறியிருந்தார்.

பீட்டர் பிரின்ஸ் சொந்த ஊருக்கும் வராததால், அவருடைய குடும்பத்தினருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவருடைய அண்ணன் ஜஸ்டின் பிரின்சோ, கடந்த மாதம் 13ஆம் தேதி பாளையங்கோட்டை காவல் நிலையத்திலும் அதுபற்றி புகார் கொடுத்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், பீட்டர் பிரின்சின் காரை மதுரை திருமங்கலத்தில் வேறு ஒருவர் வைத்து இருந்ததை அவரது அண்ணன் ஜஸ்டின் கவனித்தார். அதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். தீவிர விசாரணைக்கு பின்னர், பீட்டர் பிரின்ஸ் கொலை செய்யப்பட்டதும், அவருடைய உடல் பாளையங்கோட்டை ஆசீர்வாத நகரில் புதைக்கப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் தெரியவந்தன. பீட்டர் பிரின்சும், நெல்லை டவுனை சேர்ந்த உமாசந்திரன் என்பவரும் ஆன்லைன் வியாபாரத்தில் கூட்டாளிகளாக செயல்பட்டு வந்தனர். திடீரென்று தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை பிரின்சிடம், உமாசந்திரன் கேட்டார். ஆனால், அவர் பணம் தரமுடியாது என்று மறுத்துவிட்டார். அதன் பின்னர் இருவரும் விரோதிகளாக ஆகிவிட்டனர். பின்னர் ஆன்லைன் வர்த்தகத்தை விட்டு, சினிமா மீது பிரின்ஸ் முழு கவனம் செலுத்தினார்.

சென்னையில் 'சம்பவி' என்ற படத்தின் படப்பிடிப்பின்போது பீட்டர் பிரின்சுக்கும், துணை நடிகை சுருதி சந்திரலேகாவுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் அடிக்கடி இருவரும் சந்தித்துக்கொண்டனர். பிரின்சிடம் பணப்புழக்கம் இருந்ததை கவனித்த சந்திரலேகா, அவரை வளைத்துப்போட்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று முடிவு செய்தார். அதன்படி இருவரும் கணவன்-மனைவியாகவே வாழத்தொடங்கினர்.

பீட்டர் பிரின்சுக்கு வேறு சில பெண்களுடனும் தொடர்பு இருந்தது சந்திரலேகாவுக்கு தெரியவந்தது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பிரின்ஸ் வீட்டுக்கே பெண்களை வரவழைத்து உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பிரின்ஸ் மீது சந்திரலேகாவுக்கு வெறுப்பு ஏற்பட்டது.

அதே சமயம் பிரின்சை எப்படியாவது பழிவாங்கிவிட வேண்டும் என்று உமாசந்திரனும் காத்து இருந்தார். அப்போதுதான், சந்திரலேகாவுடன் பிரின்ஸ் குடித்தனம் நடத்தி வருவது அறிந்து நடிகை மூலம் தனது திட்டத்தை நிறைவேற்ற நினைத்தார். ரகசியமாக சந்திரலேகாவை சந்தித்து 'பிரின்ஸ் இருவரையும் ஏமாற்றி விட்டார், எனவே அவரை தீர்த்துக்கட்டி விடலாம்' என்று கூறியதாக தெரிகிறது. முதலில் பயந்த சந்திரலேகாவை, நைசாக பேசி சம்மதிக்க வைத்தார்.

திட்டமிட்டபடி கடந்த ஜனவரி 18ஆம் தேதி, பிரின்ஸ் சென்னையில் உள்ள வீட்டில் இருந்தார். சந்திரலேகா அப்போது விஷம் கலந்த பாலை கொடுத்துள்ளார். அதை குடித்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த பிரின்சை வீட்டின் மற்றொரு இடத்தில் பதுங்கி இருந்த உமாசந்திரன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் கழுத்தில் நைலான் கயிற்றை இறுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் பிரின்சிடம் இருந்த ரூ.75 லட்சம், 14 பவுன் சங்கிலி, வைர மோதிரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

பிரின்சின் உடலை காரில் பாளையங்கோட்டைக்கு கொண்டு வந்து ஆசீர்வாதநகரில் குழிதோண்டி புதைத்தனர். இந்த சதி வேலைக்கு பாளையங்கோட்டையைச் சேர்ந்த 3 பேர் உடந்தையாக இருந்து பணத்தை பங்கிட்டுக்கொண்டனர். பிரின்சின் காரை வைத்திருந்த நாகர்கோவிலை சேர்ந்த சுனில்குமார், 'உமாசந்திரன் என்பவரிடம் இருந்து ரூ.5 லட்சம் பேசி, ரூ.1 லட்சம் முன்பணம் கொடுத்து வாங்கி இருக்கிறேன்' என்று தெரிவித்தார். இதன்மூலமே கொலையாளிகள் பற்றி காவல்துறையினருக்கு தெரியவந்தது.

காவல்துறையினர் சென்னைக்கு விரைந்து உமாசந்திரனின் கூட்டாளிகளான பாளையங்கோட்டையை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் என்ற சதாம் (26), காந்திமதிநாதன் என்ற விஜய் (32), ரபீக் உஸ்மான் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் உமாசந்திரன், நடிகை சுருதி சந்திரலேகா மற்றும் பலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பீட்டர் பிரின்ஸ் உடலை நாளை தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com