Sunday, April 6, 2014

ஜ.ம.மு மற்றும் தமிழ் ஊடகங்கள் முன்பாகவுள்ள கட்டாய பிராயச்சித்தம்

நடைபெற்று முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இல்லாமற் செய்வது போல இத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. மேலைத்தேய நாடுகள் எமது நாட்டு உள்விவகாரங்களில் தலையிட்டு ஒரு ஜனநாயக நாட்டின் இறைமைக்குப் பங்கம் ஏற்படுத்த முனைந்துள்ள ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் தமது ஒற்றுமையை தமது வாக்குப் பலத்தின் மூலமாக மீண்டுமொரு தடவை நிரூபித்துள்ளனர் என்றே கூற வேண்டும்.

இத்தேர்தலில் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள பாரிய வெற்றியானது எதிர்க்கட்சிகளுக்கு இனிமேலும் இந்நாட்டில் ஆட்சி நடத்த இடமில்லை என்ற தகவலை மிகத்தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றது. அத்துடன் மக்கள் இந்த அரசாங்கம் மேற்கொண்டுவரும் அபிவிருத்திப் பணிகளை யும், சமாதான முயற்சிகளையும் ஏற்றுக் கொண்டுள்ளமையையும் தெளி வாகக் காட்டியுள்ளனர்.

இந்நிலையில் இத்தேர்தலில் தமிழ்பேசும் கட்சிகளின் நிலை என்ன வென்று ஆராய்ந்தால் வழமைபோலவே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வரும் முஸ்லிம் கட்சிகள் தனித்துப் போட்டியிட்ட போதிலும் வெற்றியைக் கண்டுள்ளன. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது மேல்மாகாணத்தில் இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது. இதிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் காலத்தில் மட்டும் அரசாங்கத்தை என்னதான் விமர்சித்தாலும் முஸ்லிம் மக்கள் அரசாங்கத்துடன் பங்காளியாக இருந்துவரும் முஸ்லிம் காங்கிர ஸிற்குத் தமது வாக்குகளை வழங்கி அரசாங்கத்திற்குத் தமது பூரண ஆதரவினை வழங்கியுள்ளனர்.

அதேபோன்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முதற் தடவையாக மேல் மாகாணத்தில் தனித்துப் போட்டியிட்டு ஓர் ஆசனத்தைப் பெற்றுள்ளது. இது அக்கட்சி யைப் பொறுத்த வரையில் ஒரு பாரிய வெற்றி என்றே குறிப்பிட வேண் டும். அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் ஒரு போதும் எச்சந்தர்ப்பத் திலும் அரசாங்கத்தை விமர்சித்தது கிடையாது. தேர்தல் கால பிரசாரத்தின் போதும் இதனைக் காணக்கூடியதாக இருந்தது.

முஸ்லிம் மக்களுக்கு தன்னால் மேற்கொள்ளக் கூடிய அனைத்துச் சேவைகளையும் அமைச்சர் ரிசாத் செய்துவருவதுடன் முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் சில பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தின் ஊடாகத் தீர்வும் கண்டு வருகிறார். இதனை மக்கள் வரவேற்றுள்ளனர் என்பது அவரது கட்சி வெற்றிபெற்றதிலிருந்து உறுதியாகியுள்ளது. இக்கட்சியுடன் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியும் இணைந்து போட்டியிட்டிருந்தாலும் அ.இ.ம.கா வின் வேட்பா ளர்கள் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளமையைத் தெளிவாகவே அவதானிக்க முடிகிறது.

இவ்விடத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியானது கொழும்பில் இம்முறை தனித்துப் போட்டியிட்டு இரண்டு ஆசனங்களை மட்டுமே பெற்று தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த மேல் மாகாண தேர்தலில் இக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு வைத்தமையால் மூன்று ஆசனங்களை இக்கட்சிக்குப் பெறக் கூடியதாக இருந்தது. இவர்கள் அந்த ஓர் ஆசனத்தை இழந்தது மட்டுமல்லாது தனித்துப் போட்டியிட்டமையி னால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒவ்வொரு தடவையும் கிடைத்துவரும் தமிழர் ஒருவரின் ஆசனத்தையும் இழக்க வைத்துள்ளனர்.

இம்முறை நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளை மிகவும் உன்னிப்பாக நோக்கினால் ஊடகங்களில் அதிகமாக மிகைப்படுத்திய செய்திகளையும், கட்டணம் செலுத்தி செய்த விளம்பரங்களை அதிகமாகச் செய்த வேட் பாளர்களே அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளமையைக் காண முடி கிறது. குறிப்பாகத் தமிழ் ஊடகங்களில் வழமைபோன்று தமிழ்த் தேசியம் பற்றியும், காணாமற் போனோர் பற்றியும் அதிகளவான பிரசாரம் செய்த மனோ கணேசன் அதிகமான தமிழர் விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். அதேபோன்று இன்னும் சிலரைக் குறிப்பிடலாம்.

இவ்வாறானவர்கள் கடந்த காலங்களில் வாக்களித்த மக்களுக்குச் செய்த சேவை என்னவென்று பார்த்தால் எதுவுமாக இருக்காது. பொதுவாகத் தேர்தல் பிரசாரங்களில் வாக்குகளைப் பெறுவதற்காக போட்டியிடுபவர்கள் மக்களுக்கு பொய்யாகவேனும் சில உறுதி மொழிகளை வழங்குவார்கள். ஆனால் இங்கு சிலர் அரசாங்கத்தை விமர்சித்து வெற்றி கண்டிருக்கிறார்கள். இதற்குத் தமிழ் ஊடகங்கள் அவர்களுக்காக கண்மூடித்தனமாக பிரசாரங்களை மேற்கொண்டி ருந்தன. இதன் மர்மத்தைக் கண்டு பிடிக்க வேண்டும்.

அத்துடன் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில வேட்பாளர்களும், கட்சிகளும் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவிட்டுள்ளன. விளம்பரங்க ளுக்காக இவர்களால் செலவிடப்பட்ட தொகையை மக்களுக்குச் செலவு செய்திருந்தால் கொழும்பில் பல தோட்டப்புறங்களில் மக்களின் வாழ்க் கைத் தரத்தை உயர்த்தி அவர்களது அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்திருக்கலாம். இன்று கொழும்பில் பல தோட்டப்புறங்களில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அவர்களது அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்திருக்கலாம். இன்று கொழும்பில் பல தோட்டங்களில் மக்கள் மலசலகூட வசதியின்றியும், குடிப்பதற்கு சுத்தமான நீர் இன்றியும் கஷ்டப் பட்டு வருகின்றனர்.

சில கட்சிகளும், வேட்பாளர்களும் தேர்தலில் வெற்றி பெற்று தமக்கு மாகாண சபையில் மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதியை விடவும் பத்து பதினைந்து மடங்கு பணத்தினை தேர்தல் பிரசாரத்திற்காகச் செலவிட்டுள்ளனர். அவர்களில் பலர் இத்தேர்தலில் வெற்றிபெறவும் இல்லை. இதில் பெருமளவிலான பணம் ஊடக நிறுவனங்களுக்கே செல விடப்பட்டுள்ளன. சில தமிழ் வேட்பாளர்கள் மக்களுக்கு பொருட்களையும், பணத்தினையும் இனாமாக வழங்கி தமது வெற்றியில் நம்பிக்கை வைத்திருந்தபோதிலும் மக்கள் அவர்களை ஏமாற்றியும் உள்ளனர்.

உண்மையில் இத்தேர்தலில் மக்கள் மனப்பூர்வமாக வாக்களித்தது என்றால் அது நிச்சயமாக அரசாங்கத்திற்கே என்பது புலனாகிறது. சிலரது தப்பான பிரசாரங்களினாலும், தனவந்தப் போக்கினாலுமே வாக்குகள் சிதற டிக்கப்பட்டனவே தவிர மக்கள் உளரீதியாக அரசாங்கத்துடன் நிற்கிறார்கள் என்பதை நிரூபித்துள்ளனர். தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் இன்னமும் தமிழ்த் தேசியம் பற்றிப் பேசுவோரின் மாயைப் பிடிக்குள் காணப்படு கின்றனர். அந்த மாயை அடுத்த தேர்தலுக்கு முன்னதாக வெளியே அம்பலத்திற்கு வரவுள்ளது.

தமிழ்த் தேசியம் பேசிவரும் ஜனநாயக மக்கள் முன்னணி கட்சிக்குள் இப்போது பாரிய வெளிக்காட்டா பிளவு ஏற்பட்டுள்ளது. அது அடுத்த சில வாரங்களுக்குள் வெடித்துச் சிதறவுள்ளது. அதற்கு முன்னதாக தாம் பெற்ற சிறு வெற்றியை அக்கட்சியினர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டா டுவதே நல்லது. மக்களுக்குச் சேவை செய்ய அதுவே சிறந்த வழி. எதிர் ப்பு ஆர்ப்பாட்டங்களாலும், வீரவசன ஊடக அறிக்கைகளாலும் இனியும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது. மக்களை அக்கட்சியிலுள்ள ஒருவர் விழித்தெழ வைத்துவிட்டார். இதன் பின்னடைவை தேர்தலின் கொழும்பு கிழக்கு வாக்களிப்பு வீதம் காட்டுகிறது.

அரசாங்கக் கட்சியிலும், பிரதான எதிர்க்கட்சியிலும் ஒரு தமிழ்ப் பிரதி நிதியையும் வரவிடாது தடுத்து தமிழ் மக்களுக்கான மாகாண சபைச் சேவைகள் எதனையும் கிடைக்கவிடாது செய்து சாதனை படைத்த ஜனநா யக மக்கள் முன்னணி இந்நிலையை உணர்ந்தாவது அரசாங்கத்துடன் சேவை க்கான விடயங்களில் மட்டுமாவது இணங்கிச் செல்லும் போக்கைக் கடைப் பிடிக்க வேண்டும். அதுவே தலைநகரில் தமிழ் மக்களை ஏமாற்றிப் பிழைத்த மைக்கான பிராயச் சித்தமாக இருக்கும். அதன் மூலமாவது கொழும்பு தமிழ்ச் சங்க ஒழுங்கை விவகாரத்தை முடிவிற்குக் கொண்டு வருவதுடன், அரசிடம் காணி பெற்று ஐந்தாம் குறுக்குத் தெருவில் நாட்டா ண்மை தொழிலாளருக்கு வாக்குறுதியளித்தவாறு ஒரு மலசல கூடத்தையும் அமைக்கலாம்.

வடக்கில் அறுதிப் பெரும்பான்மை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமது மக்களுக்கான சேவைக்காக அரசாங்கத்துடன் இணங்கிச் செல்கையில் ஜனநாயக மக்கள் முன்னணி எம்மாத்திரம்? தமிழ் ஊடகங்கள் இனிமேலும் ஒருபக்கச் செய்திகளை வெளியிடாது தமிழ்க் கட்சிகளுக்கு சரியான நேரங்களில் சரியான புத்திமதிகளையும் கூற வேண்டும். இதுவே தமிழ் ஊடகங்களின் ஒரு தலைப்பட்சமான செய்தி வெளியிட்டமைக்கான பிராய்ச்சித்தமாக அமையும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com