Monday, March 17, 2014

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று 16 ஆம் திகதி வெகுவிமர்சையாக நடைபெற்றதுடன் இதில் இலங்கை, இந்தியாவிலிருந்து சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.


மீனவ மக்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய, கடலுக்கு அதிபதியாக விளங்கும் புனித அந்தோனியார் தேவாலயம் என போற்றப்படுகின்ற கச்சதீவுக்கு இம்முறை தமிழகத்திலிருந்து 95 வள்ளங்களில் 3128 பேரும் இலங்கையிலிருந்து 89 வள்ளங்களில் 2151 பேரும் கச்சதீவுக்கு வருகை தந்திருந்தனர்.

இலங்கை சார்பில் நெடுந்தீவு பங்கு தந்தை அருட்தந்தை அமல்ராஜ் ஞானபிரகாசம் அடிகளாரும் இந்தியாவின் சார்பில் இராமேஸ்வரம் பங்குத் தந்தை அருட்திரு சகாயராஜ் அடிகளாரும் திருப்பலி பூஜையை நடத்தினர்.

இதே வேளை நேற்று நடைபெற்ற திருப்பலி பூஜையில் கடற்படைத் தளபதி வைஸ். அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, இராணுவத் தளபதி லெப்டினன் கேணல் தயாரட்நாயக்க ஆகியோர் முதற் தடவையாக கலந்துகொண்டிருந்ததுடன் இவர்களுடன் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதய பெரேரா, இலங்கை கரையோர பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ரியல் அட்மிரல் ரவி உதய குணரட்ன, யாழ். நகரிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஆர்.ரவீந்திர ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

சர்வதேச கடல் எல்லையிலிருந்து 1.8 கிலோ மீற்றர் தொலைவில் இந்தத் தீவு அமைந்துள்ளதுடன் இதனை யாழ். மாவட்டத்தின் நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் நிருவகிக்கப்பட்டு வருவதடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரைக்கமைய கடற்படைத் தளபதியின் கண்காணிப்பின் கீழ் கச்சதீவு உற்சவம் வெகு சிறப்பாக இம்முறையும் நடைபெற்றது.

தமிழகத்திலிருந்து வரும் அடியார்கள் ஆலய வழிபாட்டிற்கு கடலில் குளித்துவிட்டு வந்துகொண்டிருந்ததால் கடற்படையினரின் உயிர் காப்பு பிரிவினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். அத்துடன் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடியார்களின் பாதுகாப்புக்காக பெருந்தொகையான படையினரும் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

குடிநீர் வசதிகள், மலசலகூட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்ததுடன் தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்தும் புடைவை மற்றும் பல்பொருள் வியாபாரிகளும் வருகை தந்திருந்ததனால் 24 மணி நேரமும் மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டிருந்ததுடன் தீவுக்கு வந்திருந்த 5 ஆயிரத்து 279 பேருக்கும் மூன்று வேளை உணவு கடற்படையினரால் இலவசமாக வழங்கப்பட்டது.

தமிழகத்தில் இராமேஸ்வரம், திண்டுக்கல், மதுரை பகுதிகளிலிருந்து சுமார் 200 இற்கும் அதிகமான அருட் சகோதரிகளும் அருட் தந்தைகளும் வருகை தந்திருந்ததுடன் இவர்கள் அனைவரும் தங்குவதற்கு என தனித்தனியான தற்காலிக கொட்டில்கள் வழங்கப்பட்டிருந்தன.

1 comments :

Anonymous ,  March 22, 2014 at 8:42 AM  

god bless you

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com