Monday, March 3, 2014

ஐ.நா. மனித உரிமையின் 25வது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்! இலங்கைக்கெதிரான பிரேரணையின் உள்நோக்கம் என்ன?

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 25வது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமா வதுடன் குறித்த கூட்டத்தொடர் இம் மாதம் 28 ஆம் திகதி வரை தொடரவுள்ள இக்கூட்டத் தொடரில் அமெரிக்கா சில மேற்குலக நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கெதிராக பிரேரணையை முன்வைக்கவிருப்பதாக அந்நாட்டின் அரசாங்கம் ஏற்கனவே அறிவிப்பு விடுத்துள்ளது.

கூட்டத் தொடரின் ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை ஆகியோர் ஆரம்ப உரையினை நிகழ்த்துவர். அதையடுத்து கனடா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் தமது உரையினை முன்வைப்பர்.

மனித உரிமைகள் ஆணைக் குழுவில் இலங்கை அரசாங்கம் சார்பில் நாளை மறுதினம் புதன்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் உரையாற்றுவார். இவரது உரைக்கென 20 நிமிடங்களை ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக் குழு ஒதுக்கியுள்ளது. அமைச்சர் பீரிஸ், தனக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்திற்குள் மேற்குலக நாடுகளின் குற்றச்சாட்டுக்களை பொய்யென நிரூபித்து அவற்றுக்கான ஆதாரங்களை அதன் உறுப்புரிமை நாடுகளுக்கு உறுதிபட எடுத்தியம்பவுள்ளார்.

இந்நிலையில் எத்தகைய பிரேரணையையும் எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில் இலங்கை அரசாங்கம் முழுமையாக தயார்நிலையிலிருப்பதாக ஜனாதிபதிப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் இலங்கையில் யுத்தம் முடிவடைந்து குறுகிய காலப் பகுதிக்குள் அரசாங்கத்தினால் வடக்கு, கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, உட்கட்டமைப்பு வசதிகள், நல்லிணக்கச் செயற்பாடுகள், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்ட விதம் என்பனவற்றை அமைச்சர் பீரிஸ், மனித உரிமைகள் ஆணைக் குழுவிற்கு முன்வைக்க இருப்பதாகவும் ஜனாதிபதிப் பேச்சாளர் மொஹான் தெரிவித்தார்.

ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகும் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கெதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டு வரவுள்ள போதிலும் அவர்களால் முன்வைக்கப்படவுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்பதனை நிரூபிக்க அரசாங்கம் சகல வழிகளிலும் ஆக்கபூர்வமான திட்டங்களை வகுத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் 25 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடைபெறும் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்து அமெரிக்கா கொண்டுவரும் இலங்கைக்கு எதிரான பிரேரணை குறித்து விரிவான அடிப்படையில் நீண்ட பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளார். இந்தத் தகவலை அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் கொழும்பில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு கடந்த வெள்ளியன்று அறிவித்தார்.

அமெரிக்கா இலங்கைக்கு எதிராக முன்மொழியும் தீர்மானத்திற்கு பிரிட்டன் ஆதரவு வழங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை சர்வதேச சமூகத்துடன் இணைந்து மனித உரிமை மீறல் பிரச்சினையை தீர்த்து வைக்க முன்வர வேண்டுமென்று பிரிட்டிஷ் அரசாங்கம் வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கைக்கெதிராக பிரேரணையை கொண்டுவருவதன் உள்நோக்கம் என்ன என்பதை பிரதமர் டி. எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார் ஏகாதிபத்திய வாதிகளின் வேண்டுகோளுக்கு செவிமடுக்காது யுத்தத்தை முடித்தமையே மனித உரிமைமீறல்கள் போன்ற அடிப்படையற்ற குற்றச் சாட்டுக்களை சில மேற்கத் தேய நாடுகள் இலங்கை மீது சுமத்துவதாக பிரதமர் டி. எம். ஜயரட்ன தெரிவித்தார்.

ஏதாவது ஒருவகையில் எம்மை அடிமைப்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். எந்த முயற்சிகளை முன்னெடுத்தாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களோ, அரசாங்கமோ அடிபணியப் போவதில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் சர்வதேச மட்டத்தில் பல்வேறு தரப்பினர்களின் அழுத்தங்கள் விடுத்த போதிலும் அவற்றுக்கு செவிமடுக்காது ஜனாதிபதி அவர்கள் சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். அதன் பின்னர் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதையும் மிகவும் குறுகிய காலத்தில் அபிவிருத்தி செய்துள்ளார். ஆசியாவில் முன்மாதிரி நாடாக இலங்கையைப் பார்க்க வேண்டும். அரசாங்கத்தின் வெற்றிகரமான அபிவிருத்தி பணிகளை கண்டு பொறாமை படுபவர்களே இவ்வாறான குற்றச் சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

அத்துடன் புலம்பெயர் புலி ஆதரவாரளர்களினதும் புலிகளினதும் பணத்திற்கு ஆசைப்பட்டு, தற்போது இலங்கையில் இடம்பொறும் அபிவிருத்தி பணிகளை முடக்குவதற்கும், இனங்களுக்கிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்து வதற்குமே ஒருசில மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்படுவதாகவும், தமது தனிப்பட்ட நலனுக்காகவே இந்த நாடுகள் செயற்படுகின்றனவே இன்றி, தமிழர்களின் மீது கொண்ட அக்கறையால் அல்ல என தமிழ் மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com