Friday, February 21, 2014

ஜேர்மனிய அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகளை முடுக்கி விடுகிறது! By Ulrich Rippert

ஜேர்மனிய அரசாங்கம் மிகத்தீவிரமாக ஓர் ஆக்கிரோஷமான ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையை முன்னெடுக்கின்றது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அது முந்தைய இராணுவ கட்டுப்பாட்டு கொள்கைக்கு முற்றுப்புள்ளியை அறிவித்தது. அதைத் தொடர்ந்து அது ஆபிரிக்காவில் புதிய மூலோபாயத்தை முன்னெடுக்கும் திட்டங்களை அறிவித்தது.

இதைத்தொடர்ந்து கடந்த புதன் அன்று ஜேர்மன் கடற்படை ஒரு “வலுவான ஆணையை” நிறைவேற்ற மத்தியதரைக் கடலுக்கு அனுப்பப்பட உள்ளது என்ற அறிவிப்பு வந்தது. உத்தியோகபூர்வ அறிக்கைகள், கடற்படை போர்க்கப்பலான அவுக்ஸ்பேர்க், அமெரிக்கக் கப்பலான கேப் ரேயில் உள்ள சிரிய இரசாயன ஆயுதங்களை அழிப்பதற்கு உதவச்சென்றுள்ளதாக தெரிவித்தன. இந்த செயற்பாட்டில் போரில் ஈடுபடும் படைகளை பயன்படுத்தப்படுவது நிராகரிக்கப்படவில்லை.

இந்த முடிவு அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் அறிவிப்பான சிரியாவில் இராணுவத் தலையீட்டு உரிமையைத் தான் கொண்டுள்ளது என்பதுடன் இயைந்துள்ளது. பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டுடன் வாஷிங்டனில் செவ்வாயன்று ஒரு கூட்டுச் செய்தி மாநாட்டில் ஒபாமா சிரியாவில் இராணுவ நடவடிக்கை இன்னும் மேசையில் உள்ளது என்று வலியுறுத்தினார்.

அதே நேரத்தில் பேர்லின், உக்ரேனில் தன் வெளியுறவுக் கொள்கையை கடுமையாக்கிக் கொண்டுள்ளது. மாஸ்கோவிற்குத் தன் முதல் பயணத்தில் கடந்த வாரம் வெளியுறவு மந்திரி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் (சமூக ஜனநாயகக் கட்சி-SPD) உக்ரேனிய அதிகாரப் போராட்டத்தை விரிவாக்குவதற்கு எதிராக ரஷ்ய அரசாங்கத்திற்கு எச்சரித்தார். “அந்த வெடி மருந்துத் கிடங்கிற்கு எரியூட்ட எவரும் முயலக்கூடாது” என்றார் ஸ்ரைன்மையர்.

உண்மையில், பேர்லினே உக்ரேனின் மோதல் தீக்கு காற்று விசுகிறது. எதிர்த்தரப்பிற்கு ஆதரவு கொடுப்பதுடன் விட்டாலி கிளிட்ஷ்கோ மற்றும் CDU தொடர்புடைய கொன்ராட் அடினவர் அறக்கட்டளையின் (Konrad Adenauer Foundation) வலுவான ஆதரவைக் கொண்டுள்ள அவருடைய UDAR கட்சியுடன் நெருக்கமாக ஒத்துழைக்கிறது. அடினவர் அறக்கட்டளையின் மூலம் ஜேர்மனிய வெளியுறவு அமைச்சரகமும், தீவிர வலது மற்றும் யூத எதிர்ப்பு ஸ்வோபோடா கட்சியின் தலைவர் ஓலே தியாஹினிபோக்குடனும் தொடர்புகளை கொண்டுள்ளது.

ஜேர்மன் இராணுவத்தின் (Bundeswehr) செயற்பாடுகளுக்கான தீவிரமான வெளிநாட்டு கொள்கை நடவடிக்கைகள் CDU-SPD கூட்டணிக் குழுவின் அடுத்தவார ஆரம்பத்தில் செயற்பட்டியலில் மிகமுதலில் உள்ளது. பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லையன் (CDU), வெளியுறவு மந்திரி பிராங் வால்டர் ஸ்ரைன்மையர் (SPD) மற்றும் அபிவிருத்திதுறை மந்திரி ஹெகார்ட் முல்லர் (கிறிஸ்துவ சமூக ஒன்றியம்-CSU) ஆகியோர் விவரமாக விவாதிக்கவும் நடைமுறைகளை ஒருங்கிணைக்கவும் பின்னர் கூடுவர்.

வெளியுறவு அமைச்சரக செய்தித்தொடர்பாளர் மார்ட்டின் ஷேபெர் புதிய வெளியுறவுக் கொள்கையின் எதிர்காலக் கவனம் ஆபிரிக்காவாக இருக்கும் என்று வலியுறுத்தினார். ஒரு புதிய ஆபிரிக்க மூலோபாயத்திற்கான காலம் ஏற்கெனவே வந்துவிட்டது. அதைப் பற்றிய விவாதமும், நடைமுறைப்படுத்திலும் பற்றி உள்துறை அமைச்சரகத்தில் நீண்டகாலமாக இடம்பெற்றுவருகின்றது. “ஆபிரிக்கா ஒரு நெருக்கடியான கண்டம் என்பதையும்விட அதிகமானது. பல ஆபிரிக்க நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதைவிட கணிசமான வளர்ச்சி விகிதங்களைக் காட்டுகின்றன” என்றார் ஷேபெர்.

ஜேர்மனி பல ஆபிரிக்க நாடுகளுடன் பொருளாதார கூட்டுழைப்பை கணிசமாக விரிவாக்க விரும்புகிறது என்றார் ஷேபெர். ஜேர்மனிய பொருளாதாரம் சந்தை வாய்ப்புக்கள் மற்றும் ஆபிரிக்காவில் உள்ள இயற்கை மூலவளங்களில் இருந்து இலாபங்களை எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார். எவ்வாறாயினும், வெளியுறவு அலுவலகம் அதன் சொந்த நலன்கள மறைவாக வைத்துக் கொள்ள விரும்பி, தனது நோக்கங்கள் அது முக்கியமாக மனிதாபிமான, பாதுகாப்புக் கவலைகளால் உந்தப்படுகிறது என்று கூறுகிறது. ஜேர்மனியின் “பொருளாதார உதவியின்” இலக்குகள் ஆபிரிக்க நாடுகளை உறுதிப்படுத்துல், இன்னும் மோதல்கள் வராமல் தடுத்தல் என்பதாகும் என்றார் அவர்.

இரண்டு வாரங்களுக்கு முன் நடைபெற்ற மூனிச் பாதுகாப்பு மாநாட்டை அடுத்து உடனடியாக, பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லையன் செனெகலுக்கும் மாலிக்கும் பயணித்து மாலியில் பயிற்சியளிக்கும் ஜேர்மன் படையினரை 180இல் இருந்து 250இற்கு அதிகரிப்பதாக அறிவித்தார்.

100 ஜேர்மன் படையினர் ஏற்கனவே உள்ள நைஜர் ஆற்றின் இராணுவ முகாம்களுக்கு சென்றிருந்தபோது, அவர் ஜேர்மன் இராணுவத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் விரிவாக்கப்படுவது குறித்த விமர்சனங்களை நிராகரித்தார். “ஒருகாலத்தில் 11,000 ஆண், பெண் படையினர் வெளிநாடுகளில் பணிபுரிந்தனர். ஆப்கானிஸ்தானில் நடவடிக்கைகள் முடிவிற்கு வருவதால் தற்பொழுது 5,000 பேர்தான் உள்ளனர்” என்றார் அவர். இராணுவம் இன்னும் கூடுதல் செயற்பாடுகளை எடுக்கும் தகமையை கொண்டுள்ளது என்றும் அவர் அறிவித்தார்.

கடந்த வாரம் திங்களன்று பேர்லின், நெருக்கடியால் பாதிப்பற்கு உட்பட்ட கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியாவில் புதுப்பிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய பயிற்சிப் பணியில் (European Union Training Mission -EUTM) தனது இராணுவமும் பங்குபெறும் என்பதையும் உறுதிப்படுத்தியது. கடந்த ஆண்டு இறுதிவரை, ஜேர்மனி சோமாலி இராணுவப் பிரிவுகளை உகண்டாவில் வைத்து பயிற்சி கொடுப்பதில் ஈடுபட்டடிருந்ததுடன், அங்கு 20 படையினரையும் அனுப்பிவைத்திருந்தது.

இந்த பயிற்சி நடவடிக்கை இந்த ஆண்டு சோமாலியாவிற்கு நகர்த்தப்பட்டபோது, ஜேர்மன் இராணுவம் இந்த ஈடுபாட்டை ஆரம்பத்தில் நிறுத்தியது. ஏனெனில் பாதுகாப்பு நிலைமை மிக உறுதியற்றது எனக் கருதப்பட்டது. இந்த மதிப்பீடு இப்பொழுது திருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது வெளிப்படை.

ஜனவரி இறுதியில், n-tv செய்திப்பிரிவு புதிய ஆபிரிக்க மூலோபாயம் என்பதைப் பிரச்சாரம் செய்வதில் உள்ள மனிதாபிமான வாதங்களுக்குப் பின்னணியில் என்ன உள்ளது என்பது பற்றிக்கூறியது.

“யூரேனியம், தங்கம், வைரங்கள், தாதுப்பொருட்கள்: ஜேர்மனி ஆபிரிக்காவை கண்டுப்பிடிக்கிறது” என்ற தலைப்பில் அறிக்கை நாட்டில் ஜேர்மனிய வணிக நலன்களை ஆராய்கிறது. இது மூனிச் பாதுகாப்பு மாநாட்டிகுத் தலைமை தாங்கிய வொல்ப்காங் இஷிங்கரின் மேற்கோளுடன் ஆரம்பிக்கின்றது. இஷிங்கர் ஜேர்மனி நிறைய பிடித்துக்கொள்ள வேண்டியுள்ளது என்றும் “ஆபிரிக்காவை சீனர்களுக்கு விட்டுவிடக்கூடாது” என்றும் கூறினார்.

இந் அறிக்கை, சீனாவுடன் ஒப்பிடும்போது ஜேர்மனி மிகவும் பின்தங்கியுள்ளது என்று எச்சரித்துள்ளது. 1990களின் ஆரம்பத்தில் இருந்து சீனா “தீவிரமாக வாங்கும் முனைப்பில்” ஈடுபட்டு, மூலோபாய மூலவளங்களை பெற்று, அதிகரித்தளவில் பல ஆபிரிக்க நாடுகளின் ஆதரவை வென்றுள்ளது. ஆபிரிக்காவில் சீனக் கொள்கையின் இரகசியம் மூலப்பொருள் விநியோகத்திற்கு ஈடாக பெய்ஜிங் “பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சாதாரண மக்களுக்கான விளையாட்டு அரங்குகளைக் கட்டுகிறது.”

n-tv அறிக்கை, ஆபிரிக்காவை பொறுத்தவரை புதிய ஜேர்மனிய மூலோபாயம் ஒரு நவ காலனித்துவ முயற்சி என காணப்படக்கூடாது என எச்சரித்துள்ளது. ஆனால் அது “ஜேர்மனி மத்திய ஆபிரிக்காவில் செய்வதைப்போல் பிரான்சுடன் இணைந்து ஈடுபட்டால், இது ஒரு ஜேர்மனிய மூலப் பொருட்கள் கொள்கை என்பதைவிட ஐரோப்பியக் கொள்கை என்று கூறலாம்” என அது தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சி அறிக்கை, மத்திய ஆபிரிக்கக் குடியரசு (Central African Republic - CAR) இத்தகைய ஒரு ஒத்துழைப்பிற்கான பரிசோதனைக் களமாக வளரலாம் என்ற திட்டத்தை முன்வைத்துள்ளது. அனைத்துப் புறங்களிலும் நிலத்தை எல்லையாக கொண்ட கொங்கோவிற்கு வடக்கேயுள்ள ஆபிரிக்க நாடு ஜேர்மனியைப் போல் இருமடங்கு பெரிதாக உள்ளபோதும், கிட்டத்தட்ட உள்கட்டுமானம் ஏதும் அங்கு இல்லை. மக்களில் 60% இன்னமும் கல்வியறிவு அற்றவர்களாகவும் வறியவர்களாகவும் உள்ளனர். ஆனால் முன்னாள் பிரெஞ்சு காலனி பெரும் பொருளாதார நலன்களைக் கொண்டுள்ளது: தங்கம், வைரங்கள், யுரேனியம், நல்ல மரங்கள், காப்பி இன்னும் பல பொருட்களை செழிப்பாக கொண்டுள்ளது.

பிற தாதுப்பொருள் மூலவளங்களும் நாட்டில் கிடைக்கலாம் என்ற ஊகமும் உள்ளது. அவற்றுள் தாமிரம், காரீயம், இரும்புத் தாதுப்பொருள், காவோலின், லிக்னைட், லைம்ஸ்டோன், மங்கனீஸ், க்வார்ட்ஸ், உப்பு, தகரம் ஆகியவை அடங்கும். “எந்த வகையிலும் மத்திய ஆபிரக்கக் குடியரசு இன்னும் முழுமையாக ஆராயப்பட்டுவிட்டது எனக் கூறுவதற்கில்லை” என்று n-tv உற்சாகத்துடன் தெரிவித்துள்ளது.

ஸ்ரைன்மையர் மற்றும் வொன் டெர் லையன் கூறியிருப்பதுபோல் “புதிய ஆபிரிக்க மூலோபாயம்” மனிதாபிமானத்தை பாதுகாப்பதுடன் எவ்வித தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. மாறாக இது “ஆபிரிக்காவிற்கான போட்டி” என்று முதல் உலகப் போருக்கு முன் ஏகாதிபத்தியத்தின் உச்சகட்டத்தில் நடந்ததைத்தான் நினைவுபடுத்துகிறது; அப்பொழுது ஜேர்மனி, தற்போதைய நமீபியா, தன்சானியா, காமெரோன், டோகோ எனப்படும் நாடுகளில் காலனித்துவங்களை கொண்டிருந்தது. தற்போதைய மாலியில் உள்ள போர்ப்படைகள் ஜேர்மனிய பொருளாதாரத்தின் ஏகிதிபத்திய நலன்களுக்கும் உதவுகின்றன. இரண்டாம் உலகப் போரின்போது ஜேர்மனிய ஆபிரிக்க குழுவால் (Deutsche Afrika korps -DAK) தொடரப்பட்ட பூகோள-அரசியல் நலன்கள் இம்மூலோபாயத்தின் பகுதியாக உள்ளன.

அனைத்து ஜேர்மனிய பாராளுமன்றக் கட்சிகளும் இந்தப் போர்க்குண கொள்கையை ஆதரிக்கின்றன. சமூக ஜனநாயகக் கட்சி (SPD) தற்போதைய அரசாங்கத்தில் போர்ப்பிரச்சினையில் தலைமையை எடுத்துள்ளதுடன், பசுமைவாதிகளினதும் இடது கட்சியினதும் ஆதரவைக் கொண்டுள்ளது.

கடந்த இலையுதிர்காலத்தில் இடது கட்சியின் பாராளுமன்றப் பிரதிநிதி ஸ்ரெமான் லீபிச் கூட்டாக இந்த மூலோபாய ஆவணத்தை எழுதி ஒப்புதலும் கொடுத்தார். இது சர்வதேச மற்றும் பாதுகாப்பு விடயங்களுக்கான அமைப்பின் (Stiftung Wissenschaft und Politik -SWP) இசைவைப் பெற்றது. இதன் தலைப்பு “புதிய சக்தி – புதிய பொறுப்பு” ஆகும். ஜனவரி நடுப்பகுதியில் அவர் பசுமைக் கட்சி அரசியல்வாதி அக்னீஸ்கா புருக்கருடன் மூலோபாய ஆவணம் ஒன்றைத் தயாரித்தார். அது ஜேர்மன் இராணுவத்தின் வெளிநாட்டுப் நடவடிக்கைகளுக்கு ஆதரவைக் கொடுத்தது. இந்த ஆவணம் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணைக்கு இயைந்து “மனித உரிமைகள் முன்னேற்றுவிக்கப்பட” உதவும் என அவர்களால் கூறப்பட்டது.

ஜேர்மனிய பாராளுமன்றத்தில் வெளியுறவுக் குழுவில் இடது கட்சியின் பிரதிநிதி என்ற முறையில் அவர் கடந்த வாரம் மத்தியதரைக் கடல் பகுதியில் ஜேர்மனிய ஆயுதப்படைகளை ஈடுபடுத்துவது குறித்து பல வலுவான வாதங்களை விளக்கினார். “நினைவிற் கொள்ளுங்கள், சிரிய இரசாயன ஆயுதங்கள் அழிக்கப்படுகின்றன என்பதில் எமக்கு மகிழ்ச்சிதான்” என அவர் மேலும் கூறினார்.

இடது கட்சிப் பாராளுமன்றப் பிரிவின் செய்தித்தொடர்பாளர், பாதுகாப்பு கொள்கை குறித்து, கிறிஸ்ரியான புக்ஹோல்ஸ் இதேபோல்: “சிரிய நச்சு வாயு அழிக்கப்படுவதை நாம் வரவேற்கிறோம்” என்றார்.

ஜேர்மனிய வெளிநாட்டுக் கொள்கையின் மாற்றத்திலும் ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தினதும் இராணுவவாதத்தின் புத்துயிர்ப்பிலும் மிக உயர்மட்டத்தில் இடது கட்சி ஈடுபட்டுள்ளது. அதேபோல் போர்ப்பிரச்சார உந்துதலை மனிதாபிமான சொற்றொடர்களின் பின்னால் மறைப்பதிலும் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com