Monday, February 24, 2014

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஞானதேசிகன்

இவர்கள் கொலையாளிகள் இல்லை என்றால் உண்மையான கொலையாளிகள் உங்களுக்கு தெரிந்து இருக்கும் அல்லவா? வை.கோ விடம் கேள்வி

தமிழன் என்றால் கொலையும் செய்யலாமா?

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேசியதாவது:–

ராஜீவ்காந்தி கொலையாளிகள் மீது கருணை கட்ட இன்று யாசிக்கும் தமிழக தலைவர்கள், தனது கணவரை கொன்ற கொலையாளிகள் என்று தெரிந்த பிறகும் நளினிக்கு சோனியாகாந்தி கருணை காட்டினாரே, அப்படிப்பட்ட சோனியாவுக்கு துரோகம் செய்ய உங்களுக்கு எப்படி மனது வருகிறது.

ஜெயிலில் இருக்கும் 7 பேரையும் குற்றவாளிகள் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூற வில்லை. இவர்களுக்காக குரல் கொடுக்கும் சில தலைவர்களை கேட்கிறேன், இவர்கள் கொலையாளிகள் இல்லை என்றால் உண்மையான கொலையாளிகள் உங்களுக்கு தெரிந்து இருக்கும் அல்லவா? அவர்களைப் பற்றி மக்கள் மத்தியில் பகிரங்கமாக சொல்லுங்கள்.

பாக்கியநாதன், பத்மா, நளினி ஆகியோர் ராயப் பேட்டையில் இருந்தார்கள். பேரறிவாளனும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான். இவர்களுக்காக பரிந்து பேசினால் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் தமிழ் நாட்டுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத சாந்தன், முருகன் உள்ளிட்டோருக்கும், ராஜீவ் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்கிறீர்களே அப்படியானால் ஏற்கனவே இவர்களைப் பற்றி வைகோ அறிந்து வைத்து இருக்கிறாரா?

அரசியல் தலைவர்கள் மேடையில் பேசும்போது தேசிய உணர்வுடன் பேச வேண்டும். பல நாடுகளில் பல தலைவர்கள் கொல்லப் பட்டுள்ளனர். அந்த நாடுகளில் எல்லாம் கொலையாளிகளுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுப்பது இல்லை.

தமிழன் என்றால் கொலையும் செய்யலாம் என்று முடிவு செய்தால் ஒவ்வொருவரும் தன்னைத்தானே காத்துக் கொள்ளும் சூழ்நிலைதான் உருவாகும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீதிபதிகளை விமர்சனம் செய்யாதீர்கள். உருவ பொம்மை எரிப்பும் வேண்டாம்.

கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவு சட்ட விரோதமானது. ஏற்றுக் கொள்ள முடியாதது. எனவே தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டு முடிவு எடுக்கும் முன்பே தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இன்று முதல்–அமைச்சருக்கு பிறந்த நாள். இந்த முடிவை அவர் எடுத்தால் தமிழக மக்களிடம் அன்பை பெற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் குமரி அனந்தன், மணிசங்கர் அய்யர், விஜயதாரணி எம்.எல்.ஏ., வள்ளல்பெருமான், வசந்தகுமார், சைதை ரவி, ஆர்.எஸ்.செந்தில்குமார், தி.நகர் ஸ்ரீராம், ஜி.ஆர்.வெங்கடேஷ், கராத்தே செல்வம், மயிலை பெரியசாமி, தணிகாசலம், எஸ்.எம்.குமார், சைதை நாகராஜ், கேத்தி லூயிஸ், எம்.எஸ்.திரவியம், நாச்சிகுளம் சரவணன், சக்திகுமார், அகரம் கோபி, கடல்தமிழ், விருகை ராஜபாண்டியன், மன்சூர் எம். எஸ்.லிங்கம், மயிலை இரா.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேநேரம் ராஜீவ் கொலை வழக்கில், 4 குற்றவாளிகளை விடுவிப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த மனு மீது வரும் 27-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் சதித் திட்டம் தீட்டியவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு சட்ட ரீதியாக அதிகாரம் இல்லை என கூடுதல் சோலிசிடர் ஜெனரல் சித்தார்த் லுத்ரா வாதிட்டார்.

இதனையடுத்து, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு அறிவித்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.

இதனையடுத்து, முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழக முதல்வர், சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராஜீவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் மீதமுள்ள நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 4 குற்றவாளிகளை விடுவிப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு வரும் 27-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com