Sunday, February 9, 2014

முஸ்லிம்களைப் பொறுத்தவரை இது ஒரு இக்கட்டான காலப்பகுதி! பேராசிரியர் அனஸ்

அறிஞர் சித்திலெப்பை தேசியத் தலைவர்களில் ஒருவராக அங்கீகாரத்தை அரசு வழங்கியிருந்த போதும் அரசியல் வட்டாரங்களிலும் முஸ்லிம்களிடத்திலும் கூட சித்திலெப்பையின் பேரும் அவரது பணிகளும் எவ்வளவு துரம் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றது என்பது கேள்விக்குறியாகும். 19ம் நூற்றாண்டின் இறுதி மூன்று தசாப்தங்களில் இலங்கையில் ஏற்பட்டுக் கொண்டிருந்த பாரிய மாற்றங்களில் முஸ்லிம்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதும் நாட்டின் விடுதலையை கருத்தில் கொண்டு செயல்படுவதும் என்ற முக்கியமான பணியில் செயல்படும் பொறுப்பை சித்திலெப்பை ஏற்றிருந்தார் என்று பேராதனை பல்கலைக்கழகப் பேராசிரியர் எம். எஸ்.எம். அனஸ் தெரிவித்தார்.

கண்டி ஒராபி பாஷh நிலையத்தின் ஏற்பாட்டில் அறிஞர் சித்திலெப்பையின் ஞாபகார்த்த நிகழ்வு ஒராபி பாஷh நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நிலையத்தின் பணிப்பாளர் எஸ். சலீம்தீன், தலைமையில் 8-02-2014 சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பேராதனை பல்கலைக்கழகப் பேராசிரியர் எம். எஸ்.எம். அனஸ் ஞாபகார்த்தவுரையினை நிகழ்த்தும் போது பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ் இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

1860களில் இருந்து சமூக சேவைகளுக்காக அவர் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார். 2 விதங்களில் அவருடைய சேவையை நாம் மதிப்பிடலாம். ஒன்று அவர் தனது சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் விடுதலைக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டமை. இரண்டாவது 19ம் நூற்றாண்டில் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பி சுதேசிகளின் உணர்வை தூண்டி தேசிய விடுதலைக்கு பங்காற்றியமை. இந்த இரண்டு பணிகளையும் சித்திலெப்பை செயல்படுத்தினார். 19ம் நூற்றாண்டு பல மாற்றங்களை உருவாக்கிய காலம். நவீனத்துவம் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்திய உப கண்டத்திற்கும் ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவி வந்த காலம். நாகரிகம் நவீனத்துவம் நவீன கல்வி என்ற மாற்றத்திற்கான தேவையை உள்ளூர்த் தலைவர்கள் உணர்ந்து செயல்பட்டு வந்தனர். சிங்கள மக்கள் அநகாரிக தர்மபால அவர்களின் தலைமையிலும் தமிழ் மக்கள் ஆறுமுக நாவலரின் தலைமையிலும் தத்தமது இன விடுதலைக்கும் விழிப்புணர்வுக்கும் தேவையான முயற்சிகளை முன்னெடுத்த காலப்பகுதி இது.

இலங்கையின் கல்வி முறையிலும் அரசியலிலும் பொருளாதாரத்திலும் ஆட்சி முறையிலும் மிகப் பெரிய மாற்றங்கள் தொடங்கிய காலப்பகுதி. ஏறத்தாழ 18ம் நூற்றாண்டிலேயே புதிய மாற்றத்தை நோக்கி நாடு நகர ஆரம்பித்திருந்தது. 1830ம் ஆண்டுகள் ஆகும்போது எதிர்கால சமுதாயத்திற்குத் தேவையான மாற்றங்களை உருவாக்க சிங்களத் தலைவர்களும் தமிழ்த் தலைவர்களும் தமது பணிகளை ஆரம்பித்திருந்தனர். முதலாவதாக அவர்களுடைய கவனம் கல்வி சமூக கலாசார சீர்திருத்தங்களை அடிப்படையாக வைத்து ஆரம்பமாகியிருந்தது. முஸ்லிம்களைப் பொறுத்த வரை இது ஒரு இக்கட்டான காலப்பகுதியாகும். ஓர் அளவு பொருளாதார முன்னேற்றத்தை ஆங்காங்கு பெற்றிருந்த போதும் சமூக அரசியல் பொருளாதாரத் துறைகளில் குறிப்பாகக் கல்வியில் இலங்கையில் மிகப் பின்தங்கிய நிலையில் முஸ்லிம் சமூகம் இருந்தது என்பது வெளிப்படையான வரலாறு. பழைமையான கல்வி முறை பழைமையான வாழ்க்கை முறை புதியதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற மனோபாவம் மூட நம்பிக்கைகள் என்று பல விதமான பிரச்சினைகளில் இருந்து முஸ்லிம்களை விடுவிப்பதன் மூலமே அவர்களை புதிய மாற்றங்களுக்கு தயார் படுத்த வேண்டிய சூழ்நிலையில் சித்திலெப்பையின் பணிகள் ஆரம்பமாகின. சித்திலெப்பை தனிமனிதனாக அல்லது தனிமனித இயக்கமாக சமுதாய சீர்திருத்தப் பணிகளுக்கு தலைமை தாங்கினார்.

சித்திலெப்பை 1838 மே 11ம் திகதி கண்டி மாநகரில் பிற்நதார். அவரது முன்னோர்கள் அரபு வர்த்தகப் பரம்பரையில் வந்தவர்கள். அரபு வர்த்தகரான முல்க் றஹ்மத்துல்லாஹ் பரம்பரையைச் சேர்ந்த சித்திலெப்பையின் தந்தையும் அவரது பாட்டானாரும் பலமான வர்த்தக பின்னணியைக் கொண்டிருந்தனர். தென் மாகாணத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த முல்க் றஹ்மத்துல்லாஹ் குடும்பத்தினர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் காலத்தில் கண்டியில் குடியேறுகின்றனர். முல்க் றஹ்மத்துல்லாஹ்வின் மகன் முஹம்மது லெப்பை கொழும்பில் தனது வர்த்தகத்தை ஆரம்பித்து பின்னர் கண்டிக்கு வருகின்றார். முஹம்மது லெப்பையின் மகன் சித்திலெப்பை. சித்திலெப்பையின் மகன் முஹம்மது காசிம் சித்திலெப்பை. முஹம்மது காசிம் சித்திலெப்பையின் தந்தை கண்டி அகடமியில் கல்வி கற்று புரக்டராக நியமிக்கப்பட்டார். சோனக தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

சித்திலெப்பையோடு பிறந்த சகோதர சகோதரிகள் எல்லோருமே குர்ஆனை ஓதி முடித்தவர்களாகவும் அரபு மொழி பரிச்சயம் உள்ளவர்களாகவும் ஆலிம்களாகவும் விளங்கினர். சித்திலெப்பையின் மூத்த சகோதரர் முஹம்மது லெப்பை ஒரு ஆலிமும் காதியாரும் ஆவார். அவரது சகோதரி முத்து நாச்சியாவும் ஒரு ஆலிம் என்று கூறப்படுகின்றது. இவ்வாறு சித்திலெப்பையின் குடும்ப பாரம்பரியம் வர்த்தகத்தையும் கல்வியையும் சன்மார்க்கத்தையும் ஒன்று கலந்த குடும்பமாக பரிணமித்தது. அவருடைய குடும்ப பின்னணி 19ம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உணர்வதற்கு ஒரு பெரிய வாய்ப்பை சித்திலெப்பைக்கு வழங்கியது. ஏனெனில் அவரும் ஒரு சட்டத்தரணியாகவும் முனிஸிப்பல் கோர்ட் நீதிபதியாகவும் மட்டுமன்றி கண்டி முனிஸிப்பல் சபையின் அங்கத்தவராகவும் பல வருடங்களாக சேவையாற்றியுள்ளார். இந்தப் பின்னணியைக் கொண்ட தலைவர்கள் முஸ்லிம்கள் மத்தியில் அன்று மிகக் குறைவு. கொழும்பில்கூட இத்தகைய பல்துறை அனுபவங்களைக் கொண்ட நவீன உலகைப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்ட தலைவரை சிந்திப்பது கடினமான நிலையில் இருந்துதான் சித்திலெப்பையின் தனித்துவத்தை நாம் மதிப்பிட வேண்டும்.

1884ல் சித்திலெப்பை கொழும்பில் குடியேறி தனது கல்விப் பணிகளை ஆரம்பிக்கின்றார். 3 வருடங்கள் கொழும்பில் தங்கியிருந்து முஸ்லிம்களின் நவீன சிந்தனை, நவீன கல்வி, எதிர்கால முன்னேற்றம் போன்ற துறைகளில் அவர் புதிய மாற்ங்களுக்காக பாடுபட்டார். சகோதர சமூகத்தவர்களிடையே ஏற்பட்டு வரும் மாற்றங்களை அவர் கூர்மையாக அவதானித்தார். முஸ்லிம்களோடு அதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது முஸ்லிம்கள் ஒரு பாரிய பின்னடைவுக்கு உள்ளாகியிருந்ததை அவரால் அறிய முடிந்தது. அதே காலப்பகுதியில் உலக அளவில் குறிப்பாக முஸ்லிம் உலகில் நடைபெற்று வந்த மாற்றங்களையும் அவர் கூர்ந்து அவதானித்தார். ஜமாலுத்தீன் அல்-ஆப்கானி, Nஷய்க் முகம்மது அப்தூ, சேர் செய்யது அகமத்கான் போன்ற முஸ்லிம் சீர்திருத்த சிந்தனையாளர்கள் எகிப்திலும் மத்திய கிழக்கிலும் இந்திய உப கண்டத்திலும் ஏற்படுத்தி வந்த புரட்சிகரமான மாற்றங்களையும் சீர்திருத்த சிந்தனைகளையும் சித்திலெப்பை தனது கவனத்தில் எடுத்துக் கொண்டார். அதே சிந்தனைகளும் சீர்திருத்தங்களும் இலங்கை முஸ்லிம் சமுதாயத்திலும் ஏற்பட வேண்டுமென்பது அவரது இலட்சியமாக மாறியது. அந்த இலட்சியத்தின் ஒரு கட்டம்தான் அவரது கொழும்பு வாழ்க்கையாகும்.

சித்திலெப்பையின் முயற்சிகளை நாம் கல்வியில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். 18ம் 19ம் நூற்றாண்டுகளில் உலகை மாற்றிய பாரிய செயற்பாடு கல்வி மூலம் தான் சாத்தியமாகியிருந்தது. ஐரோப்பிய மறுமலர்ச்சி யுகம் என்று நாம் பேசும் பாரிய யுக மாற்றம் கல்வி வளர்ச்சியோடுதான் சாத்தியம் ஆகியது. அது கல்வி தேவாலயங்களில் இருந்தும் சமய சபைகளில் இருந்தும் தனிப்பட்டவர்களிடம் இருந்தும் விடுதலை பெற்ற காலம். பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் தோன்றிய காலம். ஆராய்ச்சிகளும் கண்டு பிடிப்புக்களும் உலகை அதிரவைத்துக் கொண்டிருந்த காலம். பழைய கருத்துக்களும் மூட நம்பிக்கைகளும் மறைந்து கொண்டிருந்த காலம். மறு புறத்தில் வர்த்தக ரீதியாக ஏற்பட்டுக் கொண்டிருந்த மாற்றங்களுக்கு முகம் கொடுப்பதற்கும் அரசியல் ரீதியாக ஏற்பட்டுக் கொண்டிருந்த மாற்றங்களுக்கு முகம் கொடுப்பதற்கும் கல்வி தேவையாக இருந்தது. கல்வி அறிவை மக்கள் மயமாக்கியது. 17ம் நூற்றாண்டில் ஐரொப்பாவில் எற்பட்ட பெரிய புரட்சி இதுதான். கல்வியின் மக்கள் மயமாக்கம் உலக மாற்றத்தை தீவிரப்படுத்தியது. உலக நடவடிக்கைளிலும் அறிவு நடவடிக்கைகளிலும் அரசியல் நடவடிக்கைகளையும் சாதாரண மக்களை அது ஒன்றிணைத்தது. உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை சாதாரண மனிதன் தெரிந்து கொள்ளக்கூடியதான ஒரு காலம் உருவாக்கப்பட்டது.

இந்த உண்மைகள் முஸ்லிம் உலகத்திற்கு மிகத் தாமதமாகத்தான் தெளிவாகின்றன. ஒரு சில அறிஞர்கள்தான் இதனுடைய முக்கியத்துவத்தையும் தேவையையும் அறிந்து செயல்பட்டனர். 19ம் நூற்றாண்டு ஆரம்பப்பகுதியில் இலங்கையின் கல்வி குறிப்பாக முஸ்லிம்களின் கல்வி பள்ளிவாசல், குர்ஆன் மத்ரசாக்களோடும், திண்ணைப் பள்ளிக்கூடங்களோடும் சம்பந்தப்பட்டிருந்ததே தவிர நாம் கூறக்கூடியதாக ஒன்றும் இருக்வில்லை. வைத்தியத் துறையிலும் கப்பலோட்டும் துறையிலும் வானாராய்ச்சி முறைகளிலும் பண்டைய இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு மரபும் அறிவும் இருந்தது என்பது வரலாற்றில் கூறப்பட்டிருக்கின்றுது. சேர். அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்டன் இந்த உண்மைகளை தனது நூலில் பதிவு செய்துள்ளார். அரபு மொழியில் கிரேக்கர்களினால் மொழிபெயர்க்கப்பட்ட பல விஞ்ஞான கல்வி நூல்கள் இலங்கை முஸ்லிம்களிடத்தில் இருந்ததாகவும் இங்கிருந்தும் அவை மேல் நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் குறிப்புக்கள் இருக்கின்றன. ஆனால் வாய்ப்புக்கேடாக அந்தக் கல்விமுறை என்ன? எவ்வளவு காலம் நீடித்தது? அதில் பயன்படுத்தப்பட்ட நூல்கள் எவை? அந்தப் மரபுக்கு என்ன நடந்தது? என்பன பற்றி நமக்கு எதுவும் தெரியவில்லை. நாம் பொதுவாகக் கூறுவது போல் போர்த்துக் கீசரினுடைய பாரிய எதிர்ப்புக்களின் காரணமாக முஸ்லிம்கள் தங்களது இந்த வகையான கல்வித் துறைகளை இழந்திருக்கக்கூடும்.

ஆனால் 18ம் 19ம் நூற்றாண்டு காலப்பகுதியைப் பார்க்கும்போது எமது கல்வி மிகப் பின்தங்கியதாக புதிய யுகத்திற்கு முகம் கொடுக்கக்கூடிய சக்தியற்றதாக இருந்தது என்பதுதான் உண்மை. ஒரு பூச்சிய நிலையில் இருந்து முன்னேற்றத்தை ஆரம்பிக்க வேண்டியிருந்தது. எல்லையற்ற எதிர்ப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. எங்கும் ஒரு குழப்பமான சூழ்நிலை இருந்தது. பழைமையான கோட்பாடுகளில் இருந்து விடுபடுவதற்கு முஸ்லிம்கள் தயங்கினர். இந்தத் தயக்கம் இந்தியாவிலும் காணப்பட்டது. இந்தத் தயக்கம் முழு மத்திய கிழக்கையும் பாதித்து இருந்தது. இன்றும் அரபு மக்கள் அந்தத் தயக்கத்தில் இருந்து விடுதலை அடையவில்லை. மாற்றங்கள், முன்னேற்றம், புதிய கல்வி என்பதை நோக்கிய பயணத்தின் அவசியம் தேவையாக இருந்த சூழ்நிலையில் ஒரு சில முஸ்லிம் சிந்தனையாளர்கள்தான் இந்தப் பணியில் தம்மை அர்ப்பணித்து செயற்பட்டனர். இந்த வகையில் பணியாற்றியவர்களில் சித்திலெப்பை முக்கியமானவர்.

நவீன கல்வி என்ற கருத்தை சித்திலெப்பை நன்குணர்ந்திருந்தார். நவீன பாடசாலை நவீன கல்லூரி என்ற கருத்து அவருக்கு மிகத் தெளிவாகத் தெரிந்திருந்தது. பாரம்பரியமான தமது கல்வி முறையில் இருந்து முஸ்லிம்கள் விடுதலை பெற வேண்டும். புதிய யுகத்தை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலும் அறிவும் முஸ்லிம்களுக்குத் தேவை என்று அவர் தீவிரமாகச் சிந்தித்ததார். அந்த வகையில் சித்திலெப்பையின் சிந்தனைகளும் சீர்திருத்தங்களும் 19ம் நூற்றாண்டில் அவர் நடத்திய போராட்டங்களும் சரியாக மதிப்பிடப்படுமானால் தென்கிழக்காசிவிலேயே பெயர் சொல்லி குறிப்பிடக்கூடிய 3 அல்லது 4 தலைவர்களில் அவர் ஒருவராகத் திகழ்வார். சித்திலெப்பை பற்றிய ஆய்வுகள் அவரை மதிப்பிடும் ஆராய்ச்;சி ஒழுங்குகள் அவரது சேவைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் அறிவு முயற்சிகள் போதுமானதாக இல்லாத காரணத்தினால் சார்க் பிராந்தியத்தின் பின்னணியில் 19ம் நூற்றாண்டின் சித்திலெப்பையை ஒரு சீர்திருத்த தலைவராக நம்மால் நிரூபிக்க முடியாத ஒரு நிலை இருப்பதை நாம் உணர்கின்றோம். இதை உடைப்பதுதான் இன்றைய எமது தேவையாகும். இன்று நாட்டில் இருக்கின்ற பல்வேறு எதிர்ச் சூழ்நிலைகளை பார்க்கும்போது தேசிய ரீதியில் பிராந்திய ரீதியில் எடுத்துப் பேசக்கூடிய முஸ்லிம் தலைவர்களின் சிந்தனைகளையும் பங்களிப்புக்களையும் நாம் மீள சமுதாயத்திற்குக் கொண்டு வர வேண்டும். தேசத்திற்கு உரிய முறையில் இவர்களின் சேவைகளை நாம் அறிமுகப்படுத்த வேண்டும்.

அநகாரிக தர்மபால போன்ற தலைவர்கள் சிங்கள சமுதாயத்திற்கு ஆற்றிய சேவைகளுக்காக அந்த சமூகம் என்ன வகையில் அவர்களை போற்றுகின்றது எந்தளவு முக்கியத்துவத்தை அவர்களுக்கு வழங்கியுள்ளது என்பதிலிருந்து நாம் பாடம் படிக்க வேண்டும். சித்திலெப்பையின் வீடு நிராதரவாக விடப்பட்டுள்ளது. கண்டி நகரின் மைய இடத்தில் ஒரு மாளிகை போல் அமைந்திருக்கும் சித்திலெப்பையின் வீடு கேட்பாரற்ற நிலையில் கைவிடப்பட்டுள்ளது. அதில் ஏதாவது நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தாலும் அல்லது வாடகைக்கு விடப்பட்டிருந்தாலும் அது சித்திலெப்பைக்கு இந்த சமூகம் கொடுக்கின்ற கௌரவமோ மரியாதையோ அல்ல. தேசிய மட்டத்தில் அங்கீகாரம் பெற்ற தலைவர்கள் பற்றிய கவலை முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதல்ல. அவர் முஸ்லிம்களுக்கு மாத்திரம் சேவையாற்றியிருந்தால் கூட பரந்த அர்த்தத்தில் அது தேசத்திற்கு ஆற்றிய சேவையாகும். ஆனால் சித்திலெப்பையை பொறுத்த வரையை அவர் தேசத்திற்காகவும் நேரடியாகப் பணியாற்றியவர். சிறுபான்மையினரின் அரசியல் விடுதலைக்காக அவர் குரல் கொடுத்தார். முஸ்லிம்களின் அரசியல் பிரநிதித்துவத்திற்காக அவர் குரல் எழுப்பினார். தனது முஸ்லிம் நேசன் பத்திரிகையில் இதற்காக நாடு தழுவிய ரீதியில் கருத்துப் புரட்சிகளை உருவாக்கினார். ஆங்கிலேயர்களினுடைய அடக்கு முறை ஆட்சிகளை அவர் கண்டித்தார். ஆங்கிலேயக் கம்பெனிகள் இலங்கையில் பொருளாதாரத்தை சூறையாடுவது பற்றி தனது முஸ்லிம் நேசனில் தொடர்ந்து விமர்சனம் செய்தார்.

எகிப்தில் ஆங்கிலக் காலனித்துவத்தை எதிர்த்து ஆயுதப் புரட்சி செய்த கேர்ணல் ஒராபி பாஷh ஆங்கிலேயர்களால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட போது இலங்கையில் பெரும் பரபரப்பு எற்பட்டது. ஆங்கிலேயர்களும் ஏன் உள்ளூர் வாசிகளும் பெரும் கவலையும் அதிர்ச்சியும் அடைந்தனர். எகிப்தியப் புட்சிக்குத் தலைமை வகித்து 6 மாத காலம் வரை எகிப்தின் புரட்சித் தலைவராக நியமனம் பெற்றிருந்த ஒராபி பாஷh இலங்கை வருவது பற்றி கவலை ஏற்பட்டிருந்த நேரத்தில் முஸ்லிம்கள் அவரை வரவேற்க வேண்டும் என்ற கருத்தை மக்கள் முன் கொண்டு சென்றவர்களில் முக்கியமானவர் சித்திலெப்பை. ஆங்கில அரசின் எதிர்ப்புக்களையும் உள்ளூர் மக்களின் அதிருப்தியையும் கவனத்தில் எடுக்காது சித்திலெப்பை எகிப்தின் வீரத் தளபதியை வரவேற்று உபசரிக்க வேண்டும் என்று தனது பத்திரிகையில் வெளிப்படையாக எழுதினார். ஆயிரக் கணக்கான மக்கள் அவரை வரவேற்க ஒன்று கூடினர். ஆங்கில அரசே அதிர்ச்சியடையும் அளவுக்கு ஒரு வரவேற்பை முஸ்லிம்கள் கொழும்பு இறங்கு துறையில் வழங்குவதற்கு ஒன்று கூடியதில் சித்திலெப்பைக்கு பெரிய பங்கிருந்தது. ஆங்கில தினசரிகளிலும் சிங்களப் பத்திரிகைளிலும் அதிருப்தியோடும் அமைதியின்மையோடும் வெளிவந்த கட்டுரைகளுக்கும் அவர் பதில் எழுதினார்.

இவ்வாறுதான் சித்திலெப்பை முஸ்லிம்களின் எல்லா நடவடிக்கைளிலும் தன்னை ஒரு தலைவராக உறுதிப்படுத்தினார். அவருக்கிருந்த தூர நோக்கு, சிந்தனைத் திறன், பத்திரிகைத் துறை ஆற்றல், துணிவு என்பவற்றின் காரணமாக இந்த விடயங்களை சொல்வதிலும் செயல்படுத்துவதிலும் அவர் ஒரு முன்னோடித் தலைவராகப் பிரகாசித்தார். 19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் உலகின் பல பாகங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்திய 2 ஆயுதங்களை அவர் இலங்கையில் பன்படுத்தினார். ஒன்று நவீன கல்வி மற்றது பத்திரிகைத்துறை. முஸ்லிம் நேசன் பத்திரிகையை 1882ம் ஆண்டில் தொடங்கி 1898ம் ஆண்டு மரணிக்கும் வரை நடத்தினார். இலங்கையில் முஸ்லிம்களால் வெளியிடப்பட்ட முன்னணி வார இதழாக முஸ்லிம் நேசன் விளங்கியது. கல்விச் சீர்திருத்தம், சமூக முன்னேற்றம், சமய சீர்திருத்தம், கலாசார மாற்றம், அரசியல் மாற்றங்கள் உட்பட பல விடயங்களை எமது கற்பனைக்கு எட்டாத அளவில் அவர் அந்தக் காலத்திலேயே எழுதினார். அதனால் அவர் மறுமலர்ச்சித் தந்தை என்ற பெயருக்கு முற்றிலும் பொருத்தமானவராக விளங்குகின்றார். 19ம் நூற்றாண்டு இறுதிப் பகுதியில் முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்காக அவர் போராடினார். அவருக்கு ஒரு தூர நோக்கு இருந்தது. அந்தத் தூர நோக்கு அவரது கல்விச் சேவைகளிலும் பத்திரிகை இயலிலும் தெளிவாகப் புலப்பட்டது.

1879, 80களில் அவர் 5 பாடசாலைகளை மத்திய மலைநாட்டில் உருவாக்கினார். அது அவர் முன்னின்று சொந்த செலவில் சொந்த திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கிய பாடசாலைகள். அதாவது நவீன கல்வியை இலங்கையில் அவர் நேரடியாகவே அறிமுப்படுத்தினதர். அவருடைய அந்த அந்த 5 பாடசாலைகளிலும் அவர் வழங்கிய கல்வித் திட்டம் இவ்வாறு இருந்தது. குர்ஆன், தமிழ், தையல், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்கள் முக்கிய பாடங்களாக கற்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பாடசாலைகளில் அதிகமானவை பெண்கள் பாடசாலைகள். இலங்கையில் பெண் கல்வியின் தந்தை என்றும் சித்திலெப்பையை அழைக்க முடியும். நவீன கல்வியின் தந்தை என்றும் சித்திலெப்பையை அழைக்க முடியும். 1870ம் ஆண்டுகளிலேயே பாடசாலையில் கணிதமும் ஆங்கிலமும் கைவினையும் இருக்க வேண்டும் என்ற சித்திலெப்பையின் கல்வித் திட்டம் இன்றைக்கும் நடைமுறையில் இருந்துவரும் நவீன கல்வித் திட்டத்திற்குச் சமமானதாகும். அவர் உருவாக்கிய ஒரு பாடசாலையில் அவருடைய சகோதரி - அவர் ஒரு ஆலிம் என்றும் கூறப்படுகின்றது - முத்துநாச்சியா அதிபராக கடமை புரிந்தார். மற்றைய பாடசாலைகளில் இரண்டு பேர்கர் இன பெண்கள் அதிபர்களாக இருந்துள்ளனர். இது பெண் கல்விக்கு சித்திலெப்பை வழங்கிய முக்கிய இடமாகும். இலங்கையில் பெண் ஆசிரியைகள் பெண் அதிபர்கள் என்ற வரலாறு எழுதப்படும் பொது சித்திலெப்பையின் சகோதரி முத்துநாச்சியாவிற்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும்.

இதைக் கல்வி கற்ற பெண்கள் தமது கவனத்தில் எடுக்க வேண்டும். பல்கலைக்கழகங்ளில் படிக்கும் பெண்கள் முத்து நாச்சியாவின் சரித்திரத்தை தேட முன்வர வேண்டும். முஸ்லிம்களின் பெண் கல்வி வரலாறு முத்துநாச்சியாவில் இருந்த ஆரம்பமாக வேண்டும். 1870களில் இவ்வளவு தீவிரமாகும் முற்போக்காவும் பெண் கல்விக்கு பாடுபட்ட இன்னொhரு தலைவர் இலங்கையிலும் இல்லை தென்னாசியாவிலும் இல்லை என்பது சித்திலெப்பைக்கு நாம் வழங்க வேண்டிய பெரிய பெருமைகளில் ஒன்றாக அமைகின்றது. அவர் தொடங்கிய பாடசாலைகளில் ஒன்றுதான் முதல் அரசாங்கப் பதிவு பெற்ற பாடசாலை என்பதையும் நான் இங்கு ஞாபகப்படுத்த வேண்டும். 1891ம் ஆண்டு சித்திலெப்பை தனது பாடசாலையைப் பதிவு செய்திருக்கின்றார். கொழும்பில் ஹைரியா, ஹூசைனியா, சாஹிரா போன்ற பாடசாலைகள் ஏற்கனவே உருவாகி இருந்தாலும் பதிவு செய்யப்பட்ட பாடசாலை என்ற பெயர் இந்தப் பாடாசாலைக்கே உரியது என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால் 19ம் நூற்றாண்டு முஸ்லிம் கல்வி வரலாறு திருத்தமாக எழுதப்பட்டு உண்மைகள் வெளியே கொண்டு வரப்பட வேண்டும.

இன்று ஒராபி பாஷh நிலையத்தில் நடைபெறும் இந்த வபைவம் சித்திலெப்பையை கண்டி மாவட்டத்தில் நினைவு கூரும் அதே வேளை தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும் சித்திலெப்பையின் பணிகளையும் சேவைகளையும் பரவச் செய்வதற்கான ஒரு ஆரம்ப முயற்சியாகவும் இதை நாம் ஒழுங்கமைத்திருக்கின்றோம். சித்திலெப்பை ஒரு தேசிய தலைவர் என்ற முறையில் அவரை நினைவு படுத்தக்கூடியதாக ஒரு நாளை அரசு அங்கீகரிக்குமா அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் சித்திலெப்பை நினைவு தினத்தை உருவாக்கி நிகழ்சிகளை நடத்தும் ஒரு தினத்தை வரையறை செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகளையும் நாங்கள் விரைவில் செய்ய இருக்கின்றோம். ஒராபி பாஷh நிலையத்தில் சித்திலெப்பையின் நூல்களை சேகரித்துப் பாதுகாப்பதற்கான ஒரு நூல்நிலையப் பகுதியை ஆரம்பிப்பதற்குத் திட்டம் இடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் சித்திலெப்பை தினத்தில் சித்திலெப்பை நினைவுக் கொட்டாட்டங்களோடு சித்திலெப்பை நினைவு தின உரை நடத்துவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவடிக் காப்பகத்தில் இருக்கின்ற சித்திலெப்பையின் முஸ்லிம் நேசனை இலத்திரனியல் முறைக்கு பரிமாற்றம் செய்தல், அவரது புத்தகங்களையும் அவரைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களையும் கட்டுரைகளையும் சேர்த்துப் பாதுகாப்பது போன்ற வேலைத் திட்டங்களும் ஆரம்பிக்கப்பட உள்ளன. அதே வேளை கண்டி சித்திலெப்பை மகாவித்தியாலய அதிபரின் முயற்சியில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டிடத் தொகுதியில் சித்திலெப்பைக்காக ஒரு சித்திலெப்பை அலகு ஒன்றை திறப்பதற்கும் சித்திலெப்பை மகா வித்தியாலய ஆசிரியர் குழு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிய முடிகின்றது. சித்திலெப்பையை மீள் அறிமுகம் செய்யும் பல்வேறு திட்டங்களில் ஒன்றாக அவரைப் பற்றிய விரிவான ஆவணத் திரைப்படம் ஒன்றை உருவாக்கும் முயற்சியும் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் சித்திலெப்பையை மீள சமூகத்தின் கவனத்திற்கும் தேசத்தின் கவனத்திற்கும் கொண்டு வரும் முயற்சிகளை கண்டியை மையமாக வைத்தும் கொழும்பு உட்பட ஏனைய மகாணங்களை உள்ளடக்கியதாக ஒரு பரந்த விழிப்புணர்வு செயல் திட்டத்தை தேசிய ரீதியில் அறிமுகப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த வகையில் இன்றைய இந்த நிகழ்வு நினைவுப்பேருரை நினைவுரையாக மட்டுமன்றி சித்திலெப்பையை சமூகத்திற்கு மீள அறிமுகப்படுத்தும் செயல்திட்டங்களை கலந்தரையாடும் நிகழ்ச்சியாகவும் அமைந்துள்ளமை பாராட்டுதற்குரியதாகும். இந்த வேலைத் திட்டங்கள் அனைத்தையும் சித்திலெப்பை நிறுவகம் முன்னின்று நடத்துவதற்கு ஆயத்தமாக உள்ளது என்பதும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும்.

இந்நிகழ்வில் கலாபூசணம் எஸ். எம். ஏ. ஹஸன், கண்டி சிட்டி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அஷ;nஷய்க் பசுலுர்ரஹ்மான், பேராதனை பல்லைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

(இக்பால் அலி)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com