Tuesday, February 11, 2014

தமிழ், சிங்கள மக்கள் முஸ்லிம் அரசியல் தலைமைகளால் பழிவாங்கப்படுகின்றனர்! - சங்கரத்ன தேரர்

தமிழ், சிங்கள மக்கள் திட்டமிடப்பட்ட முறையில் இனவாதம் கொண்ட முஸ்லிம் அரசியல் தலைமைகளினால் பழிவாங்கப்பட்டு வருகின்றனர். கல்முனை வாழ் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு, தீர்வு பெற்றுக் கொடுக்க முன் வர வேண்டும்என கல்முனை ஸ்ரீ சுபத்திர விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.

கல்முனை பிரதேச தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் மக்கள் சந்திப்பு கல்முனை சிங்கள மகா வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமையுரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“கல்முனைப் பிரதேசத்தில் மூவின மக்கள் வாழ்கின்ற போதிலும் இங்குள்ள தமிழ், சிங்கள மக்கள் வசிக்கும் பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்கள் போதியளவு முன்னெடுக்கப்படாதுள்ளது. இதனால் கல்முனை வாழ் தமிழ், சிங்கள மக்ள் அபிவிருத்தித் திட்டங்களில் புறக்கணிக்கப்படுகின்றனர்.

மேலும் இப்பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்கள் திட்டமிட்ட வகையில் இனவாதம் கொண்ட முஸ்லிம் அரசியல் தலைமைகளினால் பழிவாங்கப்பட்டு வருகின்றனர். இதனொரு அங்கமாகவே பழைமைவாய்ந்த கல்முனை ஸ்ரீ தரவைப்பிள்ளையார் கோவில் வீதியின் பெயரை கல்முனை மாநகர சபையினால் மாற்றும் முயற்சியாகும். இச்செயற்பாட்டினால் பிரதேசத்தின் அமைதிக்கும் குந்தகம் ஏற்படும் நிலையேற்பட்டுள்ளது.

கல்முனை பிரதேசத்தில் மக்கள் சார்பில் தீர்க்கப்பட வேண்டிய எத்தனையோ முக்கிய வாழ்வாதாரப் பிரச்சினைகள் இருக்கும்போது, வீதிக்குப் பெயர்மாற்றும் நடவடிக்கை தற்போது தேவைதானா? இங்குள்ள தமிழ்ப் பிரதேசங்களில் அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. இப்பகுதி வாழ் மக்களுக்கென பிரதேச செயலகம் ஒன்று இன்மையே இதற்கான பிரதான காரணமாகும்.

இதனைக் கருத்தில் கொண்டு, கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தினை சகல அதிகாரங்களும் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்த அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான ஒத்துழைப்பினை எமது விகாரையின் சார்பிலும் கல்முனை வாழ் சிங்கள மக்களின் சார்பிலும் வழங்க நாம் தயாராகவுள்ளோம்.

கல்முனைப் பிரதேசத்தில் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பாலே நான் எனது செயற்பாட்டினை செய்துகொண்டிருக்கின்றேன். என்னையும் இங்குள்ள சிலர் இனவாதியாக சித்தரிக்க முற்படுவது வேதனையளிக்கிறது.

கல்முனையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்” என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com