Monday, February 10, 2014

தான் விரும்பும் எந்தவொரு இடத்திலும் சுதந்திரமாக வாழ கூடிய உரிமையிலும் பாரக்க வேறு என்ன மனித உரிமை

2014ம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பிரதான தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தை ஹம்பாந் தோட்டையில் திறந்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். ஜனாதிபதி அங்கு கருத்து தெரிவிக்கையில் தான் விரும்பும் எந்தவொரு இடத்திலும் சுதந்திரமாக வாழ கூடிய உரிமையிலும் பாரக்க வேறு என்ன மனித உரிமை தேவையென வினவினார்.

இந்த நாட்டில் சமமான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. அது எமது பொறுப்பும் கடமையும் ஆகும். யுத்தம் ஒழிக்கப்பட்டு நாட்டில் சுதந்திரம் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் பொருளாதார ரீதியில் பலமடைந்து வறுமையை ஒழித்து மக்களுக்கு சிறந்த வாழ்க்கை தரத்தை ஏற்படுத்தி கொடுப்பது எனது பொறுப்பாகும். அதனையே நாம் படிப்படியாக முன்னெடுக்கின்றோம். இன்று வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது.

1980, 90 காலபகுதியிலிருந்த வறுமை தற்போது இல்லை. அன்று இருந்த நிலை உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இந்த நிலைமை மாறியுள்ளது. ருகுணு பகுதியில் மட்டுமன்றி வடபகுதியிலும் நாம் இதனை உருவாக்கினோம். வடக்கு, கிழக்கு. தெற்கு, மேற்கு என்ற பாகுபாடின்றி ஊவா, மலையகம் என்ற பாகுபாடின்றி சகல கிராமங்களும் முன்னேற்றம் கண்டு வருகின்றது. காப்பட் வீதியில்லாத எந்தவொரு தொகுதியும் இல்லை.

பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு முயற்சித்த போதி லும் எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதம் அதனை ஏற்றுகொள்ளாமையினால் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதி இந்த போராட்டம் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் அச்சமின்றி சுதந்திரமாக வாழகூடிய ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்டதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டை அழித்தொழித்த 30 ஆண்டுகால பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவரு வதற்கு ஒரு வார்த்தையை கூட பேசாத சர்வதேச சமூகம் பயங்கரவாதத்தின் இறுநாட்கள் தொடர்பாக மாத்திரம் கேள்வியெழுப்புவது தாயகத்திற்கெதிரான ஒரு சூழ்ச்சியாகும் என்றும் அவர் தெரிவித்தார். குண்டுகளை வெடிக்க செய்து நாட்டில் இரத்த கலரியை ஏற்படுத்திய அந்த இருண்ட யுகத்தை நமது நாட்டின் சிலர் மறந்து விட்டதாக தெரிவித்த ஜனாதிபதி பெற்ற சுதந்திரத்திற்கெதிராக மேற்கொள்ளப்படும் உள்நாட்டு வெளிநாட்டு சூழ்ச்சிகளை தோல்வியடைய செய்ய சகல தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com