Thursday, February 6, 2014

ஆவா குழுவினரின் பாணியில் மூளாயில் தாக்குதல்!

ஆவா குழுவினர் பாணியில் மூளாயில் 8 பேர் கொண்ட குழுவொன்று அட்டகாசம் மற்றும் தாக்குதல் புரிந்ததில் 5 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளதுடன் 4 பேர் சிறுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது நேற்று புதன்கிழமை இரவு 9 மணியளவில், மூளாய் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் திடீரென புகுந்த 8 பேர் கொண்ட குழுவினர் குறித்த நபரொருவரின் பெயரைக் கேட்டவாறு வீட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, கடிகாரம் போன்றவற்றை அடித்து உடைத்துள்ளதுடன், வீட்டிலிருந்து 60,000 ரூபா பணத்தையும் எடுத்து சென்றுள்ளனர். 

அதேவேளை, அவ்வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன் தொடர்ந்து அவ் எண்மர் குழு, மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் முன்பு நின்று கொண்டு குறித்த நபர் ஒருவரின் பெயரைக் கூறி விசாரித்த வண்ணம் அப்பகுதியில் சென்ற பாதசாரிகள் சிலர்மீது ஆவா குழுவின் பாணியில் வாள், பொல்லுகளுடன் தாக்குதலை மேற்கொண்டதுடன் வைத்தியசாலையின் முன் தரித்து வைக்கப்பட்டிருந்த மூன்று மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்துள்ளனர்.

அது மட்டும்லாது அதன்பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய முச்சக்கரவண்டியில் பயணித்த நபரொருவரை தாக்கியதுடன், முச்சக்கரவண்டியையும் சேதப்படுத்தியதில் குறித்த தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேற்குறித்த எட்டுப்பேர் கொண்ட குழு புரிந்த அட்டகாசம் குறித்து பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதுடன், 30 நிமிடங்கள் கழித்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்ததாக தெரியவருகிறது.

இக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை அப்பிரதேசவாசி ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது தாம் தகவல் வழங்கியதுடன், அப்பகுதிக்கு பொலிஸார் விரைந்திருந்தால் அவர்களை கைது செய்திருக்கலாமென தெரிவித்தார்.

இது மட்டுமல்லாது குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு அளித்த முறைப்பாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் சில இளைஞர்களுக்கிடையில் மோதல் சம்பவமொன்று நடைபெற்றதாகவும் அந்த மோதல் சம்பவத்தின் இறுதியில் அதில் ஒரு இளைஞன் தான் ஆவா குழுவின் உதவியுடன் தாக்குவேன் என அச்சுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே தற்போது இடம்பெற்றுள்ள தாக்குதல் சம்பவத்திற்கு அவ்விளைஞனே காரணமாக இருக்கலாமென நம்பப்படுவதுடன் இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com