Friday, February 14, 2014

கொழும்பு தேசிய வைத்தியசாலை முஸ்லிம் வணக்கத்தலத்தை இழுத்து மூடுக! - பௌத்த பிக்குகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் புதிதாக மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கான வணக்க ஸ்தலகூடத்தை மூடுமாறு குறித்த வைத்தியசாலையில் உள்ள பெளத்த பிக்குகள் சுகாதார பணிப்பாளர் சுனில் ஜயசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என இலங்கை வை.எம்.எம்.ஏ. அமைப்பு நீதி அமைச்சின் செயலாளர் சுரேஷ் சாலியவிற்கு முறைப்பாடொன்றை கையளித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை வை.எம்.எம்.ஏ. அமைப்பின் அஷ்ரப் ஹூசைன் கேசரிக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 1994ஆம் ஆண்டு முதல் வைத்தியசாலையில் சேவை புரியும் முஸ்லிம் ஊழியர்கள், வைத்தியர்கள் மற்றும் நோயாளிகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட முஸ்லிம்களின் தொழுகைக்கான வணக்கஸ்தலம் இடைக்காலங்களில் உடைக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வைத்தியசாலையில் முஸ்லிம்களுக்கான வணக்கஸ்தல கூடத்தை மீள் நிர்மாணிப்பதற்கு வை.எம்.எம்.ஏ. அமைப்பினருடன் இணைந்து தாங்கள் மீளவும் அதற்கான அனுமதியினை சுகாதார அமைச்சிடம் பெற்றுக்கொண்டோம். கடந்த மாதமளவில் குறித்த மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட குறித்த கட்டிடத்தை சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி திறந்து வைத்தார்.

இருப்பினும் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பெளத்த விகாரையிலுள்ள சில பிக்குகள் சுகாதாரப் பணிப்பாளர் சுனில் ஜயசிங்கவிடம் முஸ்லிம்களுக்கான நிர்மாணிக்கப்பட்ட வணக்கஸ்தலத்தை உடனடியாக அகற்ற வேண்டும். இது பெளத்த நாடு. இங்கே முஸ்லிம்களுக்கு நினைத்தவாறு வாழ முடியாது என கோஷமிட்டுள்ளனர்.

முஸ்லிம்களுக்கு எதிராக பெளத்த பிக்குகள் மேற்கொண்டு வரும் அசம்பாவிதங்களில் இது முதற்தடவையல்ல. இதுவரை நாட்டில் 30 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுள்ளது. இதேவேளை முஸ்லிம்களுக்கெதிராக பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதனை இவ்வரசாங்கமோ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ கண்டுகொள்வதில்லை. இலங்கையின் பெளத்த இனவாதிகளால் இந்நாடு எதிர்காலத்தில் இனக்கலவரங்களுக்கு உள்ளாகும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எனவே, இவ்வாறான அசம்பாவிதங்களுக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும்.

எனவே, இதனடிப்படையிலேயே வை.எம்.எம்.ஏ. அமைப்பினரான நாங்கள் ஒன்றிணைந்து நீதி அமைச்சின் செயலாளர் சுரேஷ் சாலியவிடம் முறைப்பாடொன்றை கையளித்தோம்.

இந்நிலையில் குறித்த அமைச்சிற்கு பொறுப்புடையவராக கருதப்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமிற்கு இவ்விடயத்தில் பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகையால் இதற்கான உரிய தீர்வு கிடைக்கப்பெறுமென அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com