Wednesday, February 5, 2014

வீட்டுத் திட்டம் வேண்டுமானால் என்னுடன் வாங்க: பெண்களை வருடி அதற்கு அழைக்கும் வவுனியா செக்கட்டிப்புலவு கிராம அலுவலர்

வவுனியாநகர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களான சிவபுரம், அரபாநகர், செக்கட்டிப்புலவு, கிச்சிராபுரம், புளிதறித்த புளியங்குளம், செல்வாநகர், சின்னப்புதுக்குளம் ஆகிய கிராமங்களை உள்ளடங்கியதே செக்கட்டிப்புலவு கிராம அலுவலர் பிரிவாகும்.

அக் கிராமங்களின் கிராம அலுவலராக வவுனியா பண்டாரிகுளத்தில் தற்போது குடியிருக்கும் ரி.சிறிகாந்தன் கடந்த நான்கு ஆண்டுகளாக கடமையாற்றுகிறார். வவுனியாவில் தான் முன்னனி கிராம அலுவலர் என தனக்கு தானே புகழ் பாடிக் கொண்டு திரியும் இவர், தமது கிராமங்களில் முஸ்லிம் கிராமங்கள் தவிர்ந்த தமிழ் கிராமங்களுடன் ஒரு மாதிரியாக நடந்து கொள்வதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு சிவபுரம் உள்ளிட்ட கிராம மக்களிடம் 50,000 ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும் இதனால் பல மக்கள் செய்வதறியாது உள்ளதாகவும் தெரியவருகிறது. காசு தந்தால் இந்தியன் வீடு உங்கள் வீடு தேடி வரும் எனக் கூறும் குறித்த கிராம அலுவலர் மக்கள் சிலரிடம் இருந்து பணத்தையும் பெற்றுள்ளார். இதனைத் தாம் வெளியில் சொன்னால் வீட்டுத் திட்டம் இல்லாமல் போய்விடும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க, பணம் இல்லாத குடும்பங்களிடமும், பெண்களைத் தலைமையாக கொண்ட குடும்பங்களிடமும் இவரது செயற்பாடு வேறுமாதிரியானது. அவர்களை படுப்பதற்கு வருமாறு பச்சையாகவே கேட்கின்றார். அவ்வாறு வந்தால் வீட்டுத்திட்டம் உடனடியாகவே வரும் எனவும் கூறுகின்றாராம். தனது அலுவலகத்தில் பாய் ஒன்றை வைத்திருக்கும் இவர், அப் பாயில் பெண்களை அமரச் செய்து தவறாக நடந்து கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவருடைய இச் செயற்பாடுகள் தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளரிடம் முறையிடப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.

எது எவ்வாறு இருப்பினும் இவரிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் உண்மயைச் சொன்னால் அவர்களது எதிர்காலம் என்னவாகும் என்பதை விசாரணை செய்யும் அதிகாரிகள் புரிய வேண்டும். இருப்பினும் குறித்த கிராம அலுவலர் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக பெண்கள் பலர் முறைப்பாடு செய்துள்ளனர்.

யுத்தத்தினால் பாதிப்படைந்த மக்களுக்கு இந்தியாவால் கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை உரியவர்களிடம் வழங்க பாலியல் லஞ்சம், பணம் என்பவற்றை கேட்கும் இக் கிராம அலுவலர் மீது எடுக்கப்படும் நடவடிக்கையே இவ்வாறாக சிந்திக்கும் அதிகாரிகளுக்கு முன்மாதிரியாக அமைய வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com