Sunday, February 16, 2014

இலங்கைக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்காக அடுத்த காணொளி தயாராகின்றது! - சனல் 4 கெலும் மக்ரே

இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ள ஆபிரிக்க மற்றும் இலத்தின் அமெரிக்க நாடுகளுக்காக அடுத்த காணொளியை காண்பிக்க உள்ளதாக சனல் 4 தொலைக்காட்சியின் தயாரிப்பாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாடாளுமன்ற கட்டிடத்தின் விக்டர் ஹியூகோ மண்டபத்தில் அண்மையில் திரையிடப்பட்ட “போர் தவிர்ப்பு வலயம்” காணொளி காட்சிப்படுத்தலின் பேதோ கெலும் மக்ரே கருத்துக்களை வெளியிட்டார்.

ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டில் இலங்கையின் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம் சம்பந்தமாக விசாரணை நடத்த இலங்கைக்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்படும் என நினைக்கின்றேன்.

இறுதிக்கட்ட போரில் மேற்குலக நாடுகள், அமெரிக்கா, சீனா, ஈரான், இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான் என அனைத்து நாடுகளும் ராஜபக்ஷவுக்கு உதவின. போர் முடிந்த பின்னர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆற்றிய திறமையான உரை குறித்து கவனம் செலுத்துங்கள்.

இலங்கை பயங்கரவாதத்தை எதிர்க்கொண்டு இதனை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் நாடுகளின் உள்விவகாரங்களில் பலமிக்க நாடுகள் தலையிடக் கூடாது எனவும் அவர் அமெரிக்காவை மறைமுக சுட்டிக்காட்டி கூறியிருந்தார்.

இது வேடிக்கையான மற்றும் பொய்யான ஏகாதிபத்திய எதிர்ப்பு. இந்த கதையினை ஆபிரிக்க மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகள் நம்பின.

எமது அடுத்த காணொளியை ஆபிரிக்க மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு காண்பிக்க உள்ளோம். இந்த நாடுகளுக்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடன் முரண்பாடுகள் உள்ளன. இதுதான் ராஜபக்ஷவின் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு காரணமாக அமைந்தது. எனினும் எமது காணொளியின் ஊடாக ராஜபக்ஷவின் பொய்யான ஏகாதிபத்திய எதிர்ப்பை இந்த நாடுகள் புரிந்து கொள்ளும்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைக்கான சந்தர்ப்பத்தை ஐக்கிய நாடுகள் வழங்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதேபோல் பிரித்தானிய பிரதமர் கமரூன் தான் கூறியது போல் வலுவாக செயற்படுவார் என நம்புகிறோம். எப்படி இதற்கு உதவலாம் என நாம் எண்ணி வருகிறோம்.

காணாமல் போதல் சம்பவங்கள் ஊடாக அவர்கள் இலங்கையின் நிலைமைகளை புரிந்து கொள்ள முடியும். அதன் பின்னர் அது பற்றிய கலந்துரையாடல்கள் நடக்கும். என்னிடம் உள்ள தகவல்களை வைத்து போரில் என்ன நடந்தது என்பது பற்றிய கதையை எழுத முடியும். தமிழர்களின் இனப்படுகொலை தொடர்பில் குறிப்பாக சட்ட துறையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறிப்பாக, தமிழ் பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள், சிங்கள படையினர் வடக்கில் சகல இடங்களையும் கைப்பற்றியுள்ளமை, சிங்கள குடியேற்றத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் துரிதமான சிங்களமயமாக்கல், பலவந்தமான நில அபகரிப்பு, திட்டமிட்டு செயற்படுத்தப்படும் பாலியல் துஷ்பிரயோகங்கள் என அனைத்திலும் அரசாங்கத்தின் தலையீடு இருக்கின்றது என நான் நம்புகிறேன் என கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com