தாவூதி போரா இஸ்லாமிய சமூக தலைவரின் மறைவுக்கு ஜனாதிபதி மஹிந்த அனுதாபம்!
இந்தியாவின் தாவூதி போரா இஸ்லாமிய சமூகத்தின் தலைவரான மொஹமட் புர்ஹானூதின் மறைவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபத்தினை தெரிவித்துள்ளார். தாவூதி போரா சமூகத்தின் ஆனமீக தலைவரான கலாநிதி மொஹமட் புர்ஹானுதீன் மறை வையொட்டி அனுதாப செய்தியினை வெளியிட்டுள்ள ஜனாதிபதி மனித இனத்திற்காக புர்ஹானுதீன் அவர்கள் ஆற்றிய சேவையை நினைவு கூர்ந்துள்ளார்.
இந்தியாவில் வசிக்கும் அன்னாரின் புதல்வருக்கு அனுப்பி வைத்துள்ள அனுதாப செய்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை மக்களின் மட்டுமல்லாமல் இங்கு வசிக்கும் போரா சமூகத்தின் சார்பில் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.
காலஞ்சென்ற ஆன்மீக தலைவரான புர்ஹானுதீன் லௌகீக மற்றும் ஆன்மீக கல்வியை நவீனமயப்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் என்றும் நினைவு கூரத்தக்கதெனவும் ஜனாதிபதி தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார். அன்னாரின் போதனைகள் உலகை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்கு உந்து சக்தியானவையென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தாவூதி போரா சமூகத்தின் 52 வது ஆன்மீக தலைவரான கலாநிதி புர்ஹானுதீன் அவர்கள் பல தடவை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 2007 ம் ஆண்டு இலங்கை அரசின் அழைப்பில் இங்கு விஜயம் செய்த அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து நாட்டில் சமாதானத்தை நிலைநிறுத்துவதற்கு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையில் வசிக்கும் போரா சமூகத்திற்கு நிதியுதவி வழங்குவதற்கு அவர் இணங்கினார். இவ்விஜயத்தின்போது அவர் ஜனாதிபதியுடன் இராபோஷன விருந்திலும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment