மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் இந்திய மீன்பிடி அமைச்சருடன் பேச்சுவார்த்தை- டாக்டர் ராஜித சேனாரத்ன
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்திய மீன்பிடி அமைச்சர் சரத் பவாருடன் எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை புதுடில்லியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கடற்றொழில் , நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவாத்தை இந்தியத் தலைநகரமான புதுடில்லியில் 15 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளதுடன் இதில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொள்வுள்ளதுடன் தமிழக மீனவர் சங்கங்களின்ஆலோசகர் என் . தேவதாஸ் கலந்து கொள்வுள்ளார்.
இதேவேளை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த குற்றத்திற்காக 234 இந்திய மீனவர்கள் இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்ததற்காக 102 இலங்கை மீனவர்கள் இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
இதேசமயம் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அமைச்சின் அதிகாரிகளுக்கும் யாழ்ப்பாணம் , மன்னார் , முல்லைத்தீவு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளும் தமிழக மீனவர் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் விசேட கூட்டமொன்று 15 ஆம் திகதி இரவு 7.00 மணிக்கு புதுடில்லியில் நடைபெறவுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment