Friday, January 3, 2014

இலங்கைத் தமிழ் சினிமாவும், அடுத்தகட்ட வளர்ச்சியும்! விமல்ராஜ்

2005 ஆம் ஆண்டு "கிச்சான்" குறும் படத்தைத் தயாரித்து உலகம் பூராகவும் உள்ள தமிழர்களை ஒருகணம் திரும்பிப் பார்க்க வைத்ததன் மூலம் அடுத்த கட்டச் செயற்பாடுகளை பல முறைகளில் முன்னெடுக்க முனைந்தோம். அடுத்த ஆண்டே "அம்பி" என்கின்ற குறும் படத்தை திருகோண மலையில் எடுக்கத் திட்டமிட்டபோது அங்கு இடம்பெற்ற புத்தர் சிலை பற்றிய அரசியல் சர்ச்சைகள் பாதுகாப்பு சிக்கல்களால் படத்தை ஒளிப்பதிவு செய்ய முடியாது குழம்பிப்போக அடுத்தடுத்த வருடங்களில் இன்னும் சில முயற்சிகள்.. இவ்வாறு தொடர்ச்சியாக முயற்சிகளும் ஏமாற்றங்களும் கைவிடுதலும் என்கின்ற போக்குகள் என் கனவுகளை சிதைத்துக் கொண்டு வந்தன..

இருந்தாலும் இலங்கையில் ஒரு நல்ல தமிழ் சினிமாவுக்கான அடித்தளத்தை இடவேண்டும் என்ற வேட்கை இன்னும் சற்றும் குறையவில்லை.. தமிழ்நாட்டு தமிழ்ச் சினிமாவின் வர்த்தகத் தனமும் யதார்த்தமற்ற வாழ்வியலும் எம் மக்களுக்குப் பழகிப்போக,எங்கள் வாழ்வியலை உலகத்துக்குக் காட்ட வேண்டிய தேவைப்பாடுடன் காத்திருக்கின்றோம்.

இன்று இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் அதிகளவான சினிமா வேட்கையைக் காண முடிகின்றது.. இது சந்தோசத்தைக் கொடுத்தாலும் இன்னொரு பக்கம் கவலையையும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றது. தமிழ்நாட்டு வர்த்தக சினிமாவின் காதலையும், வன்முறையையும், நட்சத்திரஅந்தஸ்தையும் தங்கள் இலட்சியமாகக் கொண்டு இன்றைய எங்கள் உறவுகள் சினிமாவை கையில் எடுக்கும் போது மிகவும் கவலை ஏற்படுகின்றது.

இன்று நாங்கள் பல விடயங்களிலும் எங்கள் அடையாளங்கள் பற்றிப் பேசுகின்றோம்.. எங்கள் தனித்துவங்கள் பற்றிக் கதைக்கின்றோம். ஆனால் நாம் எங்களுக்கான சினிமா அடையாளம் பற்றிப் பேச அக்கறை செலுத்தாது இருக்கின்றோம். அதைக் கையில் எடுக்க ஆர்வமற்றுள்ளோம். நாங்கள் முப்பது வருடங்களுக்கும் மேலாக எல்லா வகையிலும் சிதைவடைந்து கிடக்கின்றோம். எங்களை நாங்கள் அடுத்த கட்டம் கொண்டு செல்வதற்கு அடிப்படையில் சில சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

இன்று எம்மை ஆக்கிரமிப்புச் செய்துள்ள தொலைக்காட்சி, சினிமா ஊடகங்கள் இன்னும் இன்னும் பொழுது போக்கிகளாகவும் படைப்பாக்கமற்ற வெறும் நுகர்வு மனிதர்களாக மட்டும் எங்களை மாற்றிக் கொண்டு இருக்கின்றன. எங்களைச் சிந்திக்க அவைகள் விடுவதில்லை.. நாங்களும் அதைத்தான் விரும்புபவர்களாக மாற்றப்படுகின்றோம். அல்லது அதற்குள் பழக்கப்பட்டுப் போகிறோம். சினிமா ஊடகம் என்பது மிகவும் காத்திரமான ஒரு ஊடகம். இன்றைய தொழில் நுட்ப யுகத்தில் அதன் வலிமை மிகவும் பரந்தது. அந்த வலிமையான ஊடகத்தை நாம் எங்கள் கைகளிற்குள் எடுக்கத் தவறியுள்ளோம்.

இந்தச் சிந்தனை மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்த வேண்டுமானால், எங்களுக்கான அடையாளங்களை உருவாக்க வேண்டுமானால் சினிமா என்கின்ற வலுவான காத்திரமான ஊடகத்தை எங்கள் கைகளில் எடுக்க வேண்டும். அடிப்படை சிந்தனை மாற்றத்திற்கான பாதையை நாங்கள் உருவாக்க வேண்டும்...

சினிமாவிற்கான ஒரு கல்லூரி, சினிமா தயாரிப்பு நிறுவனம், படைப்புக்களை வெளியில் கொண்டு வருவதற்கான தொலைக்காட்சி ஊடகம் இவ்வாறு ஒரு முக்கோணக் கட்டமைப்பின் மூலம் சினிமாத் தொழில் பேட்டை ஒன்றை உருவாக்குவது.. இது ஒரு கனவு.. இது ஒரு இலட்சியம்... இது ஒரு பாதை.. இதில் பயணிக்க நான் தயாராக உள்ளேன்.. இது போன்ற கனவுகளுடனும் இது போன்ற சிந்தனைகளுடனும்... இது போன்ற இலட்சியத்துடனும் இருக்கின்ற உறவுகளை ஒரு குடையின் கீழ் இணைக்க ஆவலாக இருக்கின்றோம்.

சினிமாவினுள் பிரவேசிக்க முனையும் திறனும் ஆர்வமும் உள்ள புதிய இளைய தலைமுறையினர் தென்னிந்திய வர்த்தகச் சினிமா எனும் மாய வலையினுள் மூழ்கி மூச்சிழந்து போகாமல் தடுத்து அவர்களை ஆக்கபூர்வமான சினிமா படைப்பாளர்களாக உருவாக்க வேண்டிய முக்கியமான காலம் இது

சிறிய ஆலம் விதையை நாங்கள் இப்பொழுது விதைக்க விரும்புகின்றோம்.. ஏற்கனவே நாங்கள் நிறைய வருடங்கள் பின்னோக்கி நிற்கின்றோம்.. இன்னும் காலம் தாழ்த்துவதில் அர்த்தம் இல்லை. இச் சிந்தனை முயற்சியை செயற்பாடாக்க ஒவ்வொருவரையும் இணையுமாறு அன்புடன் அழைக்கின்றேன்.

இது முழுக்க முழுக்க எங்கள் சமூகங்களுக்கான சிந்தனை வடிவம்.. எந்த அரசியல் சாயங்களும் இதற்குள் இல்லை...பிரதேச வேறுபாடுகள், மத வேறுபாடுகளை நாங்கள் எல்லா வேறுபாடுகளையும் களைந்து வித்தியாசங்களை மதித்து பல்வகைமையுள் ஓர் ஒற்றுமை கண்டு எங்கள் சமூகங்களுக்காகவே பயணிக்கக் காத்திருக்கின்றோம்.

இதன் முதற்கட்டமாக போருக்குப் பின்னரான பெண்களின் அவலங்களை அடிப்படையாகக் கொண்டு முழுநீள திரைப்படம் ஒன்றை உருவாக்க எத்தனிக் கின்றோம். இத்தொடர்ச்சி மூலம் ஒரு தலைமுறையை தொடங்க எத்தணிக் கின்றோம்...உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், வேண்டி நிற்கின்றோம்.. அன்பார்ந்த எமது உறவுகளே இச் செயற்பாட்டில் நீங்கள் ஒவ்வொருவரும் இணைந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கின்றேன்.

இவன் விமலராஜ்

தொடர்புக்கு: விமலராஜ் - 0094 777344737

email id: vimalaraj72@gmail.com

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com