Thursday, December 5, 2013

பால்மா பக்கற்றுகளை பதுக்கி வைத்திருந்தால் தண்டனையுடன் பறிமுதலும் செய்யப்படும - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ !!

விலையதிகரிப்பை நோக்காகக் கொண்டு பால் மாவைப் பது க்கி வைக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன்,பதுக்கி வைத்துள்ள பால்மா பறிமுதல் செய்யப்படுமெனவும் வர்த்தக, நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.நேற்றைய தினம் 'லங்கா மில்க்பூட்' நிறுவனத்தில் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் மூலம் 12 மெற்றிக் தொன் பால் மாவைக் கைப் பற்றியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், வர்த்தகர்கள் தன்னிச்சையாக விலையதிகரிப்பை மேற்கொள்வதற்கும் பால் மாவினை பதுக்கி வைத்துத் தட்டுப்பாடு போன்று காட்டுவதற்கும் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு கடந்த ஆறு மாத காலமாக பால் மா இறக்குமதியாளர்கள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் அனுமதி கோரி வருகின்றனர். உலக சந்தையில் பால் மா விலை அதிகரித்துள்ள நிலையிலும், நாம் உள்ளூர் சந்தையில் குறைந்த விலையிலேயே பால் மாவினை விற்பனை செய்ததாக அவர்கள் காரணம் காட்டுகின்றனர் என அமைச்சர் தெரிவித்தார்.

பால் மாவின் விலையை அதிகரிக்குமாறு கேட்பது அவர்களினால் நியாய மாக்கப்பட்டாலும், பால்மாவைப் பதுக்கி வைப்பதற்கான எந்த உரிமையும் அவர்களுக்குக் கிடையாது. நுகர்வோர் பாதுகாப்புச்சபை அதற்கெதிராக காத்திரமான நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் பால் மாவைப் பதுக்கி வைத்து நுகர்வோரை ஏமாற்ற நினைக்கும் சகல பால்மா வர்த்தக நிலையங்களையும் சுற்றி வளைத்து தட்டுப்பாடின்றி நுகர்வோருக்குப் பால் மாவைப் பெற்றுக் கொடுப்பதற்கான சகல நடவடி க்கைகளையும் வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சு மேற்கொள்ளும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com