நண்பர்களைப் போல நாட்டுக்குள் நுழைந்து நாசகாரத்தில் ஈடுபடும் அகாஷி போன்ற முகமூடிக்காரர்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது!
ஜப்பானின் விசேட சமாதான தூதுவரான யசூஷி அகாஷி போன்ற முகமூடிக்காரர்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது எனவும், புலிகள் முப்பது வருடங்கள் ஆயுதப் போராட்டம் நடத்தி பெற்றுக்கொள்ள முடியாமல் போன தமிழீழ கனவை நிறைவேற்ற வேண்டுமென்ற முனைப்புடன், இன்று பல முகமூடிக்காரர்கள் செயற்பட்டு வருகின்றனர் எனவும், யசூஷி அகாஷயின் செயற்பாடுகளும் கருத்துக்களும் கூட அவ்வாறே அமைந்துள்ளன என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் விசேட சமாதான தூதுவர் யசூஷி அகாஷியின் இலங்கை வருகை மற்றும் அவரது கருத்துக்கள் குறித்து தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கருத்து தெரிவிக்கையில்
நண்பர்களைப் போன்று நாட்டுக்குள் நுழைந்து நாசகார சக்திகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய செயற்பட்டு வருபவர்களை இனம் கண்டு கொள்ள வேண்டும். அத்தோடு அவர்களிடமிருந்து விலகிக்கொள்ள வேண்டும். இல்லையேல் நாடு பிளவுபடுவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்ற போது அதனை இடை நிறுத்தி விட்டு புலிகளுக்கு நாட்டை பிரித்துக் கொடுக்க முயன்றவரே யசூஷி அகாஷி. ஆனால் அது முடியாமல் போனது. எனவே தான் தற்போது சமாதானம் நல்லிணக்கம் போன்ற முகமூடிகளை அணிந்து கொண்டு அதனை நிறைவேற்றப்பார்க்கிறார்.
புலிகளை விட இவ்வாறானவர்கள் பயங்கரமானவர்கள். புலிகள் நாட்டிற்கு நேரடியான எதிரிகளாக காணப்பட்டார்கள். எனவே அவர்களுக்கேற்ற வகையில் எம்மை தயார்படுத்திக் கொண்டு போராட முடிந்தது. ஆனால் இவ்வாறானவர்களின் செயற்பாடுகளும் திட்டங்களும் வெளியில் தெரிவதில்லை. எனவே அரசாங்கம் இவ்வாறானவர்கள் தொடர்பில் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும்.
யசூசியின் தற்போதைய வருகை 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வழியுறுத்துவதேயாகும். அதன் பின்னர் ஏனைய வேலைகளை அவர்கள் தந்திரோபாயமாக மேற்கொள்வார்கள். இதனை அரசாங்கம் செய்யா விட்டால் சர்வதேச அழுத்தங்கள் வரும். போர்க்குற்ற விசாரணைகள் வரும் அப்படி இப்படியெல்லாம் அரசாங்கத்துக்கு மூளைச் சலவைச் செய்து தமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றப் பார்க்கின்றார்கள். மாறாக அவர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பிலே இலங்கை தொடர்பிலே எவ்வித அக்கறையும் கிடையாது.
எமது நாட்டின் மனித உரிமைகள் தொடர்பில் பேசுகின்றவர்களையும் அவர்களது நாட்டின் மனித உரிமைகள் தொடர்பாகவும் ஆராய்ந்து பார்த்தால் உண்மை நிலை என்னவென்பது நன்றாக புரியும். எனவே இவ்வாறானவர்களிடமிருந்து எமது நாட்டை பாதுகாத்துக் கொள்ள கட்சி பேதங்களை மறந்து ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment