Monday, December 9, 2013

முஸ்லிம்கள் பிளவுபட்டால் பாரிய பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவரும்! - தென் மாகாண கல்வியமைச்சர் (படங்கள் இணைப்பு)

“நாளுக்குநாள் பல்வேறு வெற்றிகளை வெலிகம முஸ்லிம் ஆரம்பப் பாடசாலை தமாக்கிக் கொள்கின்றது அதன் வளர்ச்சியில் தற்போதைய அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை முன்னேற்றக் கழகத்தினர் கைகோர்த்து நிற்கின்றனர். 8 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருக்கிறார்கள். ஒரு மாணவன் 188 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்குப் புகழ்சேர்த்துள்ளார்.

என்றாலும், அண்மையில் பாடசாலையின் வரலாற்றில் சில அசமந்த நிகழ்வுகளும் நடைபெற்றன. அவை பாடசாலைக்கு அழகு சேர்க்காதவை. தங்கள் பிள்ளைகளின் மீது தாங்கள் அன்பு செலுத்துபவர்களாக இருந்தால், உங்களுக்குள் உள்ள பிரிவினைகளைத் தள்ளியெறியுங்கள். முஸ்லிம்கள் ஒற்றுமைக்கு ஆதர்சமாக இருப்பவர்கள். நீங்கள் இவ்வாறு பிளவுபட்டால் உங்களைப் பிரிப்பது மிகவும் இலகுவாக இருக்கும். உங்களுக்கு எதிரான சக்திகள் உங்களுக்கு எதிராகச் செயற்படும். நீங்கள் பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டிவரும். அதுமட்டுமன்றி உங்கள் சிறார்களின் உள்ளமும் புண்படும். கல்வியும் தடைப்படும்“

வெலிகம முஸ்லிம் ஆரம்பப் பாடசாலையில் இன்று காலை 9.00 மணிக்கு பாடசாலை முன்றலில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவின் போது, பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட தென் மாகாணக் கல்வியமைச்சர் சந்திமா பீ ராசபுத்ர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் -

தமிழ் மொழி மூலப் பாடசாலைகளை எடுத்துநோக்கும்போது, தமிழ் மொழிப் பாடசாலைகள் பாரிய தேவைப்பாடுகளை உடையனவாக இருக்கின்றன. அடுத்த ஆண்டு முதலாம் தவணைக்கு முன்னர் பெரும்பாலும் ஆசிரிய வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படும். அந்த ஆசிரிய வளம் பெரும்பாலும் தமிழ் மொழி மூல தோட்டப் பாடசாலைகளுக்கே வழங்கப்படும்.

அதேபோல, ஆசிரிய வெற்றிடம் பற்றி நீங்கள் பெரிதாகப் பயப்படத் தேவையில்லை. அடுத்த வருட ஆரம்பத்தில் ஆசிரிய வெற்றிடங்கள் பெரும்பாலும் பூர்த்திசெய்யப்படும். பாடசாலைக்குத் தேவையான அளவு ஆசிரியர்கள் அடுத்தவருடம் பாடசாலையில் இருப்பார்கள். அடுத்த வருடம் இந்தப் பாடசாலையில் வகுப்புக்கள் 20 ஆக உயரும். அடுத்த வருடம் வகுப்பறைகள் கூடுவதற்கேற்ப பௌதிக வளமான ஒரு கட்டடம் உங்களுக்கு நிர்மாணித்துத் தரப்படும். அதைச் சிறுவர்களின் செயற்பாடுகளுக்காக பயன்படுத்த முடியும்.

விசேடமாக முஸ்லிம் மாணவர்கள் மேல் வகுப்புக்களுக்குச் செல்லும் போது அவர்கள் நடனத்தை இடை நிறுத்துகிறார்கள். இருந்தாலும் அவர்கள் கீழ் வகுப்புக்களில் மகிழ்ச்சியாக அதைச் செய்கிறார்கள். என்றாலும் உங்கள் கலாச்சாரத்தை எந்தவொரு வகையிலும் மாற்றியமைக்குமாறு நான் ஒருபோதும் உங்களுக்குச் சொல்ல மாட்டேன். என்றாலும், சிறுவயதில் மாணவர்களுக்கு ஒரு வயலினை, கிட்டாரை வாசிக்கப் பழக்குவதிலிருந்து அவர்களது ஆக்கத்திறனை வளர்க்க முடியும்.

நான் இப்போது முஸ்லிம் சமுதாயத்தினரான உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன்.. இப்பாடசாலையில் பிரச்சினையொன்று சதாவும் தோன்றிக்கொண்டே இருந்தது. இதுபற்றி நான் உங்களுக்குப் புதிதாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பாடசாலைகளிலுள்ள அனைத்துப் பிள்ளைகளுக்கும் பொறுப்பாளி நானே. நீங்கள் பெற்றோர்களாக இருக்கலாம். என்றாலும், பாடசாலையில் இருக்கும்போது அவர்கள் அனைவரும் எனது பிள்ளைகளுக்குச் சமமாவார்கள். சிறுவயதில் அவர்களுக்கு கற்பதற்கான சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டும். அவ்வாறன்றி, அதில் பிரச்சினைகள் ஏற்பட்டால் அவர்கள் கல்வியில் கரிசனை காட்ட மாட்டார்கள். அல்லது அவர்களின் எண்ணங்கள் திசை திருப்பப்படலாம். தயவுசெய்து உங்களுக்குள் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் அவற்றை பிள்ளைகளின் முன்னிலையில் காட்ட வேண்டாம். விசேடமாக ஆர்ப்பாட்டங்கள் நடாத்த வேண்டாம். அவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் பற்றி பிள்ளைகளுக்கு எதுவும் தெரியாது. பிறகு அவர்களும் அவ்வாறு அவர்கள் செயற்பட முற்படுவார்கள். ஈற்றில் பாரிய பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

பிளவுகளின்றி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியுமாயின் கல்வித் துறையில் இதைவிட பாரிய முன்னேற்றத்தைக் காணலாம். பாடசாலையில் பிளவுகள் தோன்றினால் நிச்சயம் கல்வித் துறையில் அது பாரிய தாக்கத்தைச் செலுத்தும். இதற்குப் பல உதாரணங்களை என்னால் சொல்ல முடியும். நீங்கள் சக்திமிக்க இனம். ஒன்றாக இருக்கும் இனம். பிரச்சினைகள் பிளவுகள் என்பது உங்களில் அதிகம் தோன்றுவதில்லை. பிளவுகளை உங்கள் இனத்துக்குள் கொணர்ந்தால் ஏற்படுகின்ற பின்விளைவுகள் மிகப் பயங்கரமானதாக இருக்கும் என்பதை நான் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். ஒன்றாக இருக்கும் இனத்தின் உள்ளே பிளவுகள் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் பாரியனவாக இருக்கும்.

பாடசாலையினுள்ளே அரசியல் செய்ய வேண்டாம். எனக்கா அரசியல் செய்யவும் வேண்டாம். யாருக்காகவும் செய்ய வேண்டாம். தேசிய கொள்கைகாக்காக மட்டுமே உங்கள் ஆதரவை வழங்குங்கள். மகிந்த சிந்தனை செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற காலத்தில், தெற்கிலுள்ள பிள்ளைகள் முன்னேற்றப் பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்ற காலம், நீங்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் பயமின்றி வாழ்கின்ற காலம்... எனவே தேசிய தலைமைத்துவத்துக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குமறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நாட்டை சீரான பாதையில் னகொண்டுசெல்ல உங்கள் பங்களிப்பை நல்குங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

உங்களில் பெரும்பாலானவர்கள் பாரிய வியாரிகள்... பல்வேறு தொழிற்றுறைகளைச் சேர்ந்தவர்கள். இன்றல்ல பரம்பரை பரம்பரையாக இந்நாட்டில் வியாபரிகளாக உள்ளவர்கள். நவீனத்துவத்தை நாடு முன்னோக்கிக் கொண்டு செல்கின்றது. அதற்கேற்ப உங்கள் பிள்ளைகளுக்கும் கலைகளைக் கற்றுக் கொடுங்கள்...” எனக் குறிப்பிட்டார்.

அதிபர் எம்.ஏ.எஸ். ஸனூலா தலைமையில் நடைபெற்ற இப்பரிசளிப்பு விழாவில் தென்மாகாண தமிழ் மொழிப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மதனிய்யா கலீல், மாத்தறை வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். கே. நாணயக்கார, வெலிகம நகரபிதா ஹுஸைன் ஹாஜியார் முகம்மது ஆகியோரும் உரையாற்றினர்.

நிகழ்ச்சிகள் யாவும் மாணவர்களால் தொகுத்து வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இடைக்கிடையே பார்வையாளர்களின் உள்ளத்தைக் கவரும் கலை நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டதுடன், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். அத்தோடு பரிசளிப்பு விழா மலரொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

(கலைமகன் பைரூஸ்)

1 comments :

Anonymous ,  December 9, 2013 at 11:14 AM  

inda vidayangalay , amaychcharin karutthay pottuk kaatta wendiyathu arafa thesiya padashalaykku sambandappatta warhalukkutthan......padashalykku eziraha aarppaattam ,aziparhalay shayam uutri aditthu virattuwathu ellam awarhal seyalpaaduhal.....

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com