Friday, November 29, 2013

இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பயன் முழு தென்னாசியாவுக்கும் கிடைத்துள்ளது - பீரிஸ்

இலங்கை குறித்த தவறான பிரசாரங்களை நீக்க எமது நாடு பற்றிய உண்மை நிலைமையை சர்வதேச சமூகத்திற்கு உணரவைக்க முடிந்தமை பொதுநலவாய மாநாட்டின் மூலம் இலங்கைக்குக் கிடைத்த பெருவெற்றியாகும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் நேற்று பாராளு மன்றத்தில் தெரிவித்தார்.பொதுநலவாய மாநா ட்டின் மூலம் இலங்கைக்கு என்ன நன்மை கிடைத்தது என்று கேட்பவர்களுக்கு தக்க பதில் இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், 30 வருட யுத்தத்தின் ஊடாக உருவான பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட்டது குறித்து வடபகுதி சென்ற வெளிநாட்டுத் தலைவர்கள் நேரில் கண்டதாகவும் அவர் கூறினார்.வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான 6ஆம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நாட்டின் யதார்த்தபூர்வமான நிலைமையை உலகுக்கு எடுத்துரைப்பதற்கே எமது வெளிநாட்டுக் கொள் கையில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது குறித்து கட்சி பேதமின்றி இலங்கையர் என்ற வகையில் அனைவரும் பெருமையடைய முடியும். இந்த மாநாடு நாட்டின் எதிர்காலத்துக்கு சிறந்த முன் மாதிரி என அரச தலைவர்கள் பலரும் சுட்டிக்காட்டினர். இலங்கையில் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தி குறித்து அவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். உலகில் உள்ள முக்கிய தலைவர்கள் தெரிவித்த இந்தக் கருத்துக்கள் குறித்து இலங்கை மக்கள் பெருமையடைய முடியும்.

முதலீடு மேற்கொள்வதற்கு ஏற்ற உகந்த சூழல் இலங்கையில் காணப்படுவதாக மலேசிய பிரதமர் குறிப்பிட்டிருந்தார். யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம் குறித்து சிங்கப்பூர் பிரதமர் தனது பாராட்டை வெளியிட்டார்.ஏனைய நாட்டின் உள்ளக விவகாரங்கள் தொடர்பில் அபிவிருத்தி அடைந்த நாடுகளிடையே பல்வேறு நிலைப்பாடு காணப்பட்டாலும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர் பில் மனப்பூர்வமாக மகிழ்வதாகத் தென்னாபிரிக்க ஜனாதிபதி எம்மிடம் தெரிவித்திருந்தார்.இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் நேரில் கண்டு பாராட்டவே வந்ததாக அவுஸ்திரேலிய பிரதமர் சுட்டிக்காட்டினார்.

சில பிரச்சினைகள் தொடர்பில் தங்களுக்கு தெளிவு உள்ளதாகவும் இலங்கை தொடர்பில் உண்மையான தெளிவு ஏற்பட்டிருப்பதாகவும் ருவண்டா ஜனாதிபதி தெரிவித்தார். இங்கு வந்த அரச தலைவர்களில் 20 பேர் முதற்தடவையாகவே இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.இந்த மாநாட்டிற்கு முன்னர் இலங்கை தொடர்பில் திட்டமிட்ட முறையில் தவறான பிரசாரங்கள், குற்றச்சாட்டுகள் என்பன பரப்பப்பட்டிருந்தன. ஆனால் தாம் இங்கு வந்த பின்னர் தாம் கேட்டவற்றுக்கும் இங்கு நேரில் காண்பவற்றுக்குமிடையில் வானுக்கும் மண்ணுக்கும் உள்ள வித்தியாசம் காணப்பட்டதாகவும் வெளிநாட்டு தலைவர்கள் விபரித்தனர்.

அழிவடைந்த நாடொன்றையே எதிர்பார்த்து வந்த நாங்கள் இங்கு பாரிய அபிவிருத்தியைக் கண்டதாக அவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். இளைஞர்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் ஏனையோருக்கு முன்மாதிரியானது என்று பாராட்டிய பாகிஸ்தான் பிரதமர், பொதுநலவாய அமைப்பின் புதிய தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை தொடர்பில் சிறந்த நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் பொதுநலவாய அமைப்பு சிறந்த தொடர்பாடலுடன் சிறப்பாக செயற்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். இந்த மாநாட்டின் வெற்றியானது இலங்கையின் வெற்றி மட்டுமன்றி தென் ஆசியாவுக்கே கிடைத்த வெற்றி என பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் பாராட்டியிருந்தார்.

மாநாட்டிற்கு செலவான செலவு குறித்து பேசுபவர்கள் முதலில் அவுஸ்திரேலியா எமக்கு அன்பளிப்புச் செய்த இரு கப்பல்களினதும் பெறுமதி பற்றித் தேடிப் பார்க்கட்டும். எமது கடற்படை ஆழ்கடலில் செய்யும் பெரும் சேவைக்காகவே இந்த அன்பளிப்பு கிடைத்தது. பொதுநலவாய மாநாட்டிற்கு 10 நாட்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்து சமுத்திர மாநாட்டில் ஹம்பாந்தோட்டை சமுத்திர பல்கலைக்கழகத்திற்கு தொழில்நுட்ப மற்றும், நிதி உதவி வழங்க விருப்பம் தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டு மீண்டு எழும் நாட்டை இவ்வாறு நடத்தக் கூடாது எனவும் சர்வதேச சமூகம் இலங்கைக்கு நட்புக் கரங்களை நீட்ட வேண்டும் எனவும் அரச தலைவர்கள் தெளிவாக குறிப்பிட்டிருந்தனர். இலங்கை குறித்த உண்மை நிலைமையை உலகிற்கு வெற்றிகரமாக முன்வைக்க இந்த மாநாடு எமக்குச்சிறந்த சந்தர்ப்பமாக அமைந்தது.

வெளிநாட்டு தலைவர்கள் திறந்த மனதுடன் நியாயமாக தமது நிலைப்பாட்டை வெளியிட்டிருந்தனர். வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாரிய அபிவிருத்தியை அவர்கள் கண்டனர்.52 நாடுகளில் 33 நாட்டு ஜனாதிபதிமார், உப ஜனாதிபதிமார், பிரதமர்கள் மற்றும் அரசர்கள் இதில் பங்குபற்றினர்.இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பயன் முழு தென்னாசியாவுக்கும் கிடைத்துள்ளது. சட்ட விரோதமாக வெளிநாடு செல்லும் நபர்களை கடற்படையினர் தடுத்து வருகின்றனர். இதுவரை 4 ஆயிரம் பேர் மடக்கிப்பிடிக்கப்பட்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com