Tuesday, November 26, 2013

ஐபாட், ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசிகளை பயன்படுத்துவதால் சிறுவர்களுக்கு பாதிப்பு!!!!!

பாலகர்களை ஐபாட் மற்றும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதிப்பது அவர்களது கைகளிலும் விரல்களிலும் பாதிப்புகள் ஏற்பட வழிவகுக்கும் என அமெரிக்க மருத்துவ நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

பாலகர்கள் தொடுகை உணர்வுடைய மேற்படி இலத்திரனியல் உபகரணங்களை அதிகளவு நேரம் பயன்படுத்துகையில் அவர்களது கரங்களில் எழுதுவதற்கு ஒத்துழைப்பை வழங்கக் கூடிய தசைக் கட்டமைப்பு விருத்தி செய்யப்படாது விடுவதற்கான சாத்தியம் அதிகரிப்பதாக மேரிலான்ட்டிலுள்ள கற்றல் மற்றும் சிகிச்சை நிலையத்தினைச் சேர்ந்த மருத்துவ நிபுணரான லிண்ட்ஸே மார்கோலி தெரிவித்தார்.


தொடுகையுணர்வுள்ள இலத்திரனியல் திரைகளை பயன்படுத்தும் பாலகர்கள் சரியாக பென்சில்களை பிடித்து எழுத முடியாத நிலைக்கு தள்ளப்படுவதுடன் அவர்களது கைத்தசைகளும் பலவீனமடைவதாக அவர் கூறினார்.


இது தொடர்பில் பல்ரிமோர் மருத்துவ நிலையத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர் திமோதி டொரன் விபரிக்கையில், 3 அல்லது 4 மணித்தியாலங்கள் தமது பெற்றோரின் உதவியின்றி பாலகர்கள் மேற்படி இலத்திரனியல் உபகரணங்களில் விளையாடுவது அவர்களது உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என குறிப்பிட்டுள்ளார்.


மேற்படி இலத்திரனியல் சாதனங்கள் புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டவை என்பதால் அதன் நீண்ட காலப் பாதிப்புக்கள் குறித்து எதிர்வு கூற முடியாதுள்ளதாக அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com