'என்னைவிட தமிழினம் முக்கியம் என்பதால் இழைக்கப்பட்ட அநியாயத்தை தட்டிக் கேட்கவில்லை' என்கிறார் புளொட் சிவநேசன்!
தமிழீழ விடுதலைக் கழகத்தின் மத்திய குழு உறுப்பினர் பவன் என்று அழைக்கப்படுகின்ற கந்தையா சிவநேசன், வாக்குகள் எண்ணும்போது தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றும், கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் வேண்டுகோ ளின் பேரிலேயே தான் நீதிமன்றத்திடம் நீதி கேட்டுச் செல்ல வில்லை யென்றும் நேற்று (16) ஊடகங்களுக்கு அறிக்கை விடுத் துள்ளார்.
அவ்வறிக்கையில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
திரு.கந்தையா சிவநேசன் (பவன்) ஆகிய நான் வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டேன்.
இந்தவகையில், நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட் டத்தில் எனக்கு ஒன்பதாயிரம் (9,000) வரையான விருப்புவாக்குகளை அளித்த மக்கள் அனைவருக்கும் என் இதையம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
நான் அந்த மககளுக்கு நிதியையோ, அன்பளிப்புப் பொருட்களையோ வழங்காமல் எமது கட்சியின் கொள்கைகளையும் இன்றைய எமது நிலைப்பாட்டையுமே முன்வைத்திருந்தேன்
அந்த மக்கள் அதனை ஏற்றுக்கொண்டு தங்கள் பெறுமதிமிக்க வாக்குகளை வழங்கி எனக்கு ஆதரவுகளை அள்ளி வழங்கினார்கள்.
அந்த மக்கள் கொண்டிருந்த கொள்கைப்பற்றும், உறுதியான நிலைப்பாடும் இதன்மூலம் தெளிவாக்கப்பட்டது. இத்தகைய அறியல் அறிவும் அசையாத கொள்கைப்பற்றும் அவர்களிடம் இருப்பதைக் கண்டு அந்த மக்கள் அனைவருக்கும் நான் தலைவணங்குகின்றேன்.
எனது வெற்றிக்காக அயராது பாடுபட்டவர்களும் வாக்களித்தவர்களுமாகிய முல்லைத்தீவு மாவட்ட மக்கள் நான் அவர்களது பிரதிநிதியாக தெரிவுசெய்யப்படுவேன் என்று நிச்சயமாக எதிர்பார்த்ததாக தெரிவித்திருந்தார்கள். அதுபோல் அவர்கள் சரியாகவே வாக்களித்தும் இருந்தார்கள்.
அவர்கள் எனக்கு அளித்த விருப்புவாக்குகள் எண்ணப்பட்டபோது நடைபெற்ற தில்லுமுல்லுகள் காரணமாக எனது வெற்றியை எமக்கு பொறுப்பாக இருந்த ஒருவர் பறித்து அபகரித்துக் கொண்டார். அதற்கான உறுதியான சான்றுகள் எனக்கு கிடைத்திருக்கின்றன.
விருப்பு வாக்கு எண்ணப்பட்டபோது மோசடி நடந்துவிட்டதை உணர்ந்த நான், எமது பொறுப்பான முகவரிடம் கூறி விருப்புவாக்குகளை திரும்ப எண்ணவேண்டுமென்று கேட்டபோது அதை தட்டிக்கழித்து எமது சம்மதம் இல்லாமலேயே தேர்தல் அதிகாரியைச் சந்தித்து தேர்தல் முடிவுகளை எமது கட்சி ஏற்றுக்கொள்வதாக கையொப்பமிட்டுச் சென்றுவிட்டார்.
விருப்பு வாக்கு எண்ணப்பட்டபோது பாதிக்கப்பட்ட இரண்டு வேட்பாளர்கள் அரசாங்க அதிபரிடம் சென்று விருப்புவாக்குகள் திரும்ப எண்ணப்பட வேண்டுமென்று கோரியபோது, உங்கள் கட்சியினால் நியமிக்கப்பட்ட முகவர் தேர்தல் முடிவை ஏற்று கையொப்பம் வைத்துவிட்டதால் இனி திரும்ப எண்ணமுடியாது. இனி நீதிமன்றம் சென்றுதான் இதற்கு தீர்வுகாண வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினார்.
எனவே நான் நீதிமன்றம் சென்று நியாயம் பெற முற்பட்டேன். இந்நிலையில் நான் நீதிமன்றம் சென்றால் அது கூட்டமைப்பின் வெற்றியை சந்தேகிக்க வைக்கும் என்றும், எமது எதிரிகளுக்கு சாதகமாகி விடுமென்றும், சர்வதேச ஆதரவுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமென்றும் எமது கட்சியின் தலைவரான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் குறிப்பிட்ட விடயங்களைக் கவனத்திற் கொண்டும், என்னைவிட எமது தமிழினம் முக்கியமானது என்பதாலும், நீதிமன்றம் சென்று நியாயம் கோரும் எனது முயற்சியை கைவிட்டுள்ளேன்.
எனினும் எனது வெற்றிக்காக உழைத்த மற்றும் வாக்களித்த முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு என்றென்றும் நன்றியுடையவனாக தொடர்ந்தும் பங்களிப்பேன் என்பதை நன்றிப்பெருக்குடன் கூறிக்கொள்ளுகின்றேன்.
0 comments :
Post a Comment