Tuesday, October 8, 2013

எமக்கு ஒரு அமைச்சர் வேண்டும்; முல்லை மக்கள் கோரிக்கை!

இலங்கையின் வடமாகாண சபையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்பட வேண்டும் என்று அங்குள்ள பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து கவன ஈர்ப்பு நடவடிக்கையின் மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

முல்லத்தீவு மாவட்டத்தில் உள்ள பெண்கள் அமைப்புக்கள், விவசாய, மீன்பிடிதுறை சார்ந்த அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் முல்லைத்தீவு அரச செயலகத்தின் முன்னால் கோரிக்கைகள் அடங்கிய சுலோக அட்டைகளைத் தாங்கிய வண்ணம் வீதியோரத்தில் கூடி நின்று தமது கவன ஈர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

சுனாமி பேரலைகளினாலும், யுத்தத்தினாலும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டம் அமைச்சுப் பொறுப்புக்கள வழங்கப்படாமல் புறகக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர்கள், தமது மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள நான்கு மாகாண சபை உறுப்பினர்களில் ஒருவருக்கு ஓர் அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் மகஜர் மூலம் கோரியுள்ளனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதற்காக தமது கோரிக்கைள் அடங்கிய மகஜரை முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களாகிய டாக்டர் சிவமோகன் மற்றும் எம்.ரவிகரன் ஆகியோரிடம் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கையளித்துள்ளனர்.

நான்கு பேர் அடங்கிய மாகாண சபை அமைச்சரவையை அமைப்பதற்காகப் பல தடவைகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் கூடி பேச்சுக்கள் நடத்தியுள்ள போதிலும், இன்னும் முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில், மாகாணசபை அமைச்சர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் விபரங்களை முதலலைச்சர் சி.வி.விக்னேஸ்வன் வெளியிடுவார் என்று எதிர்பாபர்க்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com