Thursday, October 24, 2013

தமிழ்-முஸ்லிம் உறவு: புனரமைக்க வேண்டிய பூந்தோட்டம்! - எஸ்.ஹமீத்

கால் நூற்றாண்டுக்கு முன்னம், எப்போதுமில்லாத அளவுக்கு வீசத் தொடங்கிய சந்தேகப் புயலில் அந்த அழகிய-நறுமணம் வீசிக் கொண்டிருந்த பூந்தோட்டம் அழியத் தொடங்கியது. வண்ணமும் வாசமுமாய் ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைந்து பூத்த மலர்கள் தத்தம் இதழ்களைக் களைந்து மொட்டைக் கிளைகளோடு வாடி நின்றன. நல்லெண்ணம்-புரிந்துணர்வு-சினேகம்-பரஸ்பர உதவிகள் என்று பூந்தோட்டத்தில் பாட்டுப் பாடிப் பறந்து திரிந்த ஒற்றுமைப் பட்டாம் பூச்சிகள், வீசத் தொடங்கிய சூறாவளிக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் கண் காணாத இடம் நோக்கிப் பறந்து போயின.

இப்போது 25-35 வயதான பருவத்தினரில் பெரும்பாலானோர்க்குத் தெரிந்ததெல்லாம் தமிழ் மக்களுக்கு முஸ்லிம்கள் விரோதிகள் என்பதும் முஸ்லிம்களுக்குத் தமிழர்கள் எதிரிகள் என்பதும்தான். இலங்கை சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மட்டுமல்லாது, சுயநல தமிழ்-முஸ்லிம் அரசியல் வியாபார நிறுவனங்களும் இந்த நிலைமையைத் தோற்றுவிப்பதற்கான தமது எத்தனங்களில் பாரிய வெற்றியைக் கண்டிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

வெவ்வேறான மத நம்பிக்கைகளுடனும் பாரம்பரியங்களுடனும் கலாசாரங்களுடனும் வாழ்ந்தாலும், மொழி என்ற வட்டத்துக்குள் ஒன்றிணைந்து ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ்-முஸ்லிம் மக்களின் போற்றத்தக்க ஐக்கியத்தில் மண்ணை அள்ளிப் போட்ட கொடுமை திடீரென நிகழ்ந்ததல்ல. அது பல்வேறு சூழ்ச்சிக் குழுக்களினால் மிகத் திட்டமிடப்பட்டு அரங்கேற்றி முடிக்கப்பட்ட கபட நாடகமாகும்.

இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களில் செறிவாக வாழ்ந்த தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையிலான நேசப் பிணைப்புகளை இரை மீட்டிப் பார்க்கையில் இதயம் நொந்து அழுவதைத் தவிர்க்க முடியாமல் உள்ளது.

அங்குள்ள பாடசாலைகளில் இணைந்து கல்வி கற்று, மைதானங்களில் விளையாடி, குளங்களில் நீராடி, வாகனங்களில் பயணித்து, விழாக்களில் குதூகலித்து, பண்டிகைகளில் பரஸ்பரம் பட்சணங்கள் பகிர்ந்தளித்து, பெருநாள்-திருநாட்களில் வாழ்த்துச் சொல்லி,சுப காரியங்களில் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களையும் சோக நிகழ்வுகளில் பங்குபற்றி ஆறுதலையும் வழங்கி வாழ்ந்த அந்த வசந்த காலங்களை எண்ணுகையில் நெஞ்சத்தில் ஏக்கப் பெருமூச்சுக்கள் இடையறாது எழுகிறது.

எந்தக் கொள்ளிக் கண் பட்டதோ, தமிழீழ விடுதலைக்கென்று தொடங்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தின் பின்னர் வட-கிழக்குத் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமைப் பூங்காவை நோக்கிப் புயலடிக்க ஆரம்பித்து விட்டது. மொழியின் ஐக்கியம் தாண்டி, மதத்தின் மேலான ஐயப் பார்வை உக்கிரமடையத் தொடங்கிற்று.

அன்பால் கட்டுண்டு கிடந்தவர்களை ஆயுதங்கள் வலுக்கட்டாயமாகப் பிரித்தெடுத்தன. காட்டிக் கொடுத்தல்களும் கழுத்தறுப்புகளும் மும்முரமாகின. பாவமும் பழியும்-பழிக்குப் பழியுமென தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையெனும் மலர்க் காடு, மயானக் காடாய்ப் பாழ்பட்டது.

யார் ஆரம்பித்தது...யார் முடித்து வைத்தது..? யார் அதிகமாகக் குற்றமிழைத்தது...யார் குறைவாகக் குற்றம் புரிந்தது...? என்பது போன்ற வினாக்களுக்கான விடை தேடல்களில் இறங்குவதானது, இனி என்றைக்குமே தமிழ்-முஸ்லிம் உறவுக்கான சூழ்நிலைகளை உருவாக்குவதற்குத் தடையாகவே இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயமாகும்.

கணக்கிட்டுப் பார்க்கப் போனால், இரு தரப்பிலும் கொடுஞ் செயல்கள் புரிந்தவர்கள் சில ஆயிரக் கணக்கானோர்தான். ஆனால், அந்தக் கொடுஞ் செயல்களை வெறுத்தோர்-வெறுப்போர் பல இலட்சக் கணக்கானோர் என்ற உண்மை தெளிவாகும்.

வன்செயல்களினால் பாதிக்கப்பட்டோரும் அவரைச் சார்ந்தோரும் உணர்ச்சிகளின் உந்துதலுக்காற்பட்டு, அவ்வப்போது எதிர்த் தரப்பாரை நொந்து கொள்வது வெகு இயற்கையானதே. ஆயினும், இறந்த காலங்களில் நடந்து முடிந்து விட்டவற்றை இல்லாமற் செய்துவிட முடியாதெனும் யதார்த்தத்தை உணர்ந்து, தம்மைத் தாமே தேற்றிக் கொண்டு வாழ முற்படுவதே விவேகமாகும்.

விட்டுக் கொடுப்பு, சகிப்புத்தன்மை,பரஸ்பர நம்பிக்கை,புரிந்துணர்வு,மதங்கள் கடந்து மனிதம் சார்ந்த அணுகுமுறைகள் என்பவற்றால் பிரிந்து நிற்கும் சமூகங்கள் மீண்டும் பிணைக்கப்பட வேண்டும்!!

தமது இருப்புக்காகவும் பிழைப்புக்காகவும் கடந்த கால ரணங்களைக் கிளறி வாழ்வோரிலிருந்து விலகி, சீரழிந்து போன தமிழ்-முஸ்லிம் உறவைச் சீர் செய்து, செப்பனிட்டு வாழும் வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும். கொடுந் துவேஷக் கூற்றத்தினால் பாழ்பட்டுப் போயிருக்கும் தமிழ்-முஸ்லிம் உறவுப் பூந்தோட்டம் உடனடியாகப் புனரமைக்கப்பட வேண்டும்!

தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறுதியான ஐக்கியத்தை உருவாக்கும் பாரிய பணியில் இரு தரப்பிலுமுள்ள ஆர்வலர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் தம்மை அர்ப்பணித்துக் கடமையாற்றின், வெகு விரைவிலேயே வண்ணத்துப் பூச்சிகள் சிறகடிக்கும் வாசமிக்க தமிழ்-முஸ்லிம் உறவுப் பூங்காவனத்தைப் புனர் நிர்மாணம் செய்து விடலாம்.

0 comments :

எம்மை தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com