Thursday, October 3, 2013

உணர்ச்சிக் கவிஞருக்கோர் உணர்வு பூர்வமான கடிதம்

அன்பான உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஜயா அவர்கட்கு ,

உங்களின் தமிழறிவில் கால்பங்கு கூடக் கிடையாத இந்த ஈழ மண்னில் வாழும் கடைத் தமிழனின் கனிவான வணக்கங்கள்.

மேடைதோறும் முழங்கி மேகக் கூட்டத்தையே கலக்கி மழையாகப் பொழிய வைத்த மாபெரும் கவிஞரல்லவோ தாங்கள்.

தமிழ் தான் என் மூச்சு , தமிழ் தான் என் பேச்சு என்று மூச்சுக்குக் மூச்சு கொட்டித் தீர்த்து எம் தானைத் தலைவர் , தனிப்பெரும் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் வாழும் போதே மாமனிதர் பட்டம் பெற்ற மாண்புக்குரியவர் அல்லவா தாங்கள்.

ஜயா, உங்களுக்கு இக்கடிதத்தை எழுதத் தூண்டியது அண்மையில் நான் இணையத்தளத்தில் கண்ட உங்கள் சீற்றம் மிகு பேச்சுத்தான்.

என்னே அழகுத் தமிழ் , எத்தகைய எதுகை மோனைகள் அத்தனையையும் ஜயகோ ஒருவரைத் திட்டித் தீர்ப்பதற்குப் பயன் படுத்தி விட்வீர்களே ஜயா?

கடந்த முப்பதுவருடங்களுக்கு மேலாக அதுவும் நான் பிறப்பதற்கு 18 மாதங்களுக்கு முன்னிருந்தே போராட்டம் கண்ட எங்கள் இனம் அதன் தலைவிதியைத் தொலைத்து விட்டுத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு பொழுதினிலே அவர்களைத் தாலாட்டிக் கொஞ்சம் மகிழ்விக்க வேண்டிய உங்கள் இனிய தமிழ் இத்தனை வீணாகப் போய்விட்டதே எனும் ஏக்கம் என் நெஞ்சை வாட்டுகிறது ஜயா.

இதோ தமிழீழம் ! அதோ தமிழீழம் என 25 அகவைகளுக்கு மேலாக மயாஜாலம் காட்டி விட்டு அவரையே நம்பி இருந்த மக்களை நம்பிக்கை எனும் மலையுச்சி வரை அழைத்துச் சென்று அங்கிருந்து உயிர் பிழைக்க முடியாதவாறு தள்ளி விழுத்தி மாய்த்த தானைத் தலைவரிடம் பதில் கேட்க இயலாது ஏனெனில் அவரும் அந்த எமலோகம் ஏகி விட்டார்.

ஓ !

நீங்களும் அவர் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று எஞ்சியிருக்கும் மக்களை மிச்சமின்றிப் பலி கொடுக்க எத்தனிக்கும் கும்பலில் ஒருவரல்லவா ? மறந்து விட்டேன் ஜயா !

பாவம் உயிரோடிருக்கும் உங்களை மாமனிதனாக்கி கெளரவித்த அந்தத் தானைத் தலைவனின் மறைவிற்கு உங்கள் வசமிருந்த தங்கத் தமிழால் ஒரு அஞ்சலிக் கவி கூட தரமுடியாதவாறு உங்கள் பொய்மைக் குழப்பம் உங்கள் கைகளுக்கு விலங்கிட்டு விட்டதல்லவா ?
சரி அதுதான் போகட்டும் அந்த அரும் பெரும் தலைவனுக்கு உங்கள் கைகளால் அஞ்சலிக் கவிதை பெறும் அருகதை இல்லை என்றே எடுத்துக் கொள்கிறேன்.

" தமிழன் என்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா " என்று உங்கள் தமிழ்த் திறனால் உசுப்பேறிய வாலிபர்கள் தங்கள் நிமிர்த்தப்பட்ட தலைகளை இலங்கை இராணுவத்திடமும், மேதகு தலைவரிடமும் பரிதவிக்க பறி கொடுத்துக் கொண்டிருக்க, வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் தலைநகரில் 30 வருடங்களாக உங்கள் தலையைத் தப்ப வைத்துக் கொண்டிருக்கும் ஒரு உயர் கவிஞன் அல்லவா தாங்கள் ?

அது மட்டுமா ? உங்களைப் போன்ற தமிழ் வெறியேற்றும் கூட்டத்தினரால் தம் நிலை மறந்து யாரோ பெற்ற பிள்ளைகள் தம்முயிரைப் பணயம் வைத்துப் போராடிக் கொண்டிருக்க உங்கள் வாரிசினை வெளிநாட்டில் நிம்மதியான வாழ்வை அனுபவிக்க அனுப்பி வைத்த மாமனிதரல்லவா ஜாயா நீங்கள் ?

யார் செய்த புண்ணியமோ மாபெரும் பேரழிவுக்குப் பின்னால் புயலுக்குப் பின்னால் வரும் அமைதியைப் போல ஈழ மண்ணில் வாழும் எமக்கு ஒரு சிறிய ஒளிக்கீற்ருத் தெரிகிறது போல ஒரு எண்ணம் தோன்றும் போது பாதுகாப்பான கவசத்திலிருந்து கொண்டு அவ்வொளிக்கீற்றையும் அடைக்க ஒரு ஓலையைத் தேடுகிறீர்களே ஜயா? இது நியாயமா?

புலி வாலைப் பிடித்துக் கொண்டு அதை விடவும் முடியாமல் அதில் சவாரி செய்யவும் முடியாமல் தவிக்கும் ஒருவனைப் போல தவித்துக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொஞ்சம் அறிவு கொண்டதே எனும் வகையில் நடந்து கொண்டது.

எமது நேச நாடான இந்தியா , தமது ஒரு ஒப்பற்ற தலைவனை மேதகு தலைவரின் அரசியல் சாணக்கியம் எனும் பெயரில் எடுத்த அரசியல் வங்குரோத்து நடவடிக்கையால் பலி கொடுத்தும் கூட தகுந்த அரசியல் ஆலோசனைகளின் மூலம் ஒரு தேர்தலை வடமகாணத்தில் நடத்தி முடித்திருக்கிறது.

அது மட்டுமின்றி வடமகாணத்தின் முதலாவது முதலமைச்சராக இதுவரை தன்மீது எதுவித அரசியல் சாயமும் பூசாத முன்னால் பிரதம நீதியரசர் சீ.வீ.விக்னேஸ்வரன் அவர்களை தெரிவு செய்யும் படியான வகையில் கூட்டமைப்பிற்கு அறிவுறுத்தியிருந்தது.

சிறிய அளவிலான ஒரு நிம்மதிப் பெருமூச்சை விட்ட எம் ஈழத் தமிழர்களின் வாழ்வில் மீண்டும் சூறாவளியைத் தோற்றுவிக்க தாங்களும், தங்களைச் சார்ந்தவர்களும் கங்கணம் கட்டிக் கொண்டு இயங்குவது எமது உள்ளத்தை ரணமாக்குகிறது ஜயா.

நேற்றுக் கொழும்பில் விளைந்து இன்று யாழ்ப்பாணத்தில் தளைத்தவர் என்று உங்களால் வருணிக்கப்பட்ட விக்னேஸ்வரன் ஈழம் எனும் நாட்டிற்குள் தானே வாழ்ந்திருக்கிறார். நாட்டில் நடக்கும் போரிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவர் வேறு நாடு ஒன்றிலும் ஓடிப்போய் ஒளிந்து கொள்ளவில்லையே ! ஜயா.

தந்தை செல்வா , ஜீ.ஜீ. பொன்னம்பலம் போன்ற நீங்கள் பின்பற்றி வந்த தலைவர்கள் தமது தளமாக கொழும்பை வைத்து செயற்பட்ட காலங்களை நீங்கள் அறிந்திருக்கவில்லையா ? முப்பது வயது கூட நிரம்பாத எனக்குத் தெரிந்த வரலாறு தமிழீழம் எனும் கொள்கையில் விதையாக விழுந்து விருட்சமாக் வளர்ந்து நிற்கும் உங்களுக்கு தெரியாமலிருக்கும் என்பது கேலிக்கூத்தாகாதா ?

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக போராட்டம் எனும் பெயரில் சட்ட சீர்குலைவுகளுக்கள்ளாகி அடையாளத்தை இழந்து தவித்த எம் மக்கள் சிறிதளவுவாவது ஒரு நிலையான் வாழ்விற்குத் திரும்புவதை எதிர்ப்பதில் நீங்கள் காட்டும் தீவிரம் என்னைப் போன்றவர்களைத் திகைக்க வைக்கிறது.

எம்மண்னிலே வந்து சிறிது காலம் வாழ்ந்து பார்த்தீர்களானால் எம் இன்னல்களின் ஆழம் உங்களுப் புரியும். ஒரு கட்டுபாடற்ற கலாச்சாரச் சீர்குலைவ்வுக்குள்ளாகும் என்னைப் போன்ற இளளைஞர், யுவதிகளின் அவலம் புரியும்.

எதிர்ப்பரசியலினால் 30 வருடங்களுக்கு மேலாக எதையும் சாதிக்க முடியவில்லை இணக்க அரசியலுக்கு ஏன் சிறிது கால அவகாசம் கொடுக்கத் தயங்குகிறீர்கள் ?

ஜயா , ஒரு குழந்தை மிறந்து மண்னில் தவழும் முன்பாகவே அதற்கு நடக்க வராது, பேச வராது என்றெல்லாம் எதிர்மறையான கருத்துகளை வைத்தால் எப்படி அக்குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்கும் ?

அதைப் போன்றல்லவா ? இருக்கிறது உங்கள் வடமகாண சபையின் முதல்வர் மீதான காட்டம்.

விதவைப் பெண்களின் தவிப்பு ஒருபுறம் , சீர்குலைந்த கல்விக் கட்டமைப்பினால் எதிர்காலத்தைத் தொலைத்த என் போன்றவர்களின் அவலம் ஒருபுறம், நாகரீகம் என்பதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் கலாச்சார சீரழிவுக்குள்ளாகும் இளைஞர், யுவதிகள் இன்னொரு புறம். இவர்களின் வாழ்வைச் சீரமைக்க ஒரு சீரான கட்டமைப்புத் தேவை என்பதை உணராமல் உங்களைப் போன்றோர் சுயநலத்தை முன்வைத்து எமது மண்னின் அமைதியைச் சீர்குலைக்கும் நடவடிக்கையை இனியாவது நிறுத்துங்கள்.

புலம் பெயர்ந்தோரில் சிலர் மேதகுவின் மேதமையைச் சொல்லி தாம் முடக்கி வைத்திருக்கும் பணத்தின் எச்சங்களை உங்களைப் போன்றோரை நோக்கி வீசுவதனால் நீங்கள் போடும் இந்தக் காட்டுக்கூச்சல் உங்களுக்கு தமிழீழத்தைப் பெற்றுத் தரப்போவது இல்லை.
மாறாக எம் மண்ணில் எஞ்சியிருக்கும் என் போன்ற எச்ச சொச்சங்களாகிய தமிழர்களின் வாழ்வை முற்றாக அழிக்கும் செயலைத் தான் நீங்கள் அரங்கேற்றப் போகிறீர்கள்.

ஜயா உங்களைப் போன்றோரிடம் வெளிநாடு செல்ல வசதியில்லாமல் உள்நாட்டில் முடங்கி வாழ்க்கை கொஞ்சம் அமைதியடையாதா என ஏங்கும் என் போன்றோர் கேட்பதெல்லாம் சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்பதுவே.

கிடைத்த இந்த தேர்தல் வெற்றியின் மூலம் ஓரளவு எம்மை நாமே பராமரிக்கும் வழிமுறைகள் கிடைக்குமா என்று ஒன்றுபட்ட நாட்டினுள் ஒரு நடுநிலையான தீர்வை எட்டுவதற்கு நீங்கள் வாழும் பாதுகாப்பான பாரத பூமி போன்ற நேசநாடுகளுக்கு சந்தர்ப்பம் அளியுங்கள் என்பதுவே.

உங்களது உடல்நலக் குறைவைப் பற்றி அறிந்திருக்கிறேன். தங்கத் தமிழ்க் கவி உங்களினது உடல்நலனிற்காக எல்லம் வல்ல அந்தாஅண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

ஈழத்திலிருந்து
வாழத் துடிக்கும் ஈழத் தமிழன்
நல்லையா குலத்துங்க்கன்

3 comments :

Anonymous ,  October 3, 2013 at 11:04 PM  

A haa! Fine fine. This is very very good explanation for everybody.

I dont think - Kasi Ananthan will understand this! He will get supports from rest LTTE networks(Diasporas who have LTTE s funds all ower the world) for giving a saund,

He is a 0!

Anonymous ,  October 4, 2013 at 12:13 AM  

நல்லையா அவர்களே,
உங்கள் கவிதை வடிவிலான வேண்டுகோளில் ஈழதமிழ் மக்களின் தபோதைய ஆதங்கம் அப்படியே பிரதிபலிகின்றது. மிகவும் சிந்திக்ககூடிய கட்டுரை. நாம் மிகவும் வரவேற்கிறோம்.

ஆனால், பல துன்பங்கள், துயரங்கள், இழப்புக்களை கண்டும் எம் மண்ணை விட்டு நம் மக்கள் சுயநல வாதிகளாக, கோழைகளாக ஓடி விடவில்லை.

இதுவரை காலமும் நாசமாய் போனவர்களின் தமிழீழ மாயையில் மயங்கி,
நாம் பட்ட வேதனைகள், சோதனைகள், வடுக்கள், ரணங்கள் இழப்புக்கள் எல்லாம் எங்களுக்கு தான் புரியும். இப்போ எமது நிலைமைகள், தேவைகள் என்ன என்பதையும் எங்களுக்கு தான் புரியும்.

நிட்சயமாக சுயநலவாத புலம் பெயர் தமிழர்களுக்கும், தமிழக அரசியல் வாதிகளுக்கும் புரிய மாட்டாது.

எனவே, அவர்கள் எமக்கு உதவி செயாவிடினும் உவத்திரம் கொடுக்காமல் இருந்தாலே போதும்.

Anonymous ,  October 4, 2013 at 9:08 AM  

நல்லையா அவர்களே,

சுயநலவாத புலம் பெயர் தமிழர்களுக்கும், தமிழக அரசியல் வாதிகளுக்கும் புரிய மாட்டாது.அவர்கள் எமக்கு உதவி செயாவிடினும் உவத்திரம் கொடுக்காமல் இருந்தாலே போதும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com