Thursday, October 17, 2013

கூட்டமைப்பை ஆண்டவர் தான் காப்பாற்ற வேண்டும்! பதவியேற்பு சுவாரஸ்சியங்கள்- சித்திரன்

வடக்கு மாகாணசபைத் தேர்தல் இடம்பெற்று முடிந்த பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துவரும் அரசியல் நடவடிக்கைக்ளில் சுவாரஸ்சியமான நிகழ்வுகள் பல இடம்பெற்றுவருகின்றன. அந்தவகையில், கூட்டமை ப்பின் மாகாணசபை உறுப்பினர்களில் 21 பேர் கடந்த 11ம் திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் பதவியேற்றிருந்தனர். அங்கு வேடிக்கை வினோதங்களுக்கு குறைவில்லை.

நினைவு தினக் கூட்டத்தில் கூட அஞ்சலி செலுத்த ஆளில்லாமல் இருக்கும் தந்தை செல்வா சமாதி அன்று சனக் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. (எல்லாம் தேர்தல் காய்சல் தான். அதில எத்தனை பேருக்கு தந்தை செல்வா பற்றி தெரியும். சித்தார்த்தனையும் சிவாஜிலிங்கத்தையும் தவிர மற்ற மாகாணசபை உறுப்பினர்களுக்கு தெரியாதாமே)

கூட்டமைப்பு நடத்திய கண்டனப் பேரணிகளில் கூட கலந்து கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ( அது அரசாங்கத்திற்கு எதிராக செய்வது. அவங்கள் அவையின்ர நண்பர் ஆச்சே. பிறகு எப்படி அதில வரமுடியும் .இது அரச நிகழ்சசி நிரலில நடக்கிறது. வராம என்ன பண்ணுறது)
மாகாணசபை உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் என பலரை அழைத்து வந்திருந்தனர். அதனால் வீரசிங்கம் மண்டபம் நிரம்பி வழிந்தது. கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ஆர்பாட்டம் ஒன்றில் கூட இவ்வளவு சனம் இல்லை. ( போட்டியிட்ட வேட்பாளர்களில் ஆர்பாட்டங்களுக்கு யாரையா வந்தது. பெரிசா சனத்தை கதைக்கிறியள்)

இதுவரைக்கும் கூட்டமைப்பினருடன் முரண்பட்டு வந்தவரான யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேராவும் தந்தை செல்வாவின் சமாதியில் இருந்து ஊர்வலமாக வந்திருந்தார். ( இது அரச நிகழ்ச்சி நிரலில நடக்கிற நிகழ்ச்சியாச்சே. அதைவிட முதலமைச்சர் மகிந்தன்ர காலில விழுந்திட்டார். பிறகு வராட்டால் போட்டுக் கொடுத்திருவார்)

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா போன்று நிகழ்வு கலகலப்பாக இருந்தது. ஏராளமான பெண்கள் வண்ண வண்ண ஆடைகளில் வந்திருந்தனர். கூட்டமைப்பில் இவ்வளவு பெண்களா? என வியந்தனர். ( எல்லாம் கொழும்பில இருந்து முதலமைச்சரும் எம்.பிமாரும் கூட்டக் கொண்டு வந்திருப்பினம்)

வழக்கமாக கூட்டமைப்பின் போராட்டங்கள், பேரணிகள், ஆர்பாட்டங்கள் என்பவற்றில் முன்னின்று கற்பூரம் கொழுத்தி ஆசிர்வாதம் வழங்கும் நபர் இந்த கூட்டத்தில் மிஸ்சிங். ( இங்க அடி விழாது தானே அவரைக் கூப்பிட்டிருக்க மாட்டாங்க. மற்றது உவையின்ர பம்மாத்து அந்த ஆளுக்கும் விளங்கி இருக்கும்)


நிகழ்வு ஏற்பாடுகள் படுமோசமாக இருந்தன. பங்கெடுக்க வந்திருந்த அரச அதிகாரிகளுக்கு ஆசனங்கள் இருக்கவில்லை. அதேபோன்று பத்திரிகையாளர்களுக்கும் இருக்கைகள் ஒதுக்கவில்லை. (அவர்கள் யாரும் செய்யுற நிகழ்வில புகுந்து படம் போட்டு பேசிட்டுத் தானே போக தெரியும். சொந்தமாக நிகழ்வை நடத்தியிருந்தால் தானே..)

இந்திய துணைத்தூதர் வி.மகாலிங்கம் மண்டபத்திற்கு வந்த போது அவரை வரவேற்க யாருமே இருக்கவில்லை. ( இப்ப மகிந்த ஓகே ஆகிட்டார். இனி இந்தியா எதற்கு)

பதவியேற்க வந்த மாகாணசபை உறுப்பினர்களில் பலர் கையோடு புகைப்படப்பிடிப்பாளர்களை அழைத்து வந்திருந்தனர். அவர்களின் கெடுபிடிகளால் அரங்கு அல்லோலகல்லோலப்பட்டது. (எல்லாம் பதவிக்கும் விளம்பரத்திற்கும் அள்ளப்பட்டதுகள் தானே)

பத்திரிகையாளருக்குரிய ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினால் கட்சியின் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது. எலக்சன் என்றால் குனிந்து வருவியள். இப்ப ஏறி இருந்து திமிர் காட்டிறியளோ என்று மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சீறினார். ( இனி ஏன் அய்யா குனியப் போகினம். இனி நீங்கள் குனிய அவர்கள் குத்தப் போறார்கள்)

புலித்தலைமையின் பின்னால் சென்று தங்கள் உயிர்களை மாய்த்துக் கொண்டோருக்கு ஒரு அஞ்சலி செலுத்தப்பட்டது. ( தேர்தல் அறிக்கையில் புலிகள் மீதும் விசாரணை தேவை. பேச்சுக்களில் ஆயுதப் போராட்டத்தை கொச்சப்படுத்துதல். பிறகு மாவீரருக்கு அஞசலி. என்னய்யா பம்மாத்து விடுறியள். அடுத்த தேர்தல் ஒன்று அண்மையில் இருக்குப்போல)
நிகழ்வை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் புறக்கணித்திருந்தன. செல்வம் அடைக்கலநாதன் மட்டும் வந்திருந்தார். ( வந்தால் தானே பவுடர் விஸ்னஸ் அவருக்கு ஓடும்)

தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாக்களித்தனர். ஆனால் நாம் ஒற்றுமையாக இருக்கவில்லை என செல்வம் சொன்னபோது அரங்கம் அதிர கைதட்டல் கிடைத்தது. ( தன்ர கட்சிய ஒற்றுமைப் படுத்த தெரியாத தலைவருக்கு ஏனிந்த வெட்டிப் பேச்சு)

தமிழ் மக்களை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என தந்தை செல்வா சொன்னார். ஆனால் கூட்டமைப்பை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று நான் இன்று சொல்கிறேன் என்றார் செல்வம். ( வாற மாசம் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் போது செல்வத்தை எந்த கடவுள் காப்பாற்றப் போறார். பம்மாத்து தானே அவர் எங்க உண்ணாவிரதம் இருக்கிறது)

இவ்வளவு காலமும் அரசியல் பற்றி வாய் திறக்காத மதத் தலைவர்கள் கூட கூட்டமைப்பு மேடையில் மடைதிறந்த வெள்ளமாக தமது கருத்துக்களை கொட்டித் தீர்த்தனர். (மன்னார் ஆயரை மாதிரி பழகீட்டாங்க. இனி கும்பிட்ட மாதிரி தான்)
நிகழ்வு ஆரம்பித்ததும் அழகு ராணிகளுக்கு சூட்டுவது போன்று முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனுக்கும் ஆதரவாளர்களால் சூட்டப்பட்டது. கூடுதலாக வேல் ஒன்றும் விக்கினேஸ்வனுக்கு கொடுக்கப்பட்டது. (அவர்களுக்கு அழகுராணிகளை பிடிக்கும் என்று தெரிஞ்சிட்டு பாருங்க)

முதலமைச்சர் உரையாற்றும் போது பொது வாழ்வில் இருப்பவர்கள் சுயநலமாக முடிவெடுக்கக் கூடாது. எனத் தெரிவித்ததர். தமக்கோ, தமது குடும்பத்துக்கோ, தனது தம்பிக்கோ எனப் பாராமல் நடந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்ததர். பதவியேற்புக்கு மட்டும் குடும்பத்தை அழைத்துச் செல்லலாமா என அருகில் இருந்தவர்கள் அதற்கு முனுமுனுத்தனர். (தன்ர மனிசிட சகோதரனுக்கும் ஒன்றுவிட்ட சகோதரனுக்கும் செயலாளர் பதவி கொடுத்திட்டார் முதலமைச்சர். பிறகு ஏன் இப்படி சொன்னார். அவரும் வெட்டிப் பேச்சு தான் போல)

வலி.வடக்கு தவிசாளர் நன்றியுரை கூறி முடிக்க முன்னர் அவரவர் ஆசனங்களை விட்டெழுந்து எல்லோரும் தங்கள் வேலைகளை பார்க்கத் தொடங்கினர். (இப்பவே தொடங்கினால் தானே கணக்கு பார்த்து சுருட்டலாம்)

1 comments :

Anonymous ,  October 17, 2013 at 6:14 PM  

We have seen enough valueless performances in our past political history of tamils.We do expect that Mr.CV would be a best administrator
and make the province to the top list of the country.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com