Friday, September 20, 2013

நாட்டை துண்டாட நினைக்கும் சில தலைவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பிற்கு ஆலோசனை!

சில தலைவர்கள் நாட்டில் ஏதாவது அசம்பாவிதங்களை ஏற்படுத்தி நாட்டில் பிளவை ஏற்படுத்த தயாராகுகின்றனர். இது தொடர்பாக பாதுகாப்பு தரப்பிற்கு தான் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், குறித்த விடயம் தொடர்பில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லையெனவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணசபைக்கு ஐ.ம.சு.மு. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கண்டி பொதுச்சந்தை முன்றலில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 21 ம் திகதி உங்களது பொறுப்பை சரிவர நிறைவேற்றுங்கள். உங்கள் தெளிவான முடிவை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்கூறுங்கள். இதுதான் மலை யக மக்களின் முடிவு என்பதை, உறுதிபட கூறுங்கள் எனவும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

எமது அரசாங்கம் எந்தவொரு அபிவிருத்தியையும் மேற்கொள்ளவில்லையென சிலர் குற்றம் சாட்டுகின்றனர். நான் சிறுவயதில் கொழும்பில் மாத்திரமே காபட் இடப்பட்ட வீதிகளை கண்டிருக்கின்றேன். ஆனால் இன்று அபிவிருத்தியை எங்கு சென்றாலும் காண முடிகிறது. எமது அரசாங்கமே அபிவிருத்தியினை கிராமங்கள் வரை கொண்டுசென்றது. மேலும் கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை குறித்து சிலர் தவறான பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் எமது அரசாங்கம் மக்களின் கருத்துக்களையும், தேவைகளையும் அறிந்தே செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பிரதேசத்தின் அபிவிருத்திக்கு வீதிகள் மிகவும் பிரதானமானது, அதனால் ஒவ் வொரு தேர்தல் தொகுதியிலும் 50 கிலோ மீற்றர் தூர வீதிகளை மீளப் புனரமைத்து வருகின்றோம். அடுத்த வருடம் முதல் ஒவ்வொரு தொகுதிக்கும் 100 கிலோ மீற்றர் தூர வீதிகள் புனரமைத்துக் கொடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அழிக்கும் வாக்குறுதிகளை அவ்வாறே நிறைவேற்றும். இந்த நாட்டை துண்டாடஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று நாம் உறுதியளித்தோம். அதனை கடைசி வரை காப்பாற்றுவோம் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com