Friday, August 30, 2013

தாக்குதல் நெருங்குகையில் சிரியப் போரை நியாயப்படுத்துவதற்கான அமெரிக்க-நேட்டோ பிரச்சாரம் சிதைகிறது. By Thomas Gaist and Alex Lantier

சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சி, கூத்தாவில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது என்பதற்கு வாஷிங்டனிடம் ஆதாரம் ஏதும் இல்லாத நிலையில், சிரியாவிற்கு எதிராக போரை நியாயப்படுத்தும் வாஷிங்டனின் பிரச்சாரம் சிதைந்து கொண்டிருக்கிறது; இன்னும் தெளிவாக இப் போர் சட்டவிரோதமானதாகும். ஒரு தவிர்க்க முடியாத அமெரிக்க-நேட்டோ தாக்குதல் வரவுள்ளது என்னும் செய்தி ஊடக அறிக்கைகள் இருக்கையில், அமெரிக்க மற்றும் பிரித்தானிய அதிகாரிகள் நேற்று போரைத் தொடக்குவதை அவர்கள் தாமதப்படுத்தக்கூடும் என்று கூறினர்.

அரசியல் ஸ்தாபத்திற்கு உள்ளே, வெறுக்கப்பட்ட 2003 ஈராக்கியப் படையெடுப்பை முன்மாதிரியாகக் கொண்டு எப்படி சிரியப் போரை நடத்துவது என்பது குறித்த கவலை உள்ளது. ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் சட்டபூர்வ அனுமதி இன்றி—அதாவது சர்வதேச சட்டத்தை மீறி மீண்டும், வாஷிங்டனும் லண்டனும் புதிய போரை, பேரழிவு ஆயுதங்கள் பற்றிய பொய்களின் அடிப்படையில் நடத்த முயல்கின்றன.

போர் தொடங்கு முன்னரே, ஒபாமா நிர்வாக அதிகாரிகள் சீர்குலைந்துள்ளனர். PBS தொலைக்காட்சி பேட்டியில் நேற்று இரவு ஒபாமா தவிர்க்க முடியாத தாக்குதல் என்னும் அச்சுறுத்தல்களில் இருந்து பின்வாங்க முயன்றார்: “நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை, ஆனால் இரசாயன ஆயுதங்கள் பயன்பாடு குறித்த சர்வதேச விதிமுறை, கணக்கில் கொள்ளப்பட வேண்டும். இதை நாம் ஒரு தெளிவான மற்றும் உறுதியான ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் கூறுகிறோம் என்றால், இதைச் செய்யாதீர்கள், எங்கள் தேசிப் பாதுகாப்பு மீது நீண்டகால நேரியப் பாதிப்பை அது ஏற்படுத்தக்கூடும்” என்று முன்னரே கூறியுள்ளோம்.”

தன்னுடைய நிர்வாகம், அசாத்திற்கு எதிராக நடவடிக்கைக்கு முடிவெடுக்கவில்லை என்னும் ஒபாமாவின் கூற்று ஒரு அபத்தமான பொய்யாகும். வாஷிங்டன், ஓராண்டிற்கும் மேலாக அசாத் அகற்றப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது; CIA மிகப்பெரிய அளவில் அவருடைய ஆட்சியை எதிர்க்கும் அல்குவேடா பிணைப்புடைய இஸ்லாமியவாத எதிர்ப்பு போராளிகளுக்கு ஆயுதங்களை அளித்துள்ளது.

NBC இடம் ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி, நேற்று ஒபாமாவை முரண்படுத்திப் பேசி, சிரியத் தலையீட்டிற்கான அமெரிக்க நடவடிக்கைகள் “இனித்திரும்புவதற்கில்லை என்னும் கட்டத்தை அடைந்துவிட்டது”, சில நாட்களில் தாக்குதல்கள் தொடங்கும் என்றார்.

ஒபாமா, அமெரிக்க அரசியலமைப்பை மீறும் வகையில், காங்கிரஸில் வாக்கெடுப்பு இல்லாமலேயே போரைத் தொடக்கும் முயற்சியிலும் எதிர்ப்பை முகங்கொடுக்கிறார். 111 மன்றத்தின் சட்டமியற்றுபவர்கள், 94 குடியரசுக் கட்சியினர், 17 ஜனநாயகக் கட்சியினர் கையெழுத்திட்டுள்ள ஒரு மனுவில் இது “அதிகாரப் பிரிவினைக் கோட்பாட்டை” மீறுவதாகும் என எச்சரித்துள்ளனர். அந்த மனு காங்கிரஸ் மறுபடியும் கூட்டப்பட வேண்டும் என்றும், அதையொட்டி அது போரை ஆதரிக்க முடியும் என்றும் “சிரிய மோதலில் அமெரிக்க ஈடுபாட்டை விரைவுபடுத்துவதற்கான முடிவுகளின் சுமையை பகிர்ந்து கொள்ள முடியும்” என்றும் கூறுகிறது.

மேலும், பிரித்தானிய பாராளுமன்றம் நேற்று சிரியாவுடன் போருக்கான வரைவை இயற்றுவதில் தோல்வியடைந்தது. இந்த வரைவு இன்று பாராளுமன்றத்திற்கு வாக்கெடுப்பிற்காக அனுப்பப்பட வேண்டும், பின்னர் மீண்டும் அது தோற்றால் அடுத்த செவ்வாயன்று பழையபடி வரும். ஒரு தொழிற் கட்சி ஆதாரம் கார்டியனிடம் கூறியது: “நாங்கள் இந்த தீர்மானத்தை ஜாக்கிரதையாக ஆராய்வோம், ஆனால் பிற்பகல் 5.15 க்கு [பிரித்தானிய பிரதம மந்திரி] டேவிட் காமெரோன் இன்று இரண்டாம் வாக்கு தேவையில்லை என, ஒன்றரை மணி நேரத்தில் அவர் மனத்தை மாற்றிக் கொண்டு விட்டார்.”

தொழிற் கட்சி, சிரியாவிற்கு எதிரான ஆக்கிரமிப்பு போருக்கு ஓர் அத்தி இலை மறைப்பை அளிக்க அழுத்தம் கொடுக்கிறது. பிரித்தானிய அரசாங்கம், ஐ.நா. ஆயுதங்கள் ஆய்வாளர்கள் கூத்தாவில் தங்கள் விசாரணையை முடிக்க மற்றும் ஐ.நா. பாதுகாப்புக் குழுவிற்குத் தங்கள் கண்டுபிடிப்புக்களை கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்ற திருத்தத்திற்கு ஆதரவளிக்கிறது. திருத்தம் கூறுகிறது: “ஐ.நா. பாதுகாப்புக் குழுவிற்கு உடனடியாக எடுத்துரைத்தல், அது மற்றும் ஒவ்வொரு நடவடிக்கையும், பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் ஒன்று இராணுவத் தலையீட்டிற்கு ஆதரவு கொடுத்தலை பெறுவதற்கு, அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுமுன் பரிசீலிப்பதற்கு உடனடியாக வாய்ப்பு இருக்க வேண்டும்.”

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இத்தகைய பொறுப்பற்ற, செல்வாக்கற்ற கொள்கைகளில் இறங்குகின்றன என்ற உண்மை—முதலில் அசாத்திற்கு எதிரான இஸ்லாமியவாத எதிர்ப்புப் போராளிகளுக்கு ஆயுதம் கொடுத்தல், பின் சட்ட விரோதமாக சிரியாவை தாக்க முற்படுதல் என்று—அவை பொதுமக்கள் கருத்தை பொருட்படுத்தவில்லை என்ற உண்மைக்குத்தான் நிரூபணம் ஆகும். அவற்றின் பலமுறை கூறப்பட்ட ஆத்திரமுட்டும் அறிக்கைகளால், ஒபாமாவும் காமெரோனும் தங்கள் அரசியல் அதிகாரத்தை இப்போரில் பணயம் வைத்துள்ளனர். மக்களிடையே இதற்கு ஆதரவு இல்லாவிடினும், சர்வதேச அழுத்தங்கள் எதிராகப் பெருகினாலும், எப்படியும் இதை நடத்த அவர்கள் முற்படுவர்.

இந்த வாரம் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜீ லாவ்ரோவ், வாஷிங்டனிடம் அசாத் படைகள் சிரியக் குடிமக்களை கூத்தாவில் நரம்பு எரிவாயு மூலம் தாக்கின என்ற குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் ஏதும் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். “அவர்களால் ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை, ஆனால் மீண்டும் மீண்டும் “சிவப்புக் கோடு” கடக்கப்பட்டு விட்டது, இனி அவர்கள் பொறுத்திருக்க முடியாது எனக் கூறுகின்றனர்” என்றார். மேலும் “ஐ.நா.பாதுகாப்புக் குழு அனுமதி இல்லாமல் வலிமையைப் பயன்படுத்துவது சர்வதேசச் சட்டத்தை கொச்சைப்படுத்தி மீறுவதாகும்” என்றும் சுட்டிக் காட்டினார்.

ஐ.நா.வின் நம்பகத்தன்மையை ஒபாமா நிர்வாகம் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, ஐ.நா. ஆய்வாளர்கள் கூத்தாவில் விசாரணை நடத்தும் முன்னரே அழுத்தம் கொடுக்கிறது என்ற கவலையை கொண்ட ஐ.நா. தலைமைச் செயலர் பான் கி-மூன்: “குழுவிற்குத் தன் வேலையைச் செய்ய அவகாசம் தேவை. அமைதிக்கு வாய்ப்பு கொடுங்கள்; இராஜதந்திர முறைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், சண்டையை நிறுத்தங்கள், பேச்சை தொடங்குங்கள்.” என நேற்று வாதிட்டார்.

ஆனால் ஒபாமா நிர்வாகத்தின் அதிகாரிகள் ஐ.நா.விடம் ஆய்வாளர்களை திரும்பப் பெறுமாறு கூறினர். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கருத்துப்படி, நிர்வாகம் பானிடம் ஐ.நா. ஆய்வாளர்களின் சிரிய முயற்சி “பொருளற்றது” என்றனர். புதன் அன்று CNN “அமெரிக்க அதிகாரிகள் கிட்டத்தட்ட சிரியாவில் உள்ள ஐ.நா. ஆய்வாளர்களிடம் பாதையை விட்டு அகலுக என்று கூறுகின்றனர்.” எனத் தகவல் கொடுத்துள்ளது.

வாஷிங்டனுக்கு கூத்தாவில் என் நடந்தது என்பது பற்றிய உண்மையை தெளிவாக அறிய விரும்பவில்லை. இரசாயன ஆயுதங்கள் நிகழ்வே அமெரிக்க உளவுத்துறையால் தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம்; இச்செயல் போருக்கு ஒரு போலிக்காரணத்தை அளிக்கும் நோக்கத்தைக் கொண்டது. இம்மாத நடுவில் இருந்து இரசாயனத் தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகே உள்ள பகுதிகள் CIA பயிற்சி பெற்ற போராளிகள், அமெரிக்கா, இஸ்ரேல், ஜோர்டானியக் கமாண்டோக்கள் தலைமையில் நிறைந்துள்ளன.
அமெரிக்க ஆதரவுடைய எழுச்சியாளர்கள்தான் சிரியாவில் பிற இரசாயன ஆயுத தாக்குதல்களுக்கு பொறுப்பு என முந்தைய ஐ.நா. விசாரணைகள் கண்டறிந்தன.

அரச மற்றும் செய்தி ஊடகப் பிரச்சாரங்கள், அமெரிக்கத் தாக்குதல் திட்டங்கள் அசாத் சர்வதேச சட்டத்தை மீறியதற்கு குறைந்தபட்ச விடையிறுப்பு என்று கூறுகின்றது. இக்கூற்றுக்கள், கடமையுணர்வுடன் அப்படியே அரச கட்டுப்பாட்டு செய்தி ஊடகத்தால் அளிக்கப்படுகின்றன—இவை பொதுமக்களை நோக்குநிலை தவறச் செய்யும் பொய்கள் ஆகும். அசாத்தை திட்டமிட்டுக் கொல்லுதல் அவருடைய இராணுவத்தை முடக்குதல் என்பது அமெரிக்கத் தாக்குதல்களின் இலக்கு ஆகும்; இது அதிகார சமநிலையை மாற்றும்.

அமெரிக்கத் தாக்குதல் சிரிய ஆட்சியின் இராணுவத்திறனை அழிக்க கவனத்துடன் தயாரிக்கப்பட்ட திட்டத்தை அடிப்படையாக கொண்டது. CNN இன் கருத்துப்படி, “ஏவுகணைகள், இரசாயன ஆயுதங்கள் சேமிப்புக் கிடங்கை இலக்கு கொள்ளும் என்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.” உண்மையில் தாக்குதல்கள் “இராணுவ கட்டளை பதுங்கு குழிகள்” மற்றும் விமானத் தளங்களுக்கு எதிராகத்தான் திட்டமிடப்படுகின்றன.

அமெரிக்கா இப்பிராந்தியத்தில் கணிசமாக படைகளை நகர்த்துகிறது; அவற்றில் ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக்கப்பல், நான்கு அழிக்கும் கப்பல்கள் மத்தியதரைக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளன, இரண்டு விமானத் தளங்களை கொண்ட கப்பல்கள் மேற்கு இந்தியப் பெருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ளன. பிரித்தானிய போர்த் தாக்குதல் விமானங்கள் மற்றும் கருவிகள் என அருகே இருக்கும் சைப்ரஸில் இருப்பதுடன் சேர்த்தால் இவை அனைத்தும் செய்தி ஊடகத்தின் கூற்றான சிரியப் போர் ஒரு குறைந்த தன்மையை கொண்டது என்பது பொய்கள் என்பதைத் தெளிவாக்கும். அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்லும் பேரழிவுத் தாக்குதல்களை தயாரிக்கின்றன, அவை சிரியாவின் உள்கட்டமைப்பை அழித்துவிடும்.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் தாக்குதல் இன்னும் பரந்த பிராந்திய, ஏன் உலகப் போரை கூட கட்டவிழ்த்துவிடும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. அமெரிக்கப் பருந்துகளும் இராணுவத் திட்டம் இயற்றுபவர்களும், சிரியாவில் “ஆட்சி மாற்றத்திற்கு” ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அழுத்தம் கொடுக்கின்றனர்; இது அமெரிக்க ஏகாதிபத்தியம் பிராந்தியத்தில் அதன் முக்கிய இலக்கான ஈரானைத் தாக்குவதற்கு வழி அமைத்துக் கொடுத்து, ரஷ்யா, சீனாவுடன் அமெரிக்க மோதலுக்கு அரங்கு அமைக்கும்.
இப்போர் அச்சுறுத்தல்களுக்கு விடையளிக்கும் வகையில், இஸ்ரேலுக்கு எதிராக பதிலடி தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் அராக்சி கூறினார்: “நாம் சிரியாவிற்கு எதிரான எந்த இராணுவத் தாக்குதலுக்கு எதிராகவும் கடுமையாக எச்சரிக்கிறோம்.

இதையொட்டி பிராந்தியத்தில் பேராபத்து விளைவுகள் உறுதியாக ஏற்படும். இந்த சிக்கல்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் சிரியாவுடன் நின்றுவிடாது. இது முழுப் பிராந்தியத்தையும் சூழ்ந்து கொள்ளும்.”

புதன் அன்று ஈரானிடத்தில் இருந்து வந்த அறிக்கைகளுக்கு விடையிறுப்பு என்ற வகையில், இஸ்ரேல் ரிசர்வ் படைகளைத் திரட்டி அதன் ஏவுகணை பாதுகாப்புக்களையும் ஊக்கப்படுத்தியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com